சத்தான வெண்டைக்காய் ஸ்பாஞ்ச் தோசை, கருவேப்பிலை பொடியும் செய்முறை
Mar 23, 2023, 10:36 PM IST
Healthy Recipe: சத்தான வெண்டைக்காய் ஸ்பாஞ்ச் தோசையும் கருவேப்பிலை பொடியும் செய்முறை குறித்து இங்கு பார்க்கலாம்.
வெண்டைக்காயும், கருவேப்பிலையும் உடல் ஆரோக்கியத்துக்குச் சிறந்தவை. வெண்டைக்காய் மூளை நன்கு வேலை செய்ய உதவுவதுடன், பெரியவர்களுக்கு ஏற்படும் ஞாபக மறதியை சரிசெய்யும்.
கறிவேப்பிலை, தலைமுடியின் கருமைக்கும், வளர்ச்சிக்கும் உதவும்.
இவ்விரண்டையும் வைத்து இன்றைக்கு வெண்டைக்காய் ஸ்பாஞ்ச் தோசையும், கருவேப்பிலைப் பொடியும் செய்து குழந்தைகளுக்கும் குடும்பத்தாருக்கும் கொடுத்து மகிழுங்கள்.
வெண்டைக்காய் ஸ்பாஞ்ச் தோசை செய்யத் தேவையானவை:
புழுங்கல் அரிசி - ஒன்றரை கப்,
காய்ந்த மிளகாய் (அ) பச்சை மிளகாய் - 2,
வெண்டைக்காய் - 100 கிராம்,
எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
தாளிக்க:
கடுகு- ஒரு டீஸ்பூன்,
சீரகம் - ஒரு டீஸ்பூன்.
அலங்கரிக்க:
பொடியாக நறுக்கிய வெங்காயம்,
துருவிய கேரட் - தேவைக்கேற்ப
கொத்தமல்லித் தழை - தேவைக்கேற்ப.
வெண்டைக்காய் ஸ்பாஞ்ச் தோசை செய்முறை:
அரிசியை ஒரு மணி நேரம் ஊற வைத்து, உப்பு, காய்ந்த மிளகாய் (அ) பச்சை மிளகாய் சேர்த்து அரைக்கவும்.
பாதி அரைபட்டதும் பொடியாக நறுக்கிய வெண்டைக்காயை சேர்த்து நைஸாக அரைக்கவும். மாவை புளிக்கவிடவும்.
பிறகு, தாளிக்க கொடுத்துள்ளவற்றை தாளித்து மாவில் சேர்க்கவும். தோசைக்கல்லில் எண்ணெய் விட்டு இரண்டு கரண்டி மாவை விட்டு, தேவைப்பட்டால் ஓரங்களில் எண்ணெய் ஊற்றி, அலங்கரிக்கக் கொடுத்துள்ள பொருட்களால் அலங்கரித்து சுட்டெடுத்தால் மிருதுவான வெண்டைக்காய் ஸ்பாஞ்ச் தோசை தாயார்.
இதனைத் திருப்பிப் போடத் தேவையில்லை.
கறிவேப்பிலை பொடி-
கறிவேப்பிலை பொடி செய்யத் தேவையானவை:
உருவிய கறிவேப்பிலை - 2 கப்,
எண்ணெய் - 3 ஸ்பூன்,
உப்பு - தேவைக்கேற்ப.
வறுத்துப் பொடிக்க:
காய்ந்த மிளகாய் - 2,
மிளகு - ஒரு டீஸ்பூன்,
உளுத்தம்பருப்பு - 3 டீஸ்பூன்,
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை.
கறிவேப்பிலை பொடி செய்முறை:
கறிவேப்பிலையை நன்கு கழுவி, ஈரம்போக நிழலில் உலரவிடவும். வாணலியில் சிறிதளவு எண்ணெயை ஊற்றி கறிவேப்பிலையை மொறுமொறுப்பாக வறுத்து, தனியே எடுத்து வைக்கவும்.
மீதியுள்ள எண்ணெயில் வறுக்கக் கொடுத்துள்ள பொருட்களை வறுத்து மிக்ஸியில் கொரகொரப்பாக பொடிக்கவும்.
பிறகு, இதனுடன் கறிவேப்பிலை, உப்பு சேர்த்து, நைஸாகப் பொடிக்கவும். இதனை காற்றுப்புகாத டப்பாவில் சேமித்து வைக்கவும்.
இந்தப் பொடி வெண்டைக்காய் ஸ்பாஞ்ச் தோசைக்கு மட்டுமல்லாமல், இட்லிக்கும் சாதத்துடன் சேர்த்துப் பிசைந்து சாப்பிடவும் ஏற்றது.
டாபிக்ஸ்