Mini Paratha : சாப்பிட்டுக்கொண்டே இருக்க தூண்டும் சுவை! ஊறையே கூட்டும் மணம்! புதினா பராத்தா!
Oct 31, 2023, 05:30 PM IST
சாப்பிட்டுக்கொண்டே இருக்க தூண்டும் சுவை. ஊறையே கூட்டும் மணம். புதினா பராத்தா செய்வது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்
கோதுமை மாவு - 2 கப்
புதினா இலை – கைப்பிடி
ஓமம் – ஒரு ஸ்பூன்
உப்பு – அரை ஸ்பூன்
எண்ணெய் - 2 ஸ்பூன்
காய்ச்சி ஆறவைத்த பால் - கால் கப் (விரும்பினால்)
நெய் – தேவையான அளவு
மசாலா தூள் செய்ய தேவையான பொருட்கள்
உப்பு – தேவையான அளவு
மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்
காஷ்மீரி மிளகாய் தூள் – ஒரு ஸ்பூன்
தனியா தூள் – ஒரு ஸ்பூன்
சீரகத்தூள் – அரை ஸ்பூன்
கரம் மசாலா தூள் – கால் ஸ்பூன்
சாட் மசாலா தூள் – அரை ஸ்பூன்
செய்முறை
ஒரு பெரிய கிண்ணத்தில் கோதுமை மாவு, புதினா இலைகள், நசுக்கிய ஓம விதைகள், உப்பு ஆகியவற்றை எடுத்து நன்கு கலந்துகொள்ள வேண்டும்.
எண்ணெய் சேர்த்து மீண்டும் அனைத்தையும் கலந்து, காய்ச்சி ஆறிய பால் சேர்த்து மீண்டும் கலந்து, தண்ணீர் சேர்த்து மாவை தயார் சப்பாத்தி பதத்துக்கு தயார் செய்ய வேண்டும்.
5 நிமிடங்கள் மாவை பிசைந்து கொள்ள வேண்டும். ஒரு மூடி கொண்டு கிண்ணத்தை மூடி சுமார் 30 நிமிடங்கள் மாவை ஊறவிடவேண்டும்.
கடாயை சூடாக்கி அதில் கொஞ்சம் புதினா இலைகளை சேர்த்து, மிதமான தீயில் வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும். வறுத்த புதினா இலைகளை ஆறியபின் நசுக்கி தனியாக வைத்துக்கொள்ள வேண்டும்.
மசாலா தூள் கலவைக்கு, உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், சீரக தூள், மல்லி தூள், கரம் மசாலா தூள், சாட் மசாலா தூள் ஆகியவற்றை ஒரு பாத்திரத்தில் எடுத்து நன்றாக கலந்து அதையும் தனியாக வைத்துக்கொள்ள வேண்டும்.
இப்போது மாவை சம அளவு உருண்டைகளாகப் பிரித்துக்கொள்ளவேண்டும். அவற்றை மெல்லியதாகவும், அழகாகவும் உருட்டிக்கொள்ள வேண்டும். மேலே சிறிது நெய் தடவி, தயாரிக்கப்பட்ட மசாலாப் பொடி, பொடித்து வைத்துள்ள புதினா இலைகளுடன் சேர்த்து உருட்டிக்கொள்ளவேண்டும்.
சப்பாத்தி கட்டையில் வைத்து தேய்த்து எடுக்க வேண்டும். மாவை நான்காக மடித்து தேய்த்து எடுக்க வேண்டும். நடுத்தர தடிமன் உள்ளதா என்பதை உறுதிப்படுத்தி, இதேபோல் அனைத்து பராத்தாக்களையும் தயார் செய்து தனியாக வைத்துக்கொள்ள வேண்டும்.
ஒரு கடாயை சூடாக்கி, உருட்டிய பராட்டாவை போட்டு, பழுப்பு நிற புள்ளிகள் தோன்ற ஆரம்பித்த பின்னர், அதை இருபுறமும் திருப்பி, சிறிது நெய்யை இருபுறமும் தடவவேண்டும்.
பராத்தா நன்றாக வெந்தவுடன், அவற்றை பானில் இருந்து எடுத்துவிடவேண்டும்.
சுவையான மற்றும் மெல்லிய புதினா பராத்தாக்கள் ஊறுகாய், வெங்காய ரைத்தா, பூந்தி ரைத்தாவுடன் சூடாக பரிமாற சுவை அள்ளும்.
புதினாவுக்கு தனி மணம் உண்டு அது இந்த சப்பாத்தியின் மணத்தை கூட்டும். இதில் கூடுதலாக சேர்த்துள்ள மசாலாக்களும், பராத்தாவின் சுவையை அதிகரிக்கச்செய்யும். இதை மதிய உணவு அல்லது இரவு உணவுக்கு செய்து சாப்பிடலாம். இதற்கு வேறு கிரேவிகள் எதுவும் தொட்டுக்கொள்ள தேவைப்படாது.
நன்றி – ஹேமா சுப்ரமணியன்.