Cancer in Children : குழந்தைகளை குறிவைத்து தாக்கும் புற்றுநோய் – ஆய்வில் அதிர்ச்சி தகவல்!
Jan 18, 2024, 07:00 AM IST
Cancer in Children : ICMR-இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழக சமீபத்திய அறிக்கையின் படி, 42 சதவீத அரசு உயர்தர (Tertiary and Multi-Speciality Govt hospitals) புற்றுநோய் சிகிச்சை மையங்களில் மட்டுமே குழந்தைகளுக்கு ஏற்படும் புற்றுநோய்களுக்கு சிகிச்சை அளிக்கும் தனி மையங்கள் உள்ளன.
இந்தியாவில் ஏற்படும் புற்றுநோய் பாதிப்பில் 4 சதவீதம் குழந்தைகள் மத்தியில் (0-19 வயது) ஏற்படுகிறது என்ற செய்தி 2012-19 இடைப்பட்ட காலத்தில் 96 புற்றுநோய் சிகிச்சை மையங்களில் நடத்தப்பட்ட ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது.
குழந்தைகள் மத்தியில் ஏற்படும் புற்றுநோய்களில் 36 சதவீதம் ரத்தப் புற்றுநோய் (Leukemia- particularly lymphoid leukemia),12 சதவீதம் நிணநீர் புற்றுநோய் (Lymphoma), 11 சதவீதம் எலும்பு புற்றுநோய்,10 சதவீதம் மத்திய நரம்பு மண்டல புற்றுநோய்களாக இருப்பது அதிகம் பாதிக்கக்கூடிய புற்றுநோய்களாக உள்ளதும் Indian Paediatrics பத்திரிக்கையில் ஆய்வுக் கட்டுரையாக சமீபத்தில் வெளியாகியுள்ளது.
ICMR-இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழக சமீபத்திய அறிக்கையின் படி, 42 சதவீத அரசு உயர்தர (Tertiary and Multi-Speciality Govt hospitals) புற்றுநோய் சிகிச்சை மையங்களில் மட்டுமே குழந்தைகளுக்கு ஏற்படும் புற்றுநோய்களுக்கு சிகிச்சை அளிக்கும் தனி மையங்கள் உள்ளன. மேலும் 48 சதவீத அரசு உயர்தர புற்றுநோய் சிகிச்சை மையங்களில் மட்டுமே குழந்தைகள் புற்றுநோய்க்கு சிகிச்சை அளிக்கும் நிபுணர்கள் (Paediatric Oncologist) உள்ளனர்.
புற்றுநோய் நிபுணர் பிரசாந்த் மாதூர்,
‘இந்தியாவில் தேசிய குழந்தைகள் புற்றுநோய் கொள்கை’ உருவாக்கப்பட்டு குழந்தைகளுக்கு தனிக் கவனம் புற்றுநோய் சிகிச்சையில் உருவாக்க வேண்டும் என்றும், தேசிய புற்றுநோய், சர்க்கரை நோய், இதய நோய்கள், மூளை பாதிப்பு (Stroke) நோய்கள் தடுப்பிற்கு கொள்கைகள் வகுக்கப்பட்டதுபோல், குழந்தைகள் புற்றுநோய் தடுப்பு குறித்தும், முறையான சிகிச்சை அளிப்பது குறித்தும் கொள்கை முடிவுகள் எடுக்கப்பட வேண்டும் என்றும், தேசிய புற்றுநோய் தடுப்புத் திட்டங்கள் பெரியவர்களுக்கு ஏற்படும் புற்றுநோய்களுக்கே முன்னுரிமை கொடுப்பது சரியான போக்கல்ல என்றும் கூறியுள்ளார். இதுகுறித்து மத்திய மற்றும் மாநில அரசுகள் பரிசீலிக்க வேண்டும்.
2014ல் வெளிவந்த செய்திப்படி, இந்தியாவில் சென்னையில் தான் குழந்தைகள் (0-14 ஆண்டு) மத்தியில் ஏற்படும் புற்றுநோய் பாதிப்பு மிக அதிகம் என்பது தெரியவந்துள்ளது.
சென்னையில் மிக அதிகமாக 10 லட்சம் பேரில் 159 குழந்தைகளுக்கு புற்றுநோய் பாதிப்பு உள்ளது. சென்னைக்கு அடுத்தபடி தலைநகர் டெல்லியில் குழந்தைகள் மத்தியில் அதிக பாதிப்பு உள்ளது. 10 லட்சம் பேரில் 149 குழந்தைகளுக்கு புற்றுநோய் பாதிப்பு உள்ளது.
குறிப்பாக குழந்தைகள் மத்தியில் ஆண்களில் 159/10 லட்சம் என்றும், பெண்கள் மத்தியில் 112/10 லட்சம் என்றும் பாதிப்பு இருப்பதிலிருந்து ஆண் குழந்தைகள் புற்றுநோயால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர் என்பது ICMR ஆய்வில் தெரியவந்துள்ளது.
சில ஆய்வுகளில் ரத்தப்புற்றுநோய் பாதிப்பு 38 சதவீதம் என்றும், நிணநீர் புற்றுநோய் 16 சதவீதம் ஆக இருப்பதும் தெரியவந்துள்ளது.
ரத்த, நிணநீர்புற்றுநோய் பாதிப்பிற்கு கதிர்வீச்சு, பூச்சிக்கொல்லி அதிக பயன்பாடு மிக முக்கிய காரணமாக இருப்பது ஆய்வுகளில் உறுதிசெய்யப்பட்டுள்ளது. பென்சீன் (Benzene) போன்ற கரைப்பான்கள் (Solvents), காற்று மாசுபாடு, புகைத்தல் (Active and passive tobacco inhalation) போன்றவை பிற காரணங்களாக கூறப்படுகிறது.
சமீபத்திய Nature Medicine (நவம்பர், 9, 2023) பத்திரிக்கையில் குறைந்தபட்ச கதிர்வீச்சும் (Ionizing Radiation) 10-15 மில்லிசீவர்ட்ஸ் அளவே ரத்தப்புற்றுநோய் மற்றும் நிணநீர் புற்றுநோய்களை ஏற்படுத்துவது சந்தேகமின்றி உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இந்த புற்றுநோய்களே குழந்தைகளை பாதிக்கும் புற்றுநோய்களில் முதலாம், இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.
சென்னையில் கடந்த 20 ஆண்டுகளில் குழந்தைகள் மத்தியில் ஏற்படும் புற்றுநோய் பாதிப்பு 100 சதவீதம் அதிகரித்துள்ளது. (கண்களில் ஏற்படும் ரெடினோபிளாஸ்டோமா Retinoblastoma உட்பட)
குழந்தைகள் மத்தியில் ஏற்படும் புற்றுநோய்களை அமெரிக்கா போன்ற மேலைநாடுகளில் 80 சதவீதம் முற்றிலுமாக குணப்படுத்தும் வேளையில், தமிழகத்தில் 40 முதல் 50 சதவீதம் குழந்தைகள் மத்தியில் ஏற்படும் புற்றுநோய்கள் மட்டுமே குணப்படுத்தப்படுகிறது.
2035க்குள் 60 சதவீத குழந்தைகள் புற்றுநோயை குணப்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
உலகில் குழந்தைகள் மத்தியில் ஏற்படும் புற்றுநோய் பாதிப்பில் 18 முதல் 20 சதவீதம் பேர் இந்தியக் குழந்தைகளாக உள்ளனர்.
இந்தியாவில் ஆண்டுக்கு 80,000 குழந்தைகள் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர் என மானஸ் கால்வா எனும் நிபுணர் தெரிவித்துள்ளார்.
குழந்தைகள் மத்தியில் புற்றுநோய் பாதிப்பு தமிழகத் தலைநகர் சென்னையில் இந்தியாவிலேயே மிக அதிகமாக இருப்பதால், புற்றுநோய் தடுப்பிலும், ஆரம்பத்தில் கண்டறிந்து உரிய சிகிச்சை அளிப்பதிலும் தமிழக அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். அப்போது தான் விலைமதிப்பற்ற குழந்தைகளின் உயிரை புற்றுநோய் பறித்துக் கொள்வதிலிருந்து காக்க முடியும்.
நன்றி – மருத்துவர் புகழேந்தி.
டாபிக்ஸ்