International Day of Families : சர்வதேச குடும்பங்கள் தினம் – வரலாறு, கருப்பொருள், முக்கியத்துவம் என்னவென்று தெரியுமா?
May 15, 2024, 06:44 AM IST
International Day of Families : சர்வதேச குடும்பங்கள் தின வரலாறு, கருப்பொருள், முக்கியத்துவம் ஆகியவை குறித்து நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டியவை?
‘நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம்’, ‘குடும்பம் ஒரு கோயிலுன்னு சொன்னது உண்மதான்’, ‘நட்சத்திர ஜன்னலில் வானம் எட்டி பார்க்குது’, ‘எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை’, நேசங்கள், பாசங்கள் ஏதுமேயின்றி வாழ்ந்திடும் வாழ்க்கையே வாழ்க்கையில்லை’ என அந்த காலம் முதல் இந்த காலம் வரை தமிழ் சினிமாவின் குடும்ப பாடல்கள் மற்றும் குடும்ப படங்கள் நம்மை குடும்பத்தைவிட்டு, பிரிந்துடாமல் கட்டிப்போட்டு வைக்கிறது.
ஒரு குடும்பம் மட்டும் இல்லையென்றால் இந்த மனித இனம் எப்படி இருந்திருக்கும். இந்திய குடும்ப அமைப்பும், தமிழ் குடும்ப அமைப்பு முறைகளும் பெண்களுக்கும், அவர்களின் உரிமைக்கும் எதிரானவைதான் என்றாலும், இந்த குடும்ப அமைப்பு மட்டும் குலைந்துவிட்டால் என்னவாகும்? குடும்பம் பெண்களை சுரண்டும் இடம் என்று பெண்ணியவாதிகள் காலம் காலமாக கூறி வருவது நூற்றுக்கு நூறு சதவீதம் உண்மைதான் என்றாலும், குடும்பம் இல்லாவிட்டால் நாம் என்ன மாதிரியான ஒரு சமூகமாக இருந்திருப்போம்.
பெண்களுக்கும் சம உரிமையை வழங்கும் குடும்ப அமைப்பை நோக்கி நம்மை செல்லவிடாமல் தடுப்பது எது? வெளிநாட்டின் குடும்ப நிலைகள் மற்றும் குடும்ப அமைப்பு முறை எப்படியிருக்கும். உலகம் முழுவதும் குடும்பம் அமைப்பு பெண்ணை அடிமைப்படுத்துகிறதா? நாம் வளர்ந்த சமூகம் என்பதற்கான வெளிப்பாடாக நாம் குடும்ப அமைப்பில் செய்ய வேண்டிய மாற்றங்கள் என சிந்திக்கும்வேளையில் தான் நாம் சர்வதேச குடும்பங்கள் தினத்தை கொண்டாடுகிறோம்.
சர்வதேச குடும்பங்கள் தினம்
இந்த நாளை ஐக்கிய நாடுகள சபை 20 ஆண்டுகளுக்கு முன் அறிவித்தது. இது குடும்பமாக வாழ்வதன் முக்கியத்துவத்தை இந்தநாள் உலகம் முழுவதும் உள்ள சமூகங்களிடையே எடுத்துக்கூறுகிறது.
ஒருவர் வாழ்வில் குடும்பம் என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். குழந்தையாக இருந்தாலும், வளர்ந்தவராக இருந்தாலும் நமக்கென்று ஒரு குடும்பம் இருக்கும். குடும்பம்தான் நமது வாழ்வில் அடிப்படையான ஒன்று. ஆதரவான மற்றும் நல்ல குடும்ப உறுப்பினர்களை கொண்டவர்கள் கட்டாயம் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள். அந்த நபர்கள்தான் ஒருவரின் வாழ்க்கையை சிறப்பானதாக மாற்றுகிறார்கள்.
சர்வதேச குடும்பங்கள் தினம், 1994ம் ஆண்டு ஜக்கிய நாடுகள் சபையால் துவங்கப்பட்டது. இன்றைய நாளில், அனைத்து சமூகங்களின், உலகம் முழுவதும் உள்ள பல்வேறு குடும்பங்களின் முக்கியத்துவம் குறித்து பேசுகிறது. இந்தாண்டும் இந்த சர்வதேச குடும்பங்கள் தினம் உற்சாகமாகக்கொண்டாடப்படுகிறது.
சர்வதேச குடும்பங்கள் தினம் எப்போது கொண்டாடப்படுகிறது?
சர்வதேச குடும்பங்கள் தினம், குடும்பங்கள் ஒன்றுசேர்ந்து மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும் என்பதை வலியுறுத்தி, மே 15ம் தேதி ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகிறது. இந்தாண்டு இந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது.
இந்த நாளில் உங்கள் குடும்பத்தினருடன் சேர்ந்து என்ன கொண்டாடவேண்டும் என்று திட்டமிடுங்கள். வெளியில் செல்லுங்கள், இரவில் சினிமாவுக்கு செல்லுங்கள். விளையாடுங்கள், உங்களுக்கு பிடித்த விளையாட்டை அனைவரும் ஒன்றாக சேர்ந்து விளையாடுங்கள். ஆன்லைனில் குடும்பமாக சேர்ந்து நீங்கள் என்ன செய்யலாம் என்பது குறிப்பிடப்பட்டிருக்கும், அதை அனைவரும் விளையாடுங்கள்.
இந்தாண்டு சர்வதேச குடும்பங்கள் தினத்தின் கருப்பொருள் என்ன?
சர்வதேச குடும்பங்கள் தினம் குறிப்பிட்ட ஒரு கருப்பொருளைக் கொண்டு ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் அதன் அடிப்படையில்தான் கொண்டாடப்படுகிறது.
இந்தாண்டு சர்வதேச குடும்பங்கள் தினத்தின் கருப்பொருள் ’வேற்றுமையைக்கடந்து குடும்பங்களை வலுப்படுத்துவோம்’ என்பதாகும். பல்வேறு சமூகத்தினரின் குடும்ப பழக்கவழக்கங்களை கற்றுக்கொண்டு, குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அனைவருடனும் ஒரு பிணைப்பை உருவாக்க வேண்டும் என்பது இந்நாளின் நோக்கமாகும்.
எனவே சர்தேச குடும்ப நாளை கொண்டாடும் வேளையில் ஆண்-பெண் சமத்துவம் நிறைந்த குடும்பத்தை கட்டமைப்போம் என்று உறுதிகூறுவோம்.
டாபிக்ஸ்