Lingusamy: அவமானப்படுத்தி அனுப்பிய வித்யாசாகர்.. நடுஇரவில் சித்தர் கொடுத்த சத்து! - காதல் பிசாசே பாடல் உருவான விதம்!
Aug 27, 2024, 07:45 PM IST
Lingusamy: இதையடுத்து பாடலுக்கான சிச்சுவேஷனை லிங்குசாமி சொல்ல, அது ஒரு கடிதம் எழுதுவது போன்று அமைந்து இருந்தது. ஆனால் அதில் அன்புள்ள, நலம், நலம் அறிய ஆவல் உள்ளிட்ட வார்த்தைகளெல்லாம் இடம்பெறக் கூடாது என்று வித்யாசாகர் மிகவும் கறாராக சொல்லிவிட்டார். - காதல் பிசாசே பாடல் உருவான விதம்!
Lingusamy: ரன் படத்தில் இடம் பெற்ற காதல் பிசாசே பாடல் உருவாக்கத்தின் கதையை மேடை பேச்சு ஒன்றில் பாடலாசிரியர் யுகபாரதி பேசினார்.
இது குறித்து அவர் பேசும் போது, லிங்குசாமி இயக்கிய ‘ஆனந்தம்’ படத்தில் பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன் பாடலை நான் எழுதினேன். அந்தப் பாடல் மிகப்பெரிய ஹிட் அடித்தது. இந்த நிலையில், அவர் இயக்கிய ரன் படத்திலும், எனக்கு பாடல் எழுத வாய்ப்பு கொடுத்தார். அந்த படத்திற்கு வித்யாசாகர் இசையமைப்பாளராக கமிட் செய்யப்பட்டு இருந்தார். இதையடுத்து என்னை ஒருநாள் அவரிடம் லிங்குசாமி அழைத்துச் சென்றார். அவரை பார்க்கச் சென்ற போது, நான் என்னுடைய இரண்டு கவிதை தொகுப்பு புத்தகங்களை எடுத்துக்கொண்டு சென்றேன்.
கறார் காட்டிய வித்யாசாகர்
லிங்குசாமி என்னை அவரிடம் அறிமுகப்படுத்தினார். இதையடுத்து என்னை மேலும் கீழுமாக பார்த்த வித்யாசாகர், நான் கொடுத்த புத்தகங்களையும் வாங்கி, அலட்சியமாக தூக்கிப்போட்டார். இது எனக்கு மிகப்பெரிய அவமானமாக பட்டது. அத்தோடு நான் எழுதி ஹிட்டான பாடலைப் பற்றி பேசிய அவர், அந்தப் பாடலை தெரியாதது போல காண்பித்துக் கொண்டார்.
மேலும் பல்லாங்குழி என்பது வட்டமாகவா இருக்கும் என்ற ரீதியில் அவர் என்னிடம் கேள்வி கேட்டார். இதையடுத்து நான் அவருக்கு பதில் கூறினேன். ஆனால், அவரோ அதையும் மிகவும் அலட்சியமாகவே பார்த்தார். இது என்னுடைய கோபத்தை மேலும் அதிகப்படுத்தியது. இதையடுத்து பாடலுக்கான சிச்சுவேஷனை லிங்குசாமி சொல்ல, அது ஒரு கடிதம் எழுதுவது போன்று அமைந்து இருந்தது. ஆனால் அதில் அன்புள்ள, நலம், நலம் அறிய ஆவல் உள்ளிட்ட வார்த்தைகளெல்லாம் இடம்பெறக் கூடாது என்று வித்யாசாகர் மிகவும் கறாராக சொல்லிவிட்டார்.
கடிதம் எழுதுவது போன்ற பாடல் என்கிறீர்கள்.. ஆனால் அதில் இந்த வார்த்தைகள் எல்லாம் இடம்பெறக்கூடாது என்றால், அந்த பாடலை எப்படி எழுத முடியும் என்ற ரீதியில் எனக்கு கேள்வி எழுந்தது. இதை நான் அவரிடம் சொன்ன பொழுது, அவர் அதை பொருட்படுத்தவே இல்லை. இதையடுத்து இவர் நம்மை பாடல் எழுத வைக்கக்கூடாது என்பதற்காக வேண்டுமென்றே சொல்கிறார் என்று நினைத்து கோபப்பட்டு வெளியே கிளம்பிவிட்டேன். இதையடுத்து எனக்கு இரவு போன் செய்த லிங்குசாமி, நீங்கள் எழுதி வாருங்கள் என்றார்.
வேண்டுமென்றே செய்கிறார்
இதையடுத்து இல்லை இல்லை…அவர் வேண்டுமென்றே என்னை தவிர்க்கிறார். நான் எழுதவில்லை என்று சொன்னேன். ஆனாலும் லிங்குசாமி என்னை விடவில்லை. நீங்கள் எழுதி வாருங்கள் அவர் அதை வேண்டாம் என்று சொன்னால், பின்னர் பார்த்துக் கொள்ளலாம் என்றார். இதையடுத்து நான் அதை எப்படி எழுதலாம் என்று நடு இரவில் உட்கார்ந்து யோசித்துக் கொண்டிருந்தேன். அப்போது ஒரு சித்தர் பாடல் ஒன்றை படித்துக்கொண்டிருந்தேன் அதில் ஒரு பெண்ணை பிசாசு என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இதையடுத்துதான் நான் காதல் பிசாசு என்ற வார்த்தையை முதல்வரியாக எழுதினேன். இதற்கிடையே என்னுடைய நண்பன் எனக்கு போன் செய்து நன்றாக இருக்கிறாயா என்று கேட்டான். அதற்கு நான் இருக்கிறேன் என்று சொன்னதும், ஒன்று நன்றாக இருக்கிறேன் என்று சொல், இல்லை என்றால் இல்லை என்று சொல். இரண்டிற்கும் நடுவில் சொன்னால் எப்படி என்று கேட்டான். அந்த சமயத்தில்தான் எனக்கு சௌக்கியம் என்ற வார்த்தை உதித்தது. இதையடுத்து அந்த வார்த்தையை பயன்படுத்தி காதல் பிசாசே காதல் பிசாசே ஏதோ சௌக்கியம் என்று எழுதினேன்.
பாடல் வரிகளை எழுதிச் செல்லும் பொழுது போகிற வழியிலேயே வாகனம் விபத்துக்குள்ளானது. ஏற்கனவே இருந்த பரபரப்பில் இந்த விபத்து ஏற்பட்டதால், இப்படியே செத்துப் போனால் பரவாயில்லை என்ற எண்ணம் வந்தது. இதையடுத்து அந்த வரியையும் அதில் இணைத்தேன். அப்படித்தான் அந்த பாடல் உருவானது. இந்த பாடலை நான் வித்தியாசாகரிடம் சென்று கொடுக்கும் பொழுது அவர் அதை வேண்டாம் என்று சொல்வார் என்று எதிர்பார்த்தேன் ஆனால், அவர் அந்த பாடலை பார்த்துவிட்டு பாடல் வரிகள் நன்றாக இருக்கிறன. இனி என்னுடைய எல்லா படத்திலும் இனி நீ பாடல் எழுதுவாய் என்று சொன்னார். அப்படி அவருடன் கிட்டத்தட்ட 300 பாடல்கள் நான் எழுதிவிட்டேன்” என்று பேசினார்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
டாபிக்ஸ்