Summer Cool Tips: இந்த 10 உணவுகள் சம்மரில் உங்கள் உடலை கூலாக வைத்திருக்க உதவும்!
Mar 10, 2023, 04:53 PM IST
கோடையில் இந்த 10 உணவுகளை சாப்பிட்டால் உங்கள் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கும்.
கோடை வந்துவிட்டாலே வாழ்க்கை கிட்டத்தட்ட நரகம் போல இப்போதெல்லாம் ஆகிவிட்டது. ஆண்டுக்காண்டு கோடை வெப்பம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதன் உடல் உஷணம் சார்ந்த பல்வேறு நோய்களுக்கு ஆளாக நேரிடுகிறது.
குறிப்பாக வெளியில் பயணம் செய்து வேலைபார்ப்பவர்களின் பாடு பெரும்பாடாகிவிடுகிறது. இந்தக் கோடைக்கால பாதிப்புகளைத் தவிர்க்க குறிப்பிட்ட சில உணவுகளை சாப்பிட்டுவந்தால் தப்பிக்கலாம். உடல் சூடு தணியும்.
கோடைக் கால உணவில் இந்த பருவத்தில் விளையும் பழங்கள், காய்கறிகளைச் சாப்பிடுவதால் நல்ல பலன் கிடைக்கும். பருவத்துக்கேற்று விளையும் உணவுகளே அதற்கான இயற்கை மருந்து என ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவர்களும் பரிந்துரைக்கின்றனர். இவை உடலை குளிர்ச்சியாகவும், நீரேற்றமாகவும் வைத்திருக்க உதவும். உண்ணும் உணவுகள் நீர்ச்சத்தை அதிகரிப்பதாக இருக்க வேண்டும். ஆரோக்கியமான கோடைகால உணவுக்கான சில குறிப்புகள் இங்கே:
இளநீர்: இளநீர் கோடைக்காலத்தில் நீரேற்றமாக இருக்க சிறந்த வழியாகும், அதில் எலக்ட்ரோலைட்டுகள், கலோரிகள் அதிகம் உள்ளன. வெயில்காலத்தில் பணிகள் காரணமாக வெளியில் பயணிப்போருக்கு உடலில் திடீரென நீர்ச்சத்து குறைந்து சன் ஸ்ட்ரோக் வந்துவிடலாம்.அந்த பாதிப்பை இளநீர் கண்டிப்பாகத் தடுக்கும். ஏனென்றால் அதில் நிறைந்திருக்கும் எலக்ட்ரோலைட்களும் தாதுச்சத்துகளும் வைட்டமின்களும் ஆகும்.
தர்பூசணி: வீடு, அலுவலகம், வர்த்தக மால்கள், தியேட்டர்களில் இப்போது ஏசி குளிர் சாதனங்கள் இல்லாமல் இல்லை. அதுபோல தர்பூசணியும் ஒரு ஏசி பழம் என்றால் அதை வேடிக்கையாக நினைக்க வேண்டாம். காரணம் தர்ப்பூசணியில் நிறைந்திருக்கும் வைட்டமின்கள் ஏயும், சியும். கூடவே அபரிமிதமான நீர்ச்சத்தும் கொண்டுள்ளது. எனவேதான் தர்பூசணியை ஏசி பழம் என்று அழைக்கலாம். இது ஒரு சிறந்த கோடைக்காலப் பழமாகும்,
வெள்ளரிக்காய்: ஏழைகளின் காவலன் வெள்ளரிக்காய். ஏழை எளிய மக்கள்தான் பெரும்பாலும் கொளுத்தும் வெயிலிலும் கடுமையான வேலைகளைச் செய்வார்கள். அடித்து வாங்கும் வெயிலில் அவர்களது உடலில் இருந்து வியர்வை ஆறாகக் கொட்டும். அத்தனையும் அவர்களது உடலில் உள்ள நீர்ச்சத்து தான். எனவே அவர்கள் இழக்கும் நீர்ச்சத்தை ஈடுகட்டுவதில் வெள்ளரிக்காய் ஒரு சிறந்த தேர்வாக இருக்கும். இதேதான் மற்றவர்களுக்கும். குழந்தைகள் மைதானங்களில் விளையாடுவார்கள். வியர்த்து ஒழுகி சோர்ந்து விடுவார்கள். அவர்களுக்கு லஞ்ச் பாக்ஸில் வெள்ளரிக்காயை வெட்டித் துண்டுகளாக்கி சற்று மிளகு மிகக் கொஞ்சமாக உப்பு சேர்த்து கொடுத்து அனுப்புங்கள். அன்றாடம் எந்த நேரத்திலும் வெள்ளிரிக்காயை அப்படியே பச்சையாகவோ அல்லது சாலட்களில் சேர்த்தும் சாப்பிடலாம்.
நீர்மோர்: தயிரில் புரோபயாடிக்குகள் அதிகளவு நிறைந்துள்ளது. குளிர்ச்சி உணவு. அதை அப்படியே சாப்பிடாமல் நிறைய நீர் சேர்த்து, ஒரு பச்சைமிளகாயை துண்டுகளாக நறுக்கிப் போட்டு, சிறிது கறிவேப்பிலை, ஒரு சிட்டிகை பெருங்காயம் சேர்த்து நல்ல நீர்மோராகப் பருகலாம்.
நுங்கு: கோடைக்காலம் வந்துவிட்டால் கூடவே நுங்கும் வந்துவிடும் என்பார்கள். கோடை உஷ்ணத்தை தணிக்க நுங்கு மிகவும் சிறந்தது. அதிலிருந்து எடுக்கப்படும் பதநீர் உடல் சூட்டை வெகுவாகத் தணித்து உடலில் நீர்ச்சத்தை தக்க வைக்கும். கோடைக்காலத்தைத் தாங்கக்கூடிய ஆற்றலை உடலுக்குத் தரும்.
சிட்ரஸ் பழங்கள்: சாத்துக்குடி, ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற சிட்ரஸ் பழங்களில் வைட்டமின் சி அதிகமாக உள்ளது. எலுமிச்சை சாறில் உப்பு அல்லது சர்க்கரை சேர்த்து குடித்தால் புத்துணர்ச்சியூட்டும் ஊட்டச்சத்துகளும் தாதுக்களும் நிறைய கிடைக்கும். மதிய உணவுக்கு இந்தப் பழங்கள், காய்கறிகள் சாலட்டுகளை மட்டும் சாப்பிடலாம். கோடை உஷ்ணத்தால் ஏற்படும் வயிறு வலி ஏற்படாது.
இலை காய்கறிகள்: கீரை, முட்டைக்கோஸ், அருகம்புல் போன்ற இலை காய்கறிகளில் வைட்டமின்கள், தாதுக்கள் அதிகம் உள்ளன. சாலடுகள் அல்லது ஸ்மூத்திகளில் பயன்படுத்தலாம். இலை காய்கறிகளில் அதிகளவு நீர்ச்சத்து நிரம்பியிருப்பதால் அவற்றை கோடையில் சமைத்து சாப்பிடுவதைக் காட்டிலும் பச்சையாகச் சாப்பிட்டால் பலன் அதிகம். உடல் உஷ்ணத்தைத் தணிக்க பெரிதும் உதவும்.
கற்றாழை: உடல் சூட்டைத் தணிப்பதில் கற்றாழை முக்கியத்துவம் பெறுகிறது. அதன் தோலை சீவி விட்டு நடுவில் உள்ள ஜெல்லை எடுத்து சிறிது மோர், எலுமிச்சை சாறு கலந்து கற்றாழை சாறு குடித்தால் உடல் ஜில்லென்று ஆகிவிடும். சருமத்துக்கு நன்மை விளைவிக்கும் சிறந்த ஊட்டச்சத்துகளையும் கொண்டுள்ளது.
அவகேடோ: வெண்ணெய் பழம் ஆரோக்கியமான கொழுப்புகளின் சிறந்த மூலமாகும். உடல் உஷ்ணத்தை தணிக்க சாலட்களில் அல்லது டோஸ்டில் பரப்பி சாப்பிடலாம்.
கம்மங்கூழ்: கம்மங்கூழ் குளிர்ச்சித்தன்மை கொண்டது. அதிகளவு ஊட்டச்சத்து நிறைந்தது. சாலையோரங்களில் இப்போதெல்லாம் சுகாதாரமாகவும் தரமான முறையிலும் கம்மங்கூழை செய்து விற்கின்றனர். விலை மலிவு என்றாலும் பலன் மிகப் பெரிது.
டாபிக்ஸ்