Curry Leaves Pickle : 3 மாதம் வரை கெடாது! டிஃபன், சாதம் அனைத்துக்கும் ஏற்றது! கறிவேப்பிலை ஊறுகாய்!
Mar 16, 2024, 08:00 AM IST
Curry Leaves Pickle : இதை இட்லி, தோசை, சப்பாத்தி என எதனுடன் வேண்டுமானாலும் தொட்டு சாப்பிட சுவை அள்ளும். சூடான சாதத்தில் நல்லெண்ணெயுடன் சேர்த்து சாப்பிடலாம். அவசரமான நாளில் இதை பயன்படுத்தி மதிய உணவையே முடித்து விடலாம்.
ஆரோக்கியம் நிறைந்தது. ருசியாகவும் இருக்கும். அனைத்து சாதம் மற்றும் டிபஃனுடன் சாப்பிட ஏற்றது. வெறும் சாதத்தில் கூட சாப்பிடலாம். எனவே இதை செய்து வைத்துவிட்டு நிம்மதியாக இருக்கலாம். 3 மாதம் ஆனாலும் கெட்டுப்போகாது.
தேவையான பொருட்கள் மற்றும் செய்முறை
கறிவேப்பிலை – 100 கிராம் (5 கப்)
(பசுங்கறிவேப்பிலையை அலசி சுத்தம் செய்து, நன்றாக துணியில் ஒத்தி காயவைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்)
புளி – கால் கப் (நார்களை நீக்கி, கொதிக்கும் தண்ணீர் ஊற்றி ஊறவிடவேண்டும்)
ஊறுகாய் பொடி செய்ய தேவையான பொருட்கள்
கடுகு – 2 ஸ்பூன்
வரமல்லி – ஒரு ஸ்பூன்
வெந்தயம் – ஒரு ஸ்பூன்
(மூன்றையும் கடாயில் வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும். கடுகு வெடித்து வரும்வரை, அனைத்தும் நிறம் மாறி, வாசம் வரும் வரை வறுக்கவேண்டும்)
எண்ணெய் – 2 ஸ்பூன்
கடாயில் 2 ஸ்பூன் எண்ணெய் சேர்த்து கறிவேப்பிலை இலைகளை வதக்க வேண்டும். கறிவேப்பிலையில் உள்ள ஈரத்தன்மை முற்றிலும் நீங்க வேண்டும்.
கறிவேப்பிலையை உணவில் இருந்து நாம் எடுத்துவிட்டு சாப்பிடுவதுதான் வழக்கம். இதுபோல் சாப்பிடும்போது கறிவேப்பிலையின் பயன்கள் நமக்கு முழுமையாக கிடைக்கும்.
கறிவேப்பிலையை அன்றாட உணவில் எடுத்துவர முடி கருக்காது. இளநரை ஏற்படாது. கை-கால் வலி, மூட்டு வலி பிரச்னைகள் ஏற்படாது. கண் பார்வை தெளிவடையும். எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது கறிவேப்பிலை. எனவே தினமும் கறிவேப்பிலையை உணவில் எடுததுக்கொள்வதை உறுதிப்படுத்த வேண்டும்.
கறிவேப்பிலையை நன்றாக வதக்கி எடுத்தப்பின்னர், தண்ணீரில் ஊறவைத்துள்ள புளியை சேர்த்து மீண்டும் நன்றாக வதக்க வேண்டும். புளியில் உள்ள தண்ணீர் நன்றாக வற்றி வரும் வரை வதக்க வேண்டும்.
பின்னர் காய்ந்த மிக்ஸி ஜாரில் வறுத்து ஆறவைத்த கடுகு, வெந்தயம் மற்றும் வரமல்லி கலவையை பொடித்து எடுத்துக்கொள்ள வேண்டும். இதனுடன் புளியையும் சேர்த்து வதக்க வேண்டும். பின்னர் கறிவேப்பிலையையும் சேர்த்து நன்றாக அரைத்துக்கொள்ள வேண்டும்.
மிளகாய் பொடி – அரை கப்
உப்பு – தேவையான அளவு
அரைத்தவற்றுடன், இவற்றையும் சேர்த்து அரைக்க வேண்டும்.
(உப்பு சுவைக்கு ஏற்ப எடுத்துக்கொள்ள வேண்டும்)
தாளிக்க தேவையான பொருட்கள்
எண்ணெய் – ஒன்றரை கப்
பூண்டு – 10 பல் (தட்டியது)
கடலை பருப்பு – ஒரு ஸ்பூன்
கடுகு – அரை ஸ்பூன்
சீரகம் – கால் ஸ்பூன்
கறிவேப்பிலை – 2 கொத்து
பெருங்காயத்தூள் – கால் ஸ்பூன்
கடாயில் எண்ணெய் சேர்த்து, காய்ந்தவுடன் கடுகு, சீரகம், கடலை பருப்பு சேர்த்து பொரிந்தவுடன், கறிவேப்பிலை தாளித்து, பெருங்காயம் தூவவேண்டும்.
பின்னர் அடுப்பை அணைத்துவிட்டு, அதில் அரைத்த விழுதை சேர்க்க வேண்டும்.
இதனுடன் வெல்லம் அல்லது நாட்டுச்சர்க்கரை சிறிதளவு சேர்க்கலாம். அது முற்றிலும் உங்கள் விருப்பம்.
அடுப்பை அணைத்துவிட்டதால், மிளகாயின் பச்சை வாசம் இருக்கும் என்ற சந்தேகம் ஏற்படலாம். ஆனால், பச்சை வாசம் இருக்காது. எண்ணெயின் சூட்டிலே அதை கலக்கும்போது, அந்த பச்சை வாசம் மறைந்துவிடும்.
இதை காற்றுப்புகாத, ஈரமில்லாத கண்ணாடி பாட்டிலில் சேர்த்து, வெளியில் ஒரு மாதம் வரை வைத்து பயன்படுத்தலாம். இன்னும் அதிகம் எண்ணெய் சேர்த்தால், இன்னும் நீண்ட காலம் வரும். இதை ஃபிரிட்ஜில் வைத்து மூன்று மாதம் வரை பயன்படுத்தலாம்.
இதை இட்லி, தோசை, சப்பாத்தி என எதனுடன் வேண்டுமானாலும் தொட்டு சாப்பிட சுவை அள்ளும். சூடான சாதத்தில் நல்லெண்ணெயுடன் சேர்த்து சாப்பிடலாம். அவசரமான நாளில் இதை பயன்படுத்தி மதிய உணவையே முடித்து விடலாம்.
மேலும் குழந்தைகள் கறிவேப்பிலையை அதிகம் ஒதுக்குவார்கள். இப்படி செய்து தரும்போது அவர்களும் எடுத்துக்கொள்வார்கள். இதன்மூலம் அவர்களுக்கும் கறிவேப்பிலையில் முழு பலனும் கிடைக்கும்.
டாபிக்ஸ்