Homemade Protein Powder: தசைகளை வலுப்படுத்தும் புரதம்! வீட்டிலேயே கலப்படமற்ற புரோட்டீன் பவுடர் - ஈஸியா செய்யலாம்
Aug 23, 2023, 07:47 PM IST
உங்கள் தசைகளை வலுப்படுத்தும் விதமாகவும், உடலுக்கு தேவைப்படும் ஊட்டச்சத்துகளின் ஒன்றான புரதத்தின் தேவையை பூர்த்தி செய்யவும் புரோடீன் பவுடரை எந்த கலப்படமும் இல்லாமல் வீட்டிலேயே எளிதாக செய்வது எப்படி என்பதை தெரிந்து கொள்ளலாம்.
உடலுக்கு தேவைப்படும் ஊட்டச்சத்துகளில் புரதம் மிகவும் முக்கியமானது. உடல் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கும் புரோடீன் என்கிற புரதசத்துக்கள் நாம் சாப்பிடும் உணவுகளின் மூலம் கிடைக்கிறது. சைவ உணவுகளான பீன்ஸ், பட்டாணி, பருப்பு வகைகளிலும், அசைவ உணவுகளில் சிக்கன், மீன் போன்றவற்றில் புரதம் அதிகம் நிறைந்துள்ளது.
உடலை பிட்டாக வைத்துக்கொள்ள உதவும் புரதத்தை சிலர் புரோடீன் பவுடர்கள் மூலமும் எடுத்துகொள்கிறார்கள். தசைகளை வலுப்படுத்தும் புரோடீன் பவுடர்கள், நாள்தோறும் உடலுக்கு தேவைப்படும் புரதம் அளவை ஈடுகட்டுகிறதா என்பதை உறுதியாக சொல்லமுடியாது. ஏனென்றால் நீங்கள் தேர்வு செய்யும் புரோட்டீன் பவுடர்களில் இடம்பெற்றிருக்கும் சேர்மானங்கள் பொறுத்தே அமைகிறது. அத்துடன் புரோடீன் பவுடர்கள் வேறு விதமான விளைவுகளையும் ஏற்படுத்தகூடும்.
உடலுக்கு தேவைப்படும் ஊட்டச்சத்துகளை தராமல் பக்க விளைவுகளையும் உருவாக்கி உடல் நலத்தில் பாதிப்பை ஏற்படுத்தலாம். எனவே உணவுகளை கடந்த புரோடீன் பவுடர் மூலம் தசைகளை வலுப்படுத்த முயற்சிப்பவர்கள் வீட்டிலேயே அதை எளிதாக எவ்வித கலப்படமும் இல்லாமல் இயற்கையான முறையில் தயார் செய்யலாம்.
வீட்டிலேயே ஆரோக்கியமான புரோடீன் பவுடர் தயார் செய்யும் முறையை பார்க்கலாம்
தேவையான பொருள்கள்
ஓட்ஸ் - 1 கப்
பாதாம் கொட்டைகள் - தேவைக்கு ஏற்ப
பூசணி அல்லது சூர்யகாந்தி விதை - அரை கப்
கடலை பருப்பு உள்பட உலர்ந்த பருப்பு வகைகள் - அரை கப்
உலர்ந்த தேங்காய் துண்டுகள் - அரை கப்
சியா அல்லது ஆளி விதைகள் - கால் கப்
கொக்கோ பவுடர் - 2 டேபிள் ஸ்பூன்
இலவங்கப்பட்டை - சிறிது அளவு
இனிப்பு சுவை பெறுவதற்கு தேன் அல்லது மேப்பிள் சிரப்
செய்முறை
மைக்ரோ ஓவனை 175 டிகிரி செல்சியஸில் சூடாக்கிவிட்டு, அதில் ஓட்ஸ், பாதாம், பருப்பு வகைகளை பேக்கிங் ஷீட்டில் வைத்து உள்ள வைக்க வேண்டும். 10 முதல் 15 நிமிடம் அல்லது அவை பொன்னிறமாகும் வரை வறுத்து எடுக்கவும். பின்னர் வறுப்பட்ட இந்த கலவை ஆறவைத்து, அதில் உலர்ந்த தேங்காய் துண்டுகள், சியா, ஆளி விதைகளை சேர்த்து நன்கு பிளெண்ட் செய்ய வேண்டும்.
அவ்வளவுதான் வீட்டிலேயே எந்த கலப்படமும் இல்லாமல் இயற்கையாக தயார் செய்த புரோடீன் பவுடர் ரெடி. இந்த மிக்ஸரை நன்கு வடிகட்டி, ஒரு கன்டெய்னரில் வைத்து காற்று புகாத வண்ணம் குளிர்ச்சியான, உலர்ந்த இடத்தில் வைக்க வேண்டும்.
வீட்டிலேயே தயார் செய்யப்பட்டிருக்கும் இந்த புரோடீன் பவுடரை வைத்து ஸ்மூத்திக்கள், ஷேக்குகள் செய்வதோடு, தயிர், ஓட் உணவு வகைகளுடன் சேர்த்து சாப்பிடலாம்.
நீங்கள் வீட்டிலேயே தயார் செய்யும் புரோடீன் பவுடர், கடைகளில் வாங்கும் பவுடரை காட்டிலும் நிறத்திலும், சுவையிலும் மாறுபடலாம். ஆனால் இதுதான் ஒரிஜினல் என்பதை மறக்க வேண்டாம்.
டாபிக்ஸ்