தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Killer Alcohol Limit: மரணத்தை விளைவிக்கும் மதுவின் அளவு என்ன?

killer alcohol limit: மரணத்தை விளைவிக்கும் மதுவின் அளவு என்ன?

I Jayachandran HT Tamil

Nov 19, 2022, 10:09 PM IST

google News
ஒருவர் எந்தளவுக்கு மது அருந்தினால் அவருக்கு மரணம் நிகழும் என்பதைப் பற்றி இங்கு பார்க்கலாம். மது அருந்துவோருக்கு இது ஓர் அறிவுறுத்தல் கட்டுரையாகும்.
ஒருவர் எந்தளவுக்கு மது அருந்தினால் அவருக்கு மரணம் நிகழும் என்பதைப் பற்றி இங்கு பார்க்கலாம். மது அருந்துவோருக்கு இது ஓர் அறிவுறுத்தல் கட்டுரையாகும்.

ஒருவர் எந்தளவுக்கு மது அருந்தினால் அவருக்கு மரணம் நிகழும் என்பதைப் பற்றி இங்கு பார்க்கலாம். மது அருந்துவோருக்கு இது ஓர் அறிவுறுத்தல் கட்டுரையாகும்.

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சாகும் என்பது பகுத்தறந்த சான்றோரின் வாக்காகும். எதையும் அளவோடு சாப்பிட்டால் அதனால் அபாயங்கள் நிகழுவதில்லை. வெறும் தண்ணீர் 6 லிட்டரை இரண்டு நிமிடங்களுக்குள் ஒருவர் குடித்தாலே அவர் இறந்துவிடக்கூடும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். அப்படிப்பட்ட சூழ்நிலையில் ஒரே நேரத்தில் மொடாக்குடியாக அளவுதெரியாமல் மதுபானங்களை அருந்தினால் சொல்லவே வேண்டாம். சாவு நிச்சயம்.

அளவுக்கு அதிகமாக மது அருந்தினால் மரணம் விளையக்கூடும் என்று மருத்துவர்கள் எச்சரித்தாலும் எந்தளவுக்குக் குடித்தால் சாவார்கள் என்பதைத் தெளிவாகக் குறிப்பிடவில்லை. மது அருந்தும் நபர்களைப் பொருத்தமட்டில் ஒவ்வொருவருக்கும் ஒரு வரையறை இருப்பது அவரவர் உடல்வாகைப் பொறுத்தது என்கின்றனர். இதனால்தான் குடிகாரர்களும் குழம்பிப் போகின்றனர். ஒருவரது வயது, உடல் எடை, பாலினம், பரம்பரை போன்ற பல காரணங்களால் மதுவின் அளவு மாறுபடுகிறது என்று மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இவனுக்கெல்லாம் பாட்டில் மூடியைத் திறந்து மோந்து பாத்தாலே மட்டையாகிவிடுவான் என்று நடிகர் சந்தானம் ஒருபடத்தில் காமெடியாகச் சொல்வார். அது ஓரளவுக்கு உண்மைதான். ஒருசிலர் எவ்வளவு குடித்தாலும் நிதானமாக இருப்பார்கள். வேறு சிலர் 30 மிலி மது அருந்திவிட்டாலே நிலைதடுமாறிப் போவார்கள்.

மது அருந்துவதால் நாளடைவில் கல்லீரல் கெட்டுவிடும். ஒருகட்டத்தில் இந்தப் பழக்கத்தால் கல்லீரலில் அபாயகரமான சிர்ஹாசிஸ் எனப்படும் ரத்தக்கசிவு ஏற்படும்.

கல்லீரலுக்கும் மதுவுக்கும் எப்போதுமே ஏழாம் பொருத்தம்தான். சிறிதளவு மதுவானாலும் அதை செரிக்க வைப்பதில் கல்லீரல் பிரம்மப் பிரயத்தனம் செய்ய வேண்டியிருக்கும். தினசரி மது அருந்தும் பழக்கம் உடையவர்களின் கல்லீரலில் உள்ள செல்களில் மெல்ல மெல்ல கொழுப்புகள் நிறைந்து கல்லீரலை அழுக வைத்துவிடும். என்னதான் கல்லீரலுக்குத் தனக்குத்தானே சீரமைத்துக் கொள்ளும் திறன் இருந்தாலும் ஒருகட்டத்தில் சரிபடுத்தமுடியாத அளவுக்கு சேதத்தை சந்தித்துவிடும். இந்த அபாயக்கட்டத்தை கல்லீரல் அடைந்தபிறகே அதன் பாதிப்புக்கான அறிகுறிகள் உடலில் தோன்றும். அதன்பிறகு என்ன சிகிச்சை எடுத்தாலும் பயன் ஏற்படாது.

ஓசிக்குடிக்கு அலைந்து அனுபவித்தால் பின்னர் சாவுக்கான முதலை சேர்த்து வைத்துவிடுவது நலம் என மூத்தவர்கள் புத்திமதி சொல்வார்கள். அண்மையில் சென்னையில் ஒரு இளைஞர் தனது நண்பர் வைத்த பார்ட்டியில் அளவுக்கு அதிகமாகக் குடித்து விட்டு வீட்டுக்கு வந்து தூங்கியவர் காலையில் கண்விழிக்கவில்லை. குடும்பத்தார் சந்தேகத்தில் அவரை எழுப்ப கடும் முயற்சி எடுத்தும் எந்த அசைவும் இல்லை. உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற போது அவர் ஏற்கெனவே தூக்கத்தில் இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறிவிட்டனர். இந்த நிலை அவசியம்தானா என்று குடும்பப் பொறுப்பு நிறைந்தவர்கள் எல்லாரும் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்துவிட்டு குடிக்கச் செல்லுங்கள்.

மதுப்பழக்கத்தின் மூலம் கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டால் மஞ்சள்காமாலை நோய் ஏற்படும். செரிமானத்துக்காக கல்லீரல் சுரக்கும் நொதியை உடலால் பயன்படுத்த முடியாமல் போய் ரத்தத்தில் கலந்து விடும். இதனால் உடல் முழுக்க மஞ்சள் நிறம் தோன்றும். கண்கள் மஞ்சளாகி விடும். உள்ளங்கையில் சுரக்கும் வியர்வையை ஒரு வெள்ளைத் துணியால் துடைத்தால் அந்தத் துணியின் நிறம் மஞ்சளாகிவிடும்.

பொதுவாக உங்களது ரத்த ஆல்கஹால் அடர்த்தி 0.40 சதவீதம் இருந்தால் அதுதான் அபாயத்தின் விளிம்பு. இதைத் தாண்டும்போது ஒருவருக்கு கோமா நிலையை அடையவோ அல்லது உயிரிழக்கவோ நேரிடும்.

ரத்த ஆல்கஹால் அடர்த்தி 0.40 சதவீதம் முதல் 0.80 சதவீதம் இருந்தால் மனக்குழப்பங்களும், தறிகெட்ட போதையும், குமட்டலு் ஏற்படும். 0.80 சதவீதம் என்ற ரத்த ஆல்கஹால் அடர்த்தி அளவை எட்டும்போதுதான் நீங்கள் சட்டப்படி அதிகளவு மது அருந்துவதாக கருதப்படும்.

அப்படியென்றால் எத்தனை ரவுண்டுகள் மது அருந்தலாம் என்று கேள்வியெழுப்பலாம். 14 கிராம் தூய ஆல்கஹால் என்பது ஒரு ஸ்டாண்டர்டு டிரிங் ஆகும்.

5 சதவீதம் ஆல்கஹால் நிறைந்த லெகர் ரகத்தில் 12 அவுன்ஸ்கள் பியர், 12 சதவீதம் ஆல்கஹால் நிறைந்த பிரீமியம் விஸ்கி ரகத்தில் 5 அவுன்ஸ்கள், டிஸ்டில்டு ஸ்பிரிட் எனப்படும் பிராந்தி, வோட்கா, ஜின், ஃபென்னி ரகத்தில் 1.5 அவுன்ஸ் ஆகியவைதான் ஒரு ஸ்டாண்டர்டு டிரிங்க் லிமிட்டாகும்.

ஒரு ஸ்டாண்டர்டு டிரிங்க் அருந்தினால் உங்களது ரத்த ஆல்கஹால் அடர்த்தியானது 0.02 சதவீதம் அதிகமாகும். எனவே 4 ஸ்டாண்டர்டு டிரிங்க் என்பது சட்டப்படி நீங்கள் போதையேறியிருப்பதாகக் கருதப்படும். அதற்கு மேல் குடித்தால் விளைவு மரணம்தான்.

சராசரியாக ஒரு மனிதர் 25 ஸ்டாண்டர்டு டிரிங்க் அருந்தினால் அவரது ரத்த ஆல்கஹால் 0.40 சதவீதத்தை எட்டும். எனவே மது அருந்துவோர் குடிக்கும் முன் ஒரு விஷயத்தை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். நீங்கள் குடிக்கும் பீரின் ஆல்கஹால் அளவு 5 சதவீதத்துக்கு மேல் இருப்பதாக தேர்ந்தெடுங்கள். 12 அவுன்ஸ் பீர் உங்களது கிளாசில் இருந்தால் அதுவும் 5 சதவீத ஆல்கஹாலுக்கு மேல் அதிகளவு ஆல்கஹால் நிறைந்த பீராக இருந்தால் நீங்கள் மடக்கு மடக்கு என்று கணக்குத் தெரியாமல் குடிக்க முடியாது. நாலைந்து ரவுண்டு போனவுடனேயே நல்ல போதை வந்துவிடும்.

நீங்களும் குடிப்பதை நிறுத்திவிடுவீர்கள். அத்தோடு உயிர் பிழைப்பீர்கள்.

ஒருவர் அளவுக்கு அதிகமாக மது அருந்தியிருப்பதை உணர்ந்து உடனடியாக அவருக்கு மருத்துவ சிகிச்சைக்கு ஏற்பாடு செய்ய வேண்டுமென நினைத்தால் சில அறிகுறிகள் தென்படுகிறதா என்று பாருங்கள்.

வாந்தி, முகம் வெளுத்துப் போதல், உடல் சருமம் நீலம் பாய்ந்திருத்தல், இதயத்துடிப்பு குறைந்திருத்தல், உடல் சில்லிட்டிருத்தல், மூச்சுத் திணறல் அல்லது விட்டு விட்டு சுவாசித்தல், நிமிடத்துக்கு 8 முதல் 10 சுவாசத்துக்கும் கீழே இருத்தல், பேசுவதற்கு சிரமப்படுதல், தள்ளாடுதலுடன் குழப்பமாக இருத்தல், வலிப்பு அல்லது நினைவிழத்தல் ஆகிய இந்த அறிகுறிகள் இருந்தால் அவருக்கு உடனடியாக தீவிர மருத்துவ சிகிச்சை தேவையென்று அர்த்தம். சுதாரிக்கத் தவறினால் அவரது உயிரைக் காப்பாற்ற முடியாமல் போய்விடும்.

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.
அடுத்த செய்தி