தித்திக்கும் தேங்காய் போளி! அசத்தலா செஞ்சு பாருங்க! இதோ மாஸ் ரெசிபி தயார்!
Nov 24, 2024, 09:31 AM IST
தேங்காய் போளி சாப்பிட இனி கடைகளுக்கு சென்று வாங்கத் தேவையில்லை. நாமே வீட்டில் சூப்பராக செய்யலாம். அதன் ஈஸியான செய்முறை இதோ.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பும் இனிப்பு பண்டங்களுக்கு என்றைக்கும் மவுசு குறையாது. இனிப்பை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். அதில் பாரம்பரிய ஒரு இனிப்பு பண்டம் தான் போளி, இதில் தேங்காய் போட்டு செய்யும் போது அருமையான சுவையை கொடுக்கும். இந்த தேங்காய் போளி சாப்பிட இனி கடைகளுக்கு சென்று வாங்கத் தேவையில்லை. நாமே வீட்டில் சூப்பராக செய்யலாம். அதன் ஈஸியான செய்முறை இதோ.
தேவையான பொருட்கள்
1 கப் மைதா மாவு
1 கப் துருவிய தேங்காய்
200 கிராம் வெல்லம்
1 டேபிள்ஸ்பூன் ஏலக்காய் தூள்
தேவையான அளவு உப்பு
தேவையான அளவு எண்ணெய்
தேவையான அளவு நெய்
செய்முறை
முதலில் ஒரு அகன்ற பாத்திரத்தை எடுத்து அதில் மைதா மாவு, 3 டேபிள்ஸ்பூன் நல்லெண்ணெய் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து அதை நன்கு கலந்து விடவும். பின்பு அந்த மாவில் சிறிது சிறிதாக தண்ணீர் ஊற்றி அதை மென்மையான மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும். பின்னர் மாவின் மீது நல்லெண்ணெய்யை தடவி அதை ஒரு பாத்திரத்தில் வைத்து ஒரு மூடி போட்டு ஊற வைக்கவும். இப்பொழுது ஒரு பாத்திரத்தை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் வெல்லத்தை கரைப்பதற்கு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அதில் தூள் செய்த வெல்லத்தை போட்டு கரைத்து விடவும். வெல்லம் கரைந்ததும் தனியாக எடுத்து வடிகட்டி வைத்துக் கொள்ளவும். அடுத்து ஒரு கடாயை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் நெய் சேர்த்து சூடாக்கவும். நெய் சூடானதம் அதில் துருவிய தேங்காயை போட்டு அதை நன்கு நெய்யுடன் கலந்து விட்டு வதக்கவும். பிறகு அதில் வடிகட்டி வைத்திருக்கும் வெல்லத்தை ஊற்றி அதை நன்கு கலந்து விட்டு அதனுடன் ஏலக்காய் தூளை சேர்த்து மீண்டும் நன்கு கலந்து விட்டு அதில் இருக்கும் தண்ணீர் நன்கு வற்றும் வரை அதை வதக்கவும்.
இந்த தண்ணீர் வற்றியதும் ஆற வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது ஊற வைத்திருக்கும் மாவை எடுத்து அதை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி ஒரு தட்டில் வைத்து கொள்ளவும். பின்பு ஒரு வாழை இலையை எடுத்து அதில் நன்கு எண்ணெய் தடவி உருட்டி வைத்திருக்கும் உருண்டைகளை அதில் வைத்து சப்பாத்திக்கு தேய்ப்பது போல் அதை தேய்க்கவும். பிறகு அதில் தேங்காய் பூரணத்தில் இருந்து சிறிதளவு எடுத்து அதன் நடுவில் வைத்து அதை அனைத்து புறங்களிலும் இருந்து மடித்து அதை மீண்டும் உருண்டையாக உருட்டவும்.அடுத்து அதை மீண்டும் தேய்த்து எடுத்து ஒரு தட்டில் வைத்து கொள்ளவும். பின்னர் ஒரு தோசை சட்டியை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி அதை சுட வைக்கவும். எண்ணெய் சுட்ட பின் அதில் தேய்த்து வைத்திருக்கும் மாவை அதில் போட்டு இரு புறமும் வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது சுவையான தேங்காய் போளி தயார். இதனை நீங்களும் உங்கள் வீடுகளில் ட்ரை செய்து பாருங்கள்.
டாபிக்ஸ்