தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Exclusive : மழைக்காலத்தில் போட்டிபோட்டுக்கொண்டுவரும் டெங்குவும், சிக்குன் குனியாவும் – மருத்துவர் விளக்கம்!

Exclusive : மழைக்காலத்தில் போட்டிபோட்டுக்கொண்டுவரும் டெங்குவும், சிக்குன் குனியாவும் – மருத்துவர் விளக்கம்!

Priyadarshini R HT Tamil

Nov 13, 2024, 06:00 AM IST

google News
மழைக்காலத்தில் போட்டிபோட்டுக்கொண்டுவரும் டெங்குவும், சிக்குன் குனியாவும் எப்படி பரவுகிறது என்று சித்த மருத்துவர் காமராஜ் விளக்குகிறார். அதற்கு உரிய சித்த மருத்துவ தீர்வுகளை அவர் இந்த தொடரில் கூறுகிறார்.
மழைக்காலத்தில் போட்டிபோட்டுக்கொண்டுவரும் டெங்குவும், சிக்குன் குனியாவும் எப்படி பரவுகிறது என்று சித்த மருத்துவர் காமராஜ் விளக்குகிறார். அதற்கு உரிய சித்த மருத்துவ தீர்வுகளை அவர் இந்த தொடரில் கூறுகிறார்.

மழைக்காலத்தில் போட்டிபோட்டுக்கொண்டுவரும் டெங்குவும், சிக்குன் குனியாவும் எப்படி பரவுகிறது என்று சித்த மருத்துவர் காமராஜ் விளக்குகிறார். அதற்கு உரிய சித்த மருத்துவ தீர்வுகளை அவர் இந்த தொடரில் கூறுகிறார்.

தீபாவளி முடிந்து மழையும், பனியுமான ஒரு குளிர் காலம் நிலவத்துவங்கிவிட்டது. இப்போது தொற்று கிருமிகளுக்கு கொண்டாட்டமான காலம் எனலாம். எளிதாக தொற்றும் வாய்ப்பு காற்றில் உள்ளது. நாம் அனைவரும் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய காலமிது என்று திருச்சியைச் சேர்ந்த சித்த மருத்துவர் காமராஜ் மக்களை எச்சரிக்கிறார். மழைக்காலத்தில் பரவும் காய்ச்சல்கள் மற்றும் அதை தீர்க்கும் சித்த மருத்துவ தீர்வுகள் குறித்து மருத்துவர் ஒரு தொடராக இங்கு விளக்குகிறார். மழைநீர் தேங்கி நிற்பதால் அதில் டெங்கு கொசு அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனால் டெங்கு வைரஸ் காய்ச்சல் அதிகம் பரவுகிறது. சுத்தமில்லாத தண்ணீரின் வழியே, டைஃபாய்டு காய்ச்சல், மஞ்சள் காமாலை, சிறுநீரக தொற்று, உணவு ஒவ்வாமையால் வாந்தி, பேதி, காய்ச்சல் போன்றவை ஏற்பட வழிவகுக்கும்.

குறிப்பாக குழந்தைகள், உடல் பலவீனமான நிலையில் இருப்பவர்கள், நாள்பட்ட நோய்களுக்கு மருந்தை உட்கொண்டு வாழ்பவர்கள் என அனைவரும் இந்த காலகட்டத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம்

காய்ச்சல் என்றால், உடனே மருந்து கடைகளுக்கு சென்று காய்ச்சலுக்கு ஒரு செட் மாத்திரை, சளி, இருமலுக்கு ஒரு செட் மாத்திரை கொடுங்க என்று கேட்டு வாங்கி பயன் படுத்தக்கூடாது. எதனால் திடீர் காய்ச்சல் வந்தது என்றும், அது என்ன வகை காய்ச்சல், எதனால் சளி, இருமல் தொற்றுகள் ஏற்பட்டது என்றும் ஆராய்ந்து அறியவேண்டும்.

இதைவிடுத்து, சுயமாக மருந்தை வாங்கி ஓரிரு நாட்கள் சாப்பிட்டு பின் காய்ச்சல் குறையாதபோது, நோய் தீவிர நிலையில் மருத்துவமனைக்கு செல்லும்போதுதான் நோயை கணிக்கமுடியாமல், தீர்க்க முடியாமல் உயிரிழப்பு ஏற்படக்கூடிய நிலை உருவாகிறது.

எனவே இதைத் தவிர்த்து, விரைவான மருத்துவ உதவி, விரைவான மருத்துவ பரிசோதனை மூலம்தான் நோயைத் தீர்க்க உதவும் என்பதை நினைவில்கொண்டு மாறுபட்ட குறிகுணங்கள், அறிகுறிகள் தோன்றிய உடனே மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம் என்று மருத்துவர் காமராஜ் வலியுறுத்துகிறார்.

காய்ச்சல்களுக்கு சித்த மருத்துவத்தில் மருந்து உள்ளதா? உடனே சரியாகுமா?

சித்த மருத்துவத்தில் காய்ச்சலுக்கு மருந்து இருக்கா? குணப்படுத்த முடியுமா என்ற சந்தேகம் அனைவருக்கும் உள்ளது. சித்த மருத்துவத்தில் காய்ச்சலுக்கு மருந்து உள்ளது. காய்ச்சல் முதல் 4,448 நோய்களுக்கும், சித்த மருத்துவத்தில் சிகிச்சைகள் உள்ளன.

சித்த மருந்துகள் தாமதமாகத்தான் வேலை செய்யும் என எண்ணாதீர்கள். உடனடி தீர்வு தரும் சித்த மருந்துகளும் உள்ளன. சித்த மருத்துவ நூல்களில் 64 வகையான காய்ச்சல் இருப்பது விளக்கிக் கூறப்பட்டுள்ளது.

மழைக் காலங்களில் வரும் சுரங்களை பற்றியும் அதற்கான சித்த மருத்துவ தீர்வுகள் மற்றும் தற்காப்பு முறைகளைப் பற்றியும் இந்த தொடரில் தெரிந்துகொள்ளலாம்.

மழைக்காலத்தில் காய்ச்சல் வரக் காரணம்

சுகாதாரமற்ற குடிநீர் குடிப்பது மற்றும் சுகாதாரமற்ற உணவுகளை உண்பது

காற்றின் மூலம் பரவும் வைரஸ் நுண்கிருமிகளின் தொற்று

மழைக் காலங்களில் அதிக அளவில் உற்பத்தியாகும் கொசுக்கள் இவைகள் காய்ச்சல் ஏற்பட காரணங்களாகின்றன

பிற வைரஸ் தொற்றுக்கள் மூலமாகவும் பரவலாம்

டெங்கு காய்ச்சல் ஏப்படி ஏற்படுகிறது?

டெங்கு எடிஸ் (Aedes) வகை பெண் கொசுக்களால் ஏற்படுகிறது. பகலில் தான் இக்கொசுக்கள் கடிக்கும். இதன் மூலமே டெங்கு காய்ச்சல் வருகிறது.

அறிகுறிகள்

உடல் வலி,

தலைவலி,

வாந்தி,

மூட்டு வலி

தடிப்புகள் போன்றவை உண்டாகும்.

ரத்த தட்டணுக்கள் குறைதல்

ரத்த பிளாஸ்மா கசிதல்

ரத்த அழுத்தம் குறைதல்

ஆகிய குறிகுணங்கள் காணப்படும்

சிக்குன்குனியா காய்ச்சல் வரக் காரணம்?

ஏடிஸ் வகை (Aedes) கொசுக்கள் கடிப்பதால் வருவது சிக்குன்குனியா

அறிகுறிகள்

காய்ச்சலோடு சேர்ந்து கடுமையான மூட்டு வலி இருக்கும்.

தலைவலி மற்றும் தூக்கமின்மை காணப்படும்.

நடக்கவே முடியாத நிலையை உண்டாக்கும்.

எனவே இந்த அறிகுறிகள் ஏற்பட்டால் நீங்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெறுவது கட்டாயமாகும். மேலும் மழைக்காலத்தில் வரும் காய்ச்சல்களை தெரிந்துகொள்ள தொடர்ந்து இந்த தொடரை வாசியுங்கள். அவற்றுக்கான சித்த மருத்துவ தீர்வுகளும் இறுதியில் வழங்கப்படும்.

 

டாபிக்ஸ்

அடுத்த செய்தி