Hypertension: உயர் இரத்த அழுத்தம் எனும் ‘சைலண்ட் கில்லர்’.. இப்படி கையாளுங்க.. - மருத்துவர் பேட்டி!
Jun 09, 2023, 04:43 PM IST
சின்ன சின்ன மாற்றங்களை மேற்கொள்ளும் பட்சத்திலேயே நாம் இதனை வெற்றிகரமாக கையாள முடியும்.
உயர் இரத்த அழுத்தம் என்பது இன்று உலகம் முழுவதும் மக்கள் இறப்பிற்கான பிரதான காரணமாக இருக்கிறது. தகவல்களின் படி உயர் இரத்த அழுத்ததின் மொத்த பாதிப்பு 30 சதவீதம் என சொல்லப்படும் நிலையில், 46 சதவீத இளைஞர்களுக்கு இது குறித்தான போதிய விழிப்புணர்வு இல்லை என்று கூறப்படுகிறது.
வயது முதிர்ச்சி, அதிக எடை, அதிகமாக மது அருந்துதல், சத்தில்லாத உணவுகளை சாப்பிடுதல், நீரிழிவு நோய், அதிகமாக உப்பு எடுத்துக்கொள்ளுதல் உள்ளிட்டவை உயர் இரத்த அழுத்ததிற்கான காரணிகளாக பார்க்கப்படுகிறது. ஆனால் இதில் சோகமான விஷயம் என்னவென்றால் அதிகப்படியான மக்களுக்கு உயர் இரத்த அழுத்தம் என்பது எந்தவிதமான அறிகுறிகளுமே இல்லாமல் இருப்பதாக சொல்லப்படுகிறது.
இது குறித்து இதய நோய் நிபுணரும் மருத்துவருமான பிரியா ஹிந்துதாஸ்தான் டைம்ஸ் ஆங்கிலத்திற்கு பேட்டி அளித்திருக்கிறார். அப்போது அவர் பேசியதாவது, “ உயர் இரத்த அழுத்தம் என்பது மாரடைப்பு அல்லது பக்கவாதம் ஏற்படுவதற்கு முக்கிய காரணியாக இருக்கிறது.
பெரிதான எந்த அறிகுறியையும் காட்டாமல் இருக்கும் இந்த நோயினை ‘ சைலண்ட் கில்லர்’ என்று அழைக்கிறார்கள். இந்த பிரச்சினையை முறையாக கவனிக்க தவறும் பட்சத்தில் உடலின் பல்வேறு பாகங்களில் நாம் பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை உருவாகும்.
ஆகையால் உயர் இரத்த அழுத்தத்தை கவனிப்பது இன்றியமையாத ஒன்றாக இருக்கிறது. சின்ன சின்ன மாற்றங்களை மேற்கொள்ளும் பட்சத்திலேயே நாம் இதனை வெற்றிகரமாக கையாள முடியும். ஆரோக்கியமான உணவு முறை, சத்தான உணவுகளில் கவனம் செலுத்தி எடுத்துக்கொள்ளுதல், நாள் ஒன்றிற்கு 5 கிராமிற்கு மேல் உப்பு உண்பதை தவிர்த்தல் உள்ளிட்டவை இரத்த அழுத்தத்தை கையாளுதலில் முக்கியப்பங்கு வகிக்கின்றன.
வாரத்திற்கு 150 நிமிடங்கள் ஏரோபிக் உடற் பயிற்சிகளில் ஈடுபடுவது இரத்த அழுத்தம் சீராக இருக்க உதவிகரமாக இருக்கிறது. அதே போல உடலின் இரத்த அழுத்தம் குறித்த சோதனையையும் முறையாக செய்து கொள்ளுதல் நலம். குறிப்பாக குடும்ப உறுப்பினர்களுக்கு பரம்பரை பரம்பரையாக உயர் இரத்த அழுத்த பிரச்சினை இருக்கும் பட்சத்தில் இன்னும் நாம் கவனமாக இருக்க வேண்டும்” என்றார்.
அதே போல புகைப்பிடித்தலை தவிர்த்தல், சைக்கிளிங் செல்லுதல், 8 முதல் 10 மணி நேர வரை தூங்குதல், அதிகப்படியாக காஃபி எடுத்துக்கொள்ளாமல் இருத்தல், அலுவலத்தில் அதிக நேரம் வேலை செய்தலை தவிர்த்தல் உள்ளிட்டவையும் உயர் இரத்த அழுத்தத்தில் நம்மை பாதுகாக்கும்.
டாபிக்ஸ்