Summer Cool Tips: கோடை சூட்டை தணித்து உடலை குளுகுளுவென வைக்கும் 9 பானங்கள்
May 21, 2023, 07:16 PM IST
கோடை சூட்டை தணித்து உடலை குளுகுளுவென வைக்கும் 9 பானங்கள் செய்முறை பற்றி இங்கு அறிந்து கொள்ளுங்கள்.
கத்தரி வெயில் வாட்டியெடுக்கும்நிலையில் கடுமையா உடல் உஷ்ணத்தை தணிக்காவிட்டால் சன் ஸ்ட்ரோக், வயிற்றுப்போக்கு, சிறுநீர்க்கடுப்பு போன்ற எக்கச்சக்கமான பிரச்னைகளுக்கு ஆளாக நேரிடும். இதைத் தவிர்ப்பதற்காக ஊட்டச்சத்து நிபுணர் சூர்யா மாணிக்கவேல் பரிந்துரைத்துள்ள 9 பானங்கள் பற்றி இங்கு பார்ப்போம்.
1. கேரட் ஜூஸ்
தேவையானவை:
கேரட், எலுமிச்சம் பழம் – தலா ஒன்று, சர்க்கரை – தேவையான அளவு.
செய்முறை:
கேரட்டை கழுவி சுத்தம் செய்து தோல் சீவாமல் பொடியாக நறுக்கி மிக்ஸியில் அரைக்கவும். இதனுடன் எலுமிச்சைச் சாறு, சர்க்கரை சேர்த்து கலந்து பருகவும்.
கேரட் ஜூஸ் வைட்டமின் ‘ஏ’, வைட்டமின் ‘சி’ நிறைந்த பானம்.
2. லெமன் ஜிஞ்சர் டிரிங்க்
தேவையானவை:
எலுமிச்சைச் சாறு – ஒரு டீஸ்பூன், தண்ணீர் – 2 கப், துருவிய இஞ்சி – அரை டீஸ்பூன், பொடித்த வெல்லம், தேன் – தேவையான அளவு.
செய்முறை:
தண்ணீரைக் கொதிக்க வைத்து இஞ்சி, வெல்லம் சேர்த்து, அரை கப்பாக குறுகிய பின்பு இறக்கி வடிகட்டவும். இதனுடன் எலுமிச்சைச் சாறு, தேன் சேர்த்து பருகலாம்.
கோடையில் வரும் பித்தத்தை லெமன் ஜிஞ்சர் டிரிங்க் தவிர்க்கும்.
3. வெள்ளரி மோர் கூட்டு
தேவையானவை:
வெள்ளரிப் பிஞ்சு துண்டுகள் – ஒரு கப், உளுத்தம்பருப்பு – 2 டீஸ்பூன், பெருங்காயத்தூள், கடுகு – தாளிக்க தேவையான அளவு, பச்சை மிளகாய் – 4, கெட்டி மோர் – ஒரு கப், தேங்காய் துருவல் – 5 டீஸ்பூன், எண்ணெய் – ஒரு டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
உளுத்தம்பருப்பை வெறும் வாணலியில் வறுக்கவும். இதனுடன் பச்சை மிளகாய், தேங்காய் துருவல் சேர்த்து அரைக்கவும். வெள்ளரி துண்டுகளை தண்ணீர் விட்டு வேக வைத்து உப்பு, அரைத்த விழுது சேர்த்துக் கொதிக்கவிட்டு இறக்கி, மோருடன் கலக்கவும். கடாயில் எண்ணெயை காய வைத்து கடுகு, பெருங்காயத்தூள் தாளித்து சேர்த்துப் பரிமாறவும்.
வெள்ளரியும் மோரும் கோடையின் கொடுமையைத் தணிக்க வல்லவை.
4. புளி பானகம்
தேவையானவை:
புளி – நெல்லிக்காய் அளவு, பொடித்த வெல்லம் – தேவைக்கேற்ப, சுக்குத்தூள், ஏலக்காய்த்தூள் – தலா அரை டீஸ்பூன்.
செய்முறை:
வெல்லத்தை சிறிதளவு தண்ணீரில் கரைத்து கொதிக்கவிட்டு வடிகட்டவும். புளியை ஊற வைத்து கரைத்து வடிகட்டி கொதிக்கவிடவும். அத்துடன் வெல்லக் கரைசல், சுக்குத்தூள், ஏலக்காய்த்தூள் சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.
நீர் கடுப்பு ஏற்படும்போது கிராமப்புறங்களில் இந்த பானகத்தை பருகுவார்கள்.
பானகம் நீர்க்கடுப்பை போக்கும் ஆற்றல் கொண்டது.
5. தர்பூஸ் டிரிங்
தேவையானவை:
தர்பூசணி துண்டுகள், தேங்காய்ப் பால் – தலா ஒரு கப், சர்க்கரை – தேவையான அளவு.
செய்முறை:
தர்பூசணி துண்டுகளை அரைத்து ஜூஸ் தயாரிக்கவும். தேங்காய்ப் பாலுடன் தர்பூசணி ஜூஸ், தேவையான அளவு சர்க்கரை சேர்க்கவும்.
இதை குளிர வைத்து பருகலாம்.
உடலுக்கு தர்பூசணி நல்ல நீர்ச்சத்தை தரும்.
6. அரிசி மோர் கஞ்சி
தேவையானவை:
புழுங்கலரிசி – ஒரு கப், மோர் – இரண்டு கப், சின்ன வெங்காயம் – 5, உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
புழுங்கல் அரிசியை வெறும் வாணலியில் வறுத்து, ரவை போல உடைக்கவும். இதை தண்ணீருடன் சேர்த்து நன்கு குழைய வேக வைத்து ஆறவிடவும். பின்பு இதனுடன் உப்பு, மோர், பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் கலந்து சாப்பிடவும்.
மோரும் சின்ன வெங்காயமும் குளிர்ச்சி தன்மை கொண்டவை.
7. ஜவ்வரிசி பகாளாபாத்
தேவையானவை:
ஜவ்வரிசி – அரை கப், தயிர் – ஒரு கப், காய்ச்சி ஆற வைத்த பால் – அரை கப், இஞ்சி – சிறு துண்டு, பச்சை மிளகாய் – 3, கடுகு, பெருங்காயத்தூள் – தாளிக்க தேவையான அளவு, கேரட் துருவல் – 4 டீஸ்பூன், கொத்தமல்லித் தழை – சிறிதளவு, எண்ணெய் – ஒரு டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
ஜவ்வரிசியை முதல் நாள் இரவே ஊற வைக்கவும். மறுநாள் காலையில் அதை வேக வைத்து, தயிருடன் கலக்கவும். அதனுடன் காய்ச்சி ஆற வைத்த பால், உப்பு, கேரட் துருவல், கொத்தமல்லித் தழை ஆகியவற்றை சேர்த்துக் கலக்கவும்.
பின்னர் கடாயில் எண்ணெயை காயவிட்டு கடுகு, பெருங்காயத்தூள், இஞ்சித் துருவல், கீறிய பச்சை மிளகாய் சேர்த்து தாளித்து, அதை ஜவ்வரிசி கலவை மீது கொட்டி அலங்கரித்து, கலர்ஃபுல்லாக பரிமாறவும்.
உடலுக்கு ஜவ்வரிசி குளிர்ச்சியை தந்து சூட்டைக் குறைக்கும்.
8. பச்சைப் பயறு கீர்
தேவையானவை:
பச்சைப் பயறு – ஒரு கப், பொடித்த வெல்லம் – ஒரு கப், பால் – ஒன்றரை கப், முந்திரி, பாதாம் – தலா 10.
செய்முறை:
பச்சைப் பயறை வெறும் வாணலியில் வறுத்து வேகவிடவும். ஆறிய பின்னர், வெல்லத்தைக் கரைத்து வடிகட்டி அதனுடன் கலக்கவும். முந்திரி, பாதாம் பருப்புகளை பாலில் ஊற வைத்து அரைத்து, வேக வைத்த பயறுடன் கலக்கவும். இதனை அடுப்பில் வைத்து, கொதிக்கவிட்டு இறக்கினால்… பச்சைப் பயறு கீர் ரெடி!
பச்சைப் பயறு உடலுக்கு குளிர்ச்சியைத் தரும்.
9. நீராகாரம்
தேவையானவை:
சாதம் – ஒரு கப், மோர் – ஒரு கப், உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
முதல் நாள் இரவே சாதத்தில் தண்ணீரை ஊற்றி வைக்கவும். மறுநாள் காலையில் அந்த தண்ணீருடன் மோர், உப்பு சேர்த்துப் பருகவும்,
நீராகாரம் உடல் சூட்டை தணிக்கும்.
நோய் எதிர்ப்பு சக்தியை தர வல்லது.
டாபிக்ஸ்