Fresh Turmeric Pickle: பச்சை மஞ்சள் ஊறுகாய் எப்படி செய்வது என பார்க்கலாமா?
Jan 15, 2024, 06:06 PM IST
பச்சை மஞ்சள் ருசிக்கு மட்டும் இல்லை உடலுக்கும் நன்மை தரும். இந்த ஊறுகாய் தயிர் சாதம், சப்பாத்தில், குல்சா, ஸ்டப்புடு பரோட்டா போன்றவற்றுடன் சாப்பிட ருசி அருமையாக இருக்கும்.
பொங்கல் திருவிழாவை ஒட்டி பலரும் வீட்டில் பச்சை மஞ்சள் வைத்து வழிபடுவார்கள். இந்த காலத்தில் பச்சை மஞ்சள் கிடைப்பது எளிதாக இருக்கும். அப்படி கிடைக்கும் போது இந்த பச்சை மஞ்சள் ஊறுகாயை செய்து பார்க்க மறக்காதீங்க மக்களே ருசி அருமையாக இருக்கும்.
தேவையான பொருட்கள்
பச்சை மஞ்சள் 200 கிராம்
மிளகாய் தூள் 2 ஸ்பூன்
உப்பு
நல்லெண்ணெய்
மிளகாய் தூள் 2 டீஸ்பூன்
கறிவேப்பிலை
சோம்பு 1 டீ ஸ்பூன்
எலுமிச்சை
கடுகு 1 டீ ஸ்பூன்
சீரகம் 1/2 டீ ஸ்பூன்
வெந்தயம் 1/2 டீ ஸ்பூன்
கருஞ்சீரகம் 1/2 டீ ஸ்பூன்
மிளகு 1/4 டீ ஸ்பூன்
பச்சை மிளகாய் 4
பெருங்காயம் 1 டீ ஸ்பூன்
செய்முறை
200 கிராம் பச்சை மஞ்சளை தோல் நீக்கி எடுத்து கொள்ள வேண்டும். அதை பொடிபொடியாக நறுக்கி எடுத்து கொள்ள வேண்டும்.
முதலில் ஒரு சூடான கடாயில் கடாயில் ஒரு டீ ஸ்பூன் சோம்பு, ஒரு டீ ஸ்பூன் கடுகு, அரை டீ ஸ்பூன் சீரகம், அரை டீ ஸ்பூன் வெந்தயம், அரை டீ ஸ்பூன் கருஞ்சீரகம் கால் ஸ்பூன் மிளகை சேர்த்து நன்றாக வறுக்க வேண்டும். இந்த பொருட்கள் வெடித்து நன்றாக வாசம் வரும் வரை வறுக்க வேண்டும். பின்னர் ஆற வைக்க வேண்டும். ஆறிய பொருட்களை மிக்ஸி ஜாரில் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து கொள்ள வேண்டும்.
பின்னர் 150 மில்லி லிட்டர் நல்லெண்ணெய் சேர்த்து சூடாக்க வேண்டும். பிறகு நறுக்கிய மஞ்சளில் உப்பு, இரண்டு ஸ்பூன் மிளகாய் பொடி, 3 கீறி விட்ட பச்சை மிளகாய், தேவையான அளவு உப்பு ஆகியவற்றை நன்றாக கலந்து கொள்ள வேண்டும். இதில் ஏற்கனவே வறுத்து அரைத்து எடுத்த பொடியையும் சேர்த்து கொள்ள வேண்டும். மேலும் அதில் 2 எலுமிச்சைசாறையும் சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும். இப்போது சூடான எண்ணெய்யில் இரண்டு ஸ்பூன் பெருங்காய பொடியை சேர்த்து அடுப்பை அணைத்து விட வேண்டும். பின்னர் சூடான அந்த எண்ணெய்யை மஞ்சளுடன் சேர்த்து கலந்து விட வேண்டும்.
ஆரம்பத்தில் மஞ்சளில் எண்ணெய் கொஞ்சம் அதிகமாக இருப்பது போல் தோன்றலாம். ஆனால் இரண்டு, மூன்று நாட்கள் கழித்து மஞ்சள் எண்ணெய்யில் ஊறிய பிறகு சாப்பிட ருசி அதிகமாக இருக்கும். இதில் தேவை என்றால் ஒரு ஸ்பூன் நாட்டு சர்க்கரை அல்லது கொஞ்சமாக வெல்லத்தை சேர்த்து கொள்ளலாம். ருசி அருமையாக இருக்கும்.
இந்த ஊறுகாய் தயிர் சாதம், சப்பாத்தில், குல்சா, ஸ்டப்புடு பரோட்டா போன்றவற்றுடன் சாப்பிட ருசி அருமையாக இருக்கும்.
பச்சை மஞ்சள் ருசிக்கு மட்டும் இல்லை உடலுக்கும் நன்மை தரும்
பச்சை மஞ்சளில் குர்குமின் உள்ளது. இது உண்மையில் ஒரு இயற்கை பாலிஃபீனால் ஆகும். இந்த பாலிஃபீனால் புற்றுநோய்க்கு எதிராக மிகவும் பயனுள்ள கலவை என்று பல ஆய்வுகள் காட்டுகின்றன.
குளிர்காலத்தில் பச்சை மஞ்சள் உடலுக்கு மிகவும் முக்கியமானது. ஏனெனில் இந்த காலகட்டத்தில் இதய பிரச்சனைகள் அதிகரிக்கும். இதை தடுக்க பச்சை மஞ்சள் உதவும்.
ஆக்ஸிஜனேற்ற மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. இது வீக்கத்தைக் குறைக்கிறது. இது எந்த தொற்று நோய்க்கும் எதிராக பாதுகாக்கிறது. இந்த இரண்டு காரணிகளும் உணவுக்குழாயை பாக்டீரியா தொற்றிலிருந்து பாதுகாக்கின்றன. இப்படி பச்சை மஞ்சளில் ஏராளமான நன்மைகள் உள்ளன.
டாபிக்ஸ்