Butter Bun Dosa : பட்டர் பன் தோசை - தேங்காய் சட்னியோட சேர்த்து சாப்பிட சுவை அள்ளும்!
Sep 27, 2023, 10:00 AM IST
Butter Bun Dosa : பட்டர் பன் தோசை, ரெஸ்டாரென்ட் சுவையில் தேங்காய் சட்னி செய்வது எப்படி?
தேவையான பொருட்கள்
தோசை மாவுக்கு
பச்சரிசி - 250 கிராம்
வெந்தயம் – அரை ஸ்பூன்
அவல் – 125 கிராம்
தேங்காய் - அரை மூடி (துருவியது)
உப்பு – தேவையான அளவு
தோசை மாவில் தாளித்து சேர்க்க
எண்ணெய் – 3 ஸ்பூன்
கடுகு – கால் ஸ்பூன்
உளுந்து – அரை ஸ்பூன்
வர மிளகாய் – 3
கறிவேப்பிலை – 1 கொத்து
செய்முறை
ஒரு பாத்திரத்தில் பச்சரிசி, வெந்தயம் சேர்த்து நன்றாக கழுவி எடுத்துக்கொள்ள வேண்டும். 4 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவேண்டும்.
நீரை வடித்துவிட்டு மிக்ஸியில் போட்டு தேவைக்கேற்ப தண்ணீர் சேர்த்து மென்மையான பேஸ்ட்டாக அரைத்துக்கொள்ள வேண்டும்.
மாவை ஒரு பாத்திரத்தில் சேர்த்துவிட்டு, மீண்டும் மிக்ஸியில் அவல், துருவிய தேங்காய், கொஞ்சம் தண்ணீர் சேர்த்து பேஸ்ட்டாக அரைத்துக்கொள்ளவேண்டும்.
இந்த அவல் பேஸ்ட்டை அரிசி மாவுடன் சேர்த்து இரண்டையும் நன்றாக கலந்துகொள்ள வேண்டும். இதை மூடி போட்டு 8 மணி நேரம் புளிக்க வைக்க வேண்டும்.
8 மணி நேரம் கழித்து, மாவு நன்கு புளித்து பொங்கி இருக்கும். மாவை இரவு முழுவதும் குளிர் சாதன வசதி இல்லாத சாதா அறையில் வைப்பது நல்லது.
காலையில் தோசை வார்க்கும் முன், கடாயில் எண்ணெய் சூடாக்கி கடுகு, உளுந்து, வர மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
இதை புளித்த மாவுடன் சேர்த்து நன்றாக கலந்துவிடவேண்டும். மாவுக்கு தேவையான உப்பை இப்போது சேர்க்க வேண்டும். இரவே மாவுடன் சேர்த்துவிடக்கூடாது.
அடுப்பை சூடாக்கி, உட்புறம் குழிவான தவாவை வைத்து அதில் எண்ணெய் தடவவேண்டும். அதில் ஒரு பெரிய கரண்டியில் மெந்தென மாவை ஊற்றவேண்டும்.
மாவை தேய்க்கக் கூடாது. அதுவாக வட்டமாக பரவும் படி திக்காக ஊற்றவேண்டும். (ஊத்தப்பம் போல) இதை ஒரு மூடியால் மூடி 3 நிமிடங்கள் நன்கு வேகவிடவும். தோசையின் அடிப்பகுதி வெந்து பொன்னிறமாக மாறி தோசையின் ஓரங்கள் எழும்பி வரும்போது தோசையைப் பிரட்டவேண்டும்.
தோசை ஒரே சீராக வெந்திருப்பதை உறுதி செய்து இருபுறமும் திருப்பி வேகவிடவேண்டும். சூடாக எடுத்தவுடன் மேலே சிறிது பட்டர் சேர்த்தால் பட்டர் பன் தோசை சாப்பிட தயாராகிவிடும்.
இறுதியாக, தேங்காய் சட்னியுடன் பட்டர் பன் தோசையை சூடாகப் பரிமாறவேண்டும். அனைத்து சட்னி வகைகள், கோசுமல்லி, அரைத்துவிட்ட சாம்பார், அசைவக் குழம்பு என அனைத்துமே இதற்கு நல்ல காம்போ தான்.
(இந்த செய்முறையில் கூறியுள்ள பொருட்கள் கால்கிலோ அரிசிக்கே. உங்களுக்கு அதிகம் தேவையெனில் பொருட்களின் அளவை கால் கிலோவின் மடங்கில் அதிகரித்துக்கொள்ள வேண்டும்)
ரெஸ்டாரெண்ட் ஸ்டைல் தேங்காய் சட்னி - 1/2 மூடி தேங்காய் துருவியது, 3 டேபிள் ஸ்பூன் பொட்டுக்கடலை, கொஞ்சம் புதினா, அரை மூடி எலுமிச்சை பழச்சாறு, 3 பச்சை மிளகாய், தேவையான உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைத்து பின் ஒரு தாளிப்புக் கரண்டியில் எண்ணெய் சூடானவுடன், கடுகு, உளுந்து, கிள்ளிய வரமிளகாய் 1, சிறிது கறிவேப்பிலை போட்டு நன்கு பொரிய தாளித்து பரிமாற வேண்டும்.
இந்த சட்னிதான் இந்த பட்டர் பன் தோசைக்கு சரியாக பொருந்தக்கூடிய ஜோடி!
நன்றி – வெங்கடேஷ் ஆறுமுகம், ஷ்யாம் ப்ரேம்
டாபிக்ஸ்