Home Made Easy Health Mix : குழந்தைகளின் மூளை சுறுசுறுப்பாக வேண்டுமா? ஈசியான ஹெல்த் மிக்ஸ்; வீட்டிலே செய்யலாம்!
Mar 27, 2024, 01:35 PM IST
Home Made Easy Health Mix : அந்த பாரம்பரிய சத்து மாவை செய்வதற்கு கொஞ்சம் மெனக்கெடல் அவசியம். ஆனால், நீங்கள் ஈசியாக சத்துமாவு மிக்ஸை வீட்டிலே செய்யலாம்.
உங்கள் குழந்தைகளின் மூளை சுறுசுறுப்பாக செயல்படவேண்டும் என்று நீங்கள், பல்வேறு விஷயங்களை செய்கிறீர்கள். அதில் ஒன்றுதான் அவர்கள் பாலில் கலந்து பருகுவதற்கு கொடுப்பதும் உள்ளது. வீட்டிலே சத்துமாவு அரைத்து பயன்படுத்துவதுதான் சிறந்தது.
அந்த பாரம்பரிய சத்து மாவை செய்வதற்கு கொஞ்சம் மெனக்கெடல் அவசியம். ஆனால், நீங்கள் ஈசியாக சத்துமாவு மிக்ஸை வீட்டிலே செய்யலாம்.
இதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம். இதை குழந்தைகளுக்கு தினமும் கொடுத்துவர அவர்களின் மூளை சுறுசுறுப்பாகும், அவர்களின் ஆற்றல் அதிகரிப்பதை நீங்கள் கண்கூடாக காண முடியும்.
இதை ஃபிரிட்ஜில் வைத்து 3 மாதங்கள் வரை வைத்துக்கொள்ளலாம். வெளியில் வைத்து பயன்படுத்தினால் ஒரு மாதம் வரை வைத்துக்கொள்ளலாம். உங்களுக்கு ஒரு மாதம் வரும் அளவுக்கு நீங்கள் பொருட்களை சேர்த்து அரைத்து வைத்துக்கொண்டு பயன்படுத்துங்கள்.
இதை பருகினால் உடல் சோர்வை போக்கும். அடித்துப்போட்டது போல் ஏற்படும் உடல் வலியைக் கூட குணமாக்கும். இதை சாப்பிட்டால் உடல் இரும்பாகும். சுறுசுறுப்பாகும். உற்சாகம் கிடைக்கும் எனவே கட்டாயம் செய்த சாப்பிட்டு பாருங்கள்.
தேவையான பொருட்கள்
மக்கானா அல்லது தாமரை விதை – ஒரு கப்
(நாட்டு மருந்து கடைகள், டிபார்ட்மெண்ட் ஸ்டோர்களில் கிடைக்கும். எலும்பு தேய்மானத்தை சரிசெய்யும் எலும்பை இரும்பாக்கக்கூடிய தன்மை கொண்டது. தாமரை பூவிற்குள் உள்ள விதைகளை பக்குவப்படுத்தி பெறப்படுவதுதான் மக்கானா. பொறிபோல் இருக்கும். ஆனால் அதைவிட பெரியதாக இருக்கும்)
பாதாம் – 100 கிராம்
முந்திரி – 100 கிராம்
வால்நட் – 10
ஓட்ஸ் – 25 கிராம்
ராகி மாவு – 4 டேபிள் ஸ்பூன்
பால்பவுடர் – 4 டேபிள் ஸ்பூன்
கோகோ பவுடர் – 2 டேபிள் ஸ்பூன்
(தேவைப்பட்டால் சேர்த்துக்கொள்லாம்)
வெல்லம் – 100 கிராம் (பொடித்தது)
செய்முறை
கடாயில் மக்கானாவை சேர்த்து வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
அடுத்து முந்திரி, பாதாம், வால்நட்கள், ராகி, ஓட்ஸ் என ஒவ்வொன்றையும் தனித்தனியாக சேர்த்து வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
காய்ந்த மிக்ஸிஜாரில் முதலில் மக்கானா மற்றும் ஓட்ஸை மட்டும் சேர்த்து பொடித்து, சல்லடையில் சலித்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர், நட்ஸ்களை பொடித்து எடுத்துக்கொள்ள வேண்டும். அவற்றை பொடிக்கும்போது கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் அதிக நேரம் மிக்ஸியை ஓடவிட்டால் எண்ணெய் பிரிந்து வந்துவிடும். பொடி ஃப்ரி ஃப்ளோவாக வராது. எனவே, கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து பொடித்து சலித்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் இதில் பால் பவுடர், கோகோ பவுடர், பொடித்த வெல்லம் ஆகியவற்றை சேர்த்து கலந்துகொள்ள வேண்டும். இவற்றை வறுக்கக்கூடாது.
பின்னர் வறுத்த ராகி மாவையும் சேர்த்து நன்றாக கலந்து, ஒரு காற்று புகாத டப்பாவில் போட்டு அடைத்து வைத்துவிடவேண்டும். இதை தேவைப்படும்போது, சூடான பாலில் கலந்து பருகவேண்டும்.
குழந்தைகளுக்கு காலை மற்றும் மாலையில் கொடுக்கும் வழக்கமான பானங்களுக்கு பதில் இதை பாலில் கலந்து கொடுத்தால், அவர்களின் உடல் வலுப்பெறும். குழந்தைகளின் மூளை ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
அவர்கள் சுறுசுறுப்புடன் செயல்பட்டு, கல்வியிலும் சிறந்து விளங்குவார்கள். எனவே கட்டாயம் இந்த பானத்தை செய்து பலன்பெறுங்கள். பெரியவர்களும் இனி வழக்கமாக எடுத்துக்கொள்ளும் காபி, டீக்கு பதில் இதை சாப்பிடலாம்.
டாபிக்ஸ்