Milagu Kulambu : மணமணக்கும் மிளகுக் குழம்பு! சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிட்டால், சொர்க்கம்!
Sep 11, 2023, 03:43 PM IST
Milagu Kuzhambu : மணமணக்கும் மிளகு குழம்பு, பூண்டு மிளகு குழம்பு, கத்தரி, முருங்கை மிளகு குழம்பு என மிளகு குழம்பில் இத்தனை வகை உள்ளதா? அதை இத்தனை முறைகளில் செய்ய முடியுமா? விரிவான விவரங்கள்.
தேவையான பொருட்கள்
மிளகு - 50 கிராம்
தாளிக்க தேவையான பொருட்கள்
வரமிளகாய் - 4,
உளுத்தம் பருப்பு அல்லது மல்லி – 4 ஸ்பூன்
சீரகம் – 4 ஸ்பூன்
கடுகு - 1 ஸ்பூன்,
கறிவேப்பிலை – ஒரு கொத்து
பெருங்காயம் – சிறிதளவு
எண்ணெய் – தேவையான அளவு
புளி - எலுமிச்சை அளவு,
மஞ்சள் தூள் – அரை ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
செய்முறை –
கடாயில் எண்ணெயை சூடாக்கி, மிளகோடு தாளிக்கும் பொருட்கள் கடுகு தவிர அனைத்தும் சேர்த்து அதை நன்கு வறுக்க வேண்டும்.
வறுத்ததை நன்கு ஆற விட்டு மிக்ஸியில் போட்டு அதோடு புளியை அப்படியே சேர்த்து 2 டம்ளர் நீர் விட்டு அனைத்தையும் மைபோல அரைத்துக் கொள்ளவேண்டும்.
மீண்டும் கடாயில் எண்ணெய் சூடாக்கி, கடுகு தாளித்து, அதில் அரைத்த மசாலாவை சேர்த்து மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு போட்டு கிளறவேண்டும்.
இதை நன்கு கொதிக்கவிடவேண்டும். குழம்பு திக்காகி அதில் உள்ள எண்ணெய் பிரிந்து வரும்போது குழம்பை இறக்கிவிட வேண்டும். ருசியான, மணக்கும் மிளகுக் குழம்பு சாப்பிட தயாராக உள்ளது. இதை சூடான சோற்றில் மட்டுமே பிசைந்து சாப்பிட வேண்டும்.
அப்பள வகைகள், வடகங்கள், காரமில்லாத கூட்டு, பொரியல், அவியல் போன்றவை இதற்கு தொட்டுக் கொள்ள மிக அருமையாக இருக்கும்.
மிளகு பூண்டுக் குழம்பு
குழம்பு பாதி கொதி வரும்போது 15 பூண்டு பற்களை தனியாக எண்ணெயில் வதக்கிச் சேர்த்து நன்றாக கொதிக்க விட்டு சமைத்தால் மிளகு பூண்டு குழம்பு ரெடி.
பூண்டுக்கு பதில் கத்திரிக்காய் அல்லது முருங்கையும் நன்கு வதக்கி இதில் சேர்த்தால் மிளகு கத்திரி/முருங்கைக் குழம்பு தயார்.
குறிப்புகள்
உளுந்து சேர்த்தால் மல்லி மற்றும் சீரகம் இரண்டும் சேர்க்கத் தேவையில்லை.
வறுக்கும்போது முதலில் பெருங்காயம் பிறகு மல்லி, சீரகம் (அ) உளுந்து, வரமிளகாய், கடைசியாக மிளகு, கறிவேப்பிலை, இந்த வரிசையில் தான் வறுக்க வேண்டும்.
மல்லி, சீரகம் சேர்த்தால் வறுத்ததை அரைக்கும்போது புளியைக் கரைத்து கரைசலாக சேர்க்கவும்.
உளுந்து சேர்த்தால் வறுக்கும்போது மிளகு வெடித்து பொரியும் போது புளியையும் சேர்த்து வறுக்கலாம் அப்படி வறுப்பது தான் மிக ருசியாக இருக்கும்.
மிக்ஸியில் அரைக்கும் போது விட்ட 2 டம்ளர் நீரே போதும் அதிக நீர் சேர்க்கக் கூடாது.
மல்லி சீரகம் சேர்த்து ஒருமுறை, உளுத்தம் பருப்போடு ஒருமுறை செய்து பாருங்கள்.
இந்தக் குழம்பே தயிர் சாதத்திற்கு ரகளையான ஜோடியாகும். மிளகு பூண்டு குழம்பு எனில் நெய் விட்டு பிசைந்த பருப்பு சாதத்திற்கு தொட்டுக் கொள்ளவும் ருசியில் சொக்கிவிடுவீர்கள்.
நன்றி – வெங்கடேஷ் ஆறுமுகம், ஷ்யாம் ப்ரேம்.
டாபிக்ஸ்