SJ Surya:‘லாரி மட்டும் நேரா வந்திருந்தா’; எஸ்.ஜே.சூர்யா சொன்ன அதிர்ச்சி தகவல்!
Feb 23, 2023, 02:09 PM IST
நடிகர் விஷால் நடித்து வரும் மார்க் ஆண்டனி படத்தில் விபத்து ஏற்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், சம்பவ இடத்தில் என்ன நடந்தது என்பது பற்றி எஸ்.ஜே.சூர்யா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார்
விஷால், எஸ்.ஜே சூர்யா ஆகியோர் இணைந்து நடித்து வரும் திரைப்படம் ‘மார்க் ஆண்டனி’. ‘த்ரிஷா இல்லன்னா நயன்தாரா’, ‘AAA’, உள்ளிட்ட படங்களை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இந்தப்படத்தை இயக்கி வருகிறார். இந்தப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், சென்னை பூந்தமல்லியில் உள்ள ஈவிபி ஃபிலிம் சிட்டியில் ஆக்ஷன் தொடர்பான காட்சிகள் நடந்து வருகிறது.
அதன் ஒரு பகுதியாக அண்மையில் லாரி ஒன்று சுவரை உடைத்து வருபவது போன்ற காட்சி படமாக்கப்பட்டு கொண்டிருந்த நிலையில், அந்த லாரி தனது கட்டுப்பாட்டை இழந்து நிற்காமல் ஓடியது. இந்த விபத்தில் நடிகர் விஷால் மற்றும் எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் நூலிழையில் உயிர் தப்பினார். இது தொடர்பான வீடியோ நேற்று சமூகவலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் நடிகர் எஸ்.ஜே.சூர்யா ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்தது என்ன என்பது குறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டு இருக்கிறார்.
இது குறித்து அவர் பதிவிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “ கடவுளே உனக்கு உண்மையிலேயே நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். நொடிப்பொழுதில் உயிர் தப்பினோம். படப்பிடிப்பில் லாரியானது நேராக வருவதிற்கு பதிலாக கொஞ்சம் குறுக்காக வந்து விபத்து ஏற்பட்டு விட்டது. லாரி மட்டும் நேராக வந்திருந்தால் நாங்கள் இருவரும் இப்போது ட்வீட் செய்து கொண்டிருக்க மாட்டோம். கடவுளுக்கு நன்றி, நாங்கள் அனைவரும் தப்பித்துவிட்டோம்” என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
முன்னதாக விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில், “ சில நொடிகளில்.. சில அங்குலத்தில் எனது வாழ்வு காப்பற்றப்பட்டு இருக்கிறது. கடவுளுக்கு நன்றி.. மீண்டும் படப்பிடிப்பில்” என்று அவர் பதிவிட்டு இருந்தார். ரித்து வர்மா கதாநாயகியாக நடித்து வரும் இந்தப்படத்திற்கு ஜிவி பிரகாஷ்குமார் இசையமைத்து வருவது குறிப்பிடத்தக்கது.
டாபிக்ஸ்