Kambu Laddu: சத்தான கம்பு லட்டு.. குழந்தைகளுக்கு இப்படி செய்து கொடுங்க!
Feb 08, 2024, 07:30 AM IST
தினமும் நம் உணவில் கம்பை சேர்த்து கொள்வது பல நன்மைகளை தரும். இது உங்கள் குழந்தைகளுக்கு புரதம் உள்ளிட்ட பல சத்துக்களை வழங்க கூடியது. இப்போது கம்பு லட்டு செய்வது எப்படி என பார்க்கலாம்.
பொதுவாக சிறு தானியங்களை உணவில் சேர்த்து கொள்வது நல்லது. அதில் அதிக நம்மை தருவது கம்பு. தினமும் நம் உணவில் கம்பை சேர்த்து கொள்வது பல நன்மைகளை தரும். இது உங்கள் குழந்தைகளுக்கு புரதம் உள்ளிட்ட பல சத்துக்களை வழங்க கூடியது. இப்போது கம்பு லட்டு செய்வது எப்படி என பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
கம்பு
நிலக்கடலை
நெய்
முந்திரி
ஏலக்காய்
வெல்லம்
செய்முறை
அடுப்பில் ஒரு கடாயை வைத்து ஒரு கப் கம்பை நன்றாக வறுக்க வேண்டும். கம்பு நிறம் மாறி பொரிய ஆரம்பிக்கும். அப்போது கம்பை ஒரு பிளேட்டில் கொட்டி ஆற விட வேண்டும்.
பின்னர் அதே கடாயில் அரை கப் நிலக்கடலையை போட்டு நன்றாக வறுக்க வேண்டும். அதையும் தனியாக ஆற விட வேண்டும்.
ஒரு மிக்ஸி ஜாரில் கம்பு மற்றும் 3 ஏலக்காயை சேர்த்து நன்றாக பொடி செய்ய வேண்டும். பின்னர் கம்பு பொடியை தனியாக ஒரு பாத்திரத்தில் எடுத்து கொள்ள வேண்டும். அதே மிக்ஸி ஜாரில் நிலக்கடலையை சேர்த்து ஒன்றிரண்டாக அரைத்து கொள்ள வேண்டும். பின்னர் ஒரு கப் வெல்லத்தை தட்டி அதையும் மிக்ஸி ஜாரில் சேர்த்து பொடி செய்து எடுத்து கொள்ள வேண்டும்.
பின்னர் கடாயை அடுப்பில் வைத்து அதில் நெய் விட்டு அதில் முந்திரியை சேர்து வறுத்து கொள்ள வேண்டும். பின்னர் அடுப்பை அணைத்து விட்டு கம்பு பவுடர், நிலக்கடலை, வெல்லம் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து வேண்டும். பின்னர் மிதமான சூட்டில் உருண்டை பிடித்து கொள்ள வேண்டும். அவ்வளவு தான் ருசியான கம்பு உருண்டை ரெடி. ஒரு வாரம் ஆனாலும் கெடாது. குழந்தைகளுக்கு தினமும் இரண்டு உருண்டை கொடுத்தால் மிகவும் சத்தானது.
கம்பின் நன்மைகள்
கம்பு நீரிழிவு நோய்க்கு சிறந்தது. கம்பில் கார்போஹைட்ரேட் சத்துக்கள் நிறைந்துள்ளன. அவை பொறுமையான செரிமானம் நடைபெற உதவுகிறது. இதனால் குளுக்கோஸை நீண்ட நாட்களுக்கு சரியான அளவில் பராமரிக்கிறது. எனவே கம்பு நீரிழிவு நோயாளிகளுக்கு ஒரு சிறந்த தேர்வாக உள்ளது.
இதய ஆரோக்கியத்துக்கு நல்லது – இதில் உள்ள நார்ச்சத்துக்கள் மற்றும் கொழுப்பை குறைக்கும் பொருட்கள், இதய நோயாளிகளுக்கு சிறந்தது.
சிலியாக் நோய்கள் எனப்படும் குளுட்டன் அழற்சி மற்றும் குளுட்டன் ஏற்றுக்கொள்ளாமைக்கு சிறந்தது – இது குளுட்டன் ஃப்ரியாக இருப்பதால் இதை எல்லோருக்கும் பொருந்துகிறது.
அல்சர் மற்றும் அசிடிட்டிக்கு மருந்தாகிறது – வயிற்றில் உள்ள அசிடிட்டியை போக்குகிறது. இதனால் அல்சர் ஏற்படாமல் தவிர்க்கப்படுகிறது.
மலச்சிக்கலை போக்குகிறது – சிறந்த குடல் ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகிறது. இதை அவ்வப்போது எடுத்துக்கொள்வதால் மலச்சிக்கல் நீங்குகிறது. அதற்கு காரணம் இது நார்ச்சத்து நிறைந்த உணவாக உள்ளது.
ரத்த அழுத்தத்தை குறைக்கிறது – கம்பில் பொட்டாசியச்சத்துக்கள் நிறைந்துள்ளன. அவை உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு சிறந்தது. பொட்டாசியச்சத்து நிறைந்த உணவை உட்கொள்வது உங்கள் உடலில் அதிகப்படியாக உள்ள சோடியச்சத்துக்களை வெளியேற்ற உதவுகிறது. இதனால் ரத்த அழுத்தம் குறைகிறது.
எலும்பை வலுவாக்குகிறது – கம்பில் உள்ள அதிக பாஸ்பரஸ் சத்து உங்கள் உடலில் உள்ள எலும்பை இரும்பாக்குகிறது.
கொழுப்பை குறைக்கிறது – கம்பில் போதிய அளவு கொழுப்புச்சத்து உள்ளது. இது அதிக கொழுப்பு உள்ள நோயாளிகளுக்கு நல்லது.
ஊட்டச்சத்து நிறைந்த குழந்தை உணவு – கம்பு எளிதில் செரிமானமாகக்கூடிய ஒரு சிறு தானியம். எனவே குழந்தைகளுக்கும் எளிதாக செரித்துவிடக்கூடியது என்பதால், குழந்தைகள் உணவில் அதிகம் சேர்க்கப்படுகிறது.
ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்தது – உடலில் செல்கள் இழப்பை தடுக்கிறது. விரைவில் வயோதிக தோற்றம் ஏற்படுவது தவிர்க்கப்படுகிறது. அல்சைமர்ஸ், பார்க்கின்சன்ஸ் மற்றும் இதய நோய்கள் வராமல் தடுக்கிறது. காயங்களை விரைந்து குணமாக்குகிறது. உடல் எடையை பராமரிக்கவும், பருமனை குறைக்கவும் உதவுகிறது.
டாபிக்ஸ்