Obesity and Cancer : அச்சச்சோ லிஸ்ட் ரொம்ப பெருசா இருக்கே? உடல் பருமன் இத்தனை புற்றுநோய்களுக்கு காரணமா? – ஷாக் ஆய்வு!
Jan 24, 2024, 01:32 PM IST
உடல் பருமன் அதிகமாக உள்ளவர்களுக்கு புற்றுநோய் தாக்கம் அதிகமுள்ளது தெளிவாக ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது.
ஆனால் புற்றுநோய்கள் அதிகம் ஏற்பட உடல்பருமன் தான் காரணமா? (Causal relationship) என ஆய்வுகள் நடந்து வருகையில், அதற்கு வாய்ப்புகள் நிறைய உள்ளன என்றே சமீபத்திய ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
Body Mass Index-BMI-25-29 என இருந்தால் அது கூடுதல் எடை (Overweight) என்றும், 30, அதற்கு மேல் இருந்தால் அது உடல் பருமன் அதிகரித்து தொந்தி (Obesity) உள்ளதாகவும் மருத்துவ ஏடுகளில் வரையறுக்கப்பட்டுள்ளது.
Obesityயுடன் தொடர்புடைய புற்றுநோய்கள்
Endometrial (கர்ப்பப்பை),
உணவுக்குழல் - Oesophagus-adenocarcinoma,
இரைப்பை (Gastric cardia)
ஈரல்
சிறுநீரகம்
மல்டிபிள் மயலோமா (எலும்பு மஜ்ஜை புற்றுநோய்),
கணையம்,
பெருங்குடல் அல்லது மலக்குடல்,
பித்தப்பை (Gallbladder)
மார்பக புற்றுநோய்
முட்டை உருவாகும் பை (Ovary)
தைராய்டு (Thyroid)
போன்ற புற்றுநோய்கள் அதிகம் ஏற்படுகின்றன.
அமெரிக்காவில் 2011-15 இடைப்பட்ட காலத்தில் செய்த ஆய்வில் உடல் பருமன் அதிகம் இருந்து தொந்தி இருப்பதே ஆண்களுக்கு 4.7 சதவீதம் புற்றுநோய்களையும், பெண்களுக்கு 9.6 சதவீதம் புற்றுநோய் பாதிப்புகளையும் ஏற்படுத்துவது தெரியவந்துள்ளது.
மற்றொரு ஆய்வில் ஆண்கள் மத்தியில் 14 சதவீதம் புற்றுநோய் இறப்புகளுக்கும், பெண்கள் மத்தியில் 20 சதவீதம் புற்றுநோய் இறப்புகளுக்கும் Obesity காரணம் என தெரியவந்துள்ளது.
உடல் பருமன் அதிகரிப்பால் புற்றுநோய் எவ்வாறு ஏற்படுகிறது?
கொழுப்பு உடம்பில் அதிகம் இருந்தால், ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் அளவு உடம்பில் அதிகமாகிறது. அதிக ஈஸ்ட்ரோஜன் இருப்பது, மார்பக, கர்ப்பப்பை, முட்டை உருவாகும் பைகளில் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பை அதிகப்படுத்துகிறது.
உடல் பருமன் அதிகமானால், இன்சுலின் போன்ற வளர்ச்சியை ஏற்படுத்தும் காரணிகள் (Insulin like growth factors-IGF 1) போன்றவை ரத்தத்தில் அதிகம் உள்ளது. இவை செல்களின் வளர்ச்சியில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது.
இதனால் பெருங்குடல், சிறுநீரகம், கணையம், கர்ப்பப்பை புற்றுநோய்கள் அதிகம் ஏற்படுகின்றன.
கொழுப்பு அதிகம் இருந்தால் பித்தப்பை கற்கள், மது இல்லாமல் ஏற்படும் ஈரல் பாதிப்பு (Non-alcoholic fatty liver) ஏற்பட்டு அவை உடம்பிற்கு Oxidative Stressஐ கொடுகின்றன. அது மூலக்கூறுகளை (DNA) பாதிக்கிறது. அதனால் ஈரல் மற்றும் பிற உறுப்புகளில் புற்றுநோய் பாதிப்பு ஏற்படுகிறது.
கொழுப்பு அதிகம் இருந்தால் அடிப்போகைன்ஸ் (Adipokines) எனும் ஹார்மோன் அதிகம் உற்பத்தியாகிறது. அதில் ஒரு வகையான லெப்டின் (Leptin) உடம்பில் அதிகமானால், அது செல்களின் வளர்ச்சியில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி புற்றுநோய் உண்டாகும் வாய்ப்பை அதிகமாக்குகிறது. மேலும், அடிப்போநெக்டின் எனும் ஹார்மோன் அளவு அதிக கொழுப்பால் குறைகிறது. அடிப்போநெக்டின் செல்களின் வளர்ச்சியை கட்டுப்படுத்தி புற்றுநோய் வாய்ப்பை குறைக்கிறது.
கொழுப்பு அதிகமானால் உடம்பின் கடிகாரமான பகல்-இரவு மாற்ற சுழற்சியில் (Circadian rhythym) மாற்றங்கள் நிகழ்வதால் பாதிப்பு ஏற்படுகிறது.
அதிக கொழுப்பால் நமது குடலில் நன்மை பயக்கும் கிருமிகளில் மாற்றம் (Gut Microbiome) ஏற்பட்டுபாதிப்பு ஏற்படுகிறது.
கொழுப்பு அதிகமானால் கட்டிகள் உருவாகுதலைத் தடுக்கும் நோய் எதிர்ப்பு சக்தி பாதிக்கப்படுகிறது. (Impaired tumor Immunity)
கொழுப்பு அதிகமானால் உறுப்புகளைச் சுற்றியுள்ள கொழுப்பில் மாற்றம் ஏற்பட்டு பாதிப்பு ஏற்படுவது மற்றும் Protein kinase வேதிப்பொருட்களில் நிகழும் மாற்றம் காரணமாக பாதிப்பு ஏற்படுகிறது.
கொழுப்பு சமிக்ஞையில் (Lipid signalling) ஏற்படும் மாற்றங்கள், அழற்சியை தூண்டும் (Inflammatory response) மாற்றங்கள் நிகழ்வதால் பாதிப்புகள் ஏற்படுகிறது.
Mammalian target of Rapamycin (mToR) செல் இணைப்பான்களில் (Cell receptors), அதிக கொழுப்பால் ஏற்படும் பாதிப்பு போன்றவை முக்கிய செய்திகளாக அறிவியல் ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.
முக்கிய அறிவியல் ஆதாரம்
உடல் எடை அதிகம் உள்ளவர்கள் எடையை குறைப்பதால் புற்றுநோய் பாதிப்பின் தாக்கம் 5 சதவீதம் குறைந்துள்ளதும் ஆய்வுகளில் உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
அதிக உடல் பருமனால், எடையைத் தாங்கும் மூட்டுகளில் தேய்மானம் ஏற்பட்டு (Arthritis) எளிதில் சாரியாகாத மூட்டுவலியும் (உடம்பு எடையைக் குறைப்பது மூட்டு தேய்மானம் பாதிப்பை குறைக்கும்) ஏற்பட்டு மக்களின் நகர்வும் (Mobility) பாதிக்கப்படுகிறது.
எனவே இவற்றையெல்லாம் கருத்தில்கொண்டு, உடல்பருமனை குறைத்து சீரான அளவில் வைத்துக்கொள்வது அனைவருக்கும் நன்மை பயக்கும்.
நன்றி – மருத்துவர் புகழேந்தி.
டாபிக்ஸ்