27 Years of Poove Unakkaga: காதல் தோல்வியால் முதல் வெற்றி கண்ட விஜய்
Feb 15, 2023, 07:10 AM IST
வளர்ந்து வரும் ஹீரோவாக இருந்த விஜய்யை அனைத்து தரப்பு வயதினரும் கொண்டாடும் ஹீரோவாக மாற்றியதில் பூவே உனக்காக திரைப்படம் பெரும் பங்கு வகித்தது. விஜய்யின் சினிமா கேரியரை இந்த படத்துக்கு முன் பின் என பிரித்து கூறலாம். இதேநாளில்தான் 1996இல் பூவே உனக்காக வெளியாகி ஆண்டின் சூப்பர் ஹிட் படமாக அமைந்தது.
விக்ரமன் இயக்கியிருக்கும் இந்தப் படம் அவரது முந்தைய படங்களின் சாயல் இல்லாமல் காதல், காமெடி, குடும்ப உறவு, செண்டிமென்ட் என அனைத்து ஜனரஞ்சக அம்சங்களும் இடம்பெற்ற படமாக அமைந்திருந்தது. காதலித்த பெண்ணுக்காக பிரிந்து கிடக்கும் இரு குடும்பங்களை சேர்த்து வைக்கும் ஒன் லைன் கதையான இந்த படத்தின் நேர்த்தியான திரைக்கதை, விஜய் மற்றும் படத்தில் நடித்த நடிகர்களின் யதார்த்தமான நடிப்புமே ரசிகர்கள் கவர பிரதான காரணமாக அமைந்தது.
இதற்கு அடுத்தபடியாக படத்தில் இடம்பிடித்த பாடல்கள். எஸ்ஏ ராஜ்குமார் இசையில் துள்ளல் பாடலாக ஓபியாரி பானி பூரி, காதல் பாடலாக சொல்லமலே, அனைவரையும் தாளம் போட வைத்த ஆனந்தம் ஆனந்தம், சிக்லெட்டு சிட்டுகுருவி போன்ற பாடல்கள் இன்றும் மனதில் நீங்காமல் ஒலித்துக்கொண்டிருக்கின்றன.
படத்தின் கதாபாத்திரங்கள் அனைவருக்கும் வளைந்து கொடுக்கும் விதமாக அமைந்திருந்த விஜய்யின் கதாபாத்திரம் படைப்பு அவரை தேர்ந்த நடிகராக வெளிப்படுத்த உதவியது. அத்தொடு இல்லாமல் அவரின் அற்புதமான டான்ஸ் திறமையை காட்டும் வாய்ப்பும் அமைந்து ரசிகர்களின் பாராட்டையும் பெற்றது. படத்தில் எந்தவொரு காட்சியும் அநாவசியாமாக இல்லாமல், கதை ஓட்டத்துடன் முழுமையாக பொருந்திபோனதே, 27 ஆண்டுகள் கழித்தும் படத்தை பற்றி நினைவு கூறுவதற்கான சான்றாக உள்ளது.
காமெடிக்காக சார்லி இருந்தாலும், வளைந்து திணிக்கப்பட்ட காமெடிக்கள், அல்லது அதற்கென தனியாக டிராக் ஏதும் இல்லாமல் இருந்ததோடு, படத்தில் இடம்பெற்ற நடிகர்களும் பெரும்பாலோனோர் நகைச்சுவையை வெளிப்படுத்தும் காட்சிகள் இடம்பிடித்திருப்பது இந்த படத்தின் ஹைலைட்களில் முக்கியமானதாக உள்ளது.
இந்தப் படத்தின் பிற்பகுதியில் விஜய்யின் பிளாஷ்பேக்கில், அஞ்சு அரவிந்தை காதலிப்பதும், ஆனால் அவர் வேறொருவரை காதலிப்பது தெரிந்த பின்னர் அவர்களின் காதலுக்கு பிரிந்துபோன குடும்பத்தை சேர்த்து வைக்கும் பொறுப்பை ஏற்றிருப்பதும் தெரிய வந்த பின்னர் கிளைமாக்ஸ் எந்த மாதிரியாக அமைந்திருக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்படும் நிலையில், சங்கீதாவுடன் திருமணம் செய்து வைக்க அவரது காதலித்த அஞ்சு அரவிந்த் பேசு காட்சியும், அதில் இடம்பிடித்த வசனங்கள் காதல் மீதான மரியாதையை பன்மடங்கு உயர்த்தி காட்டியது.
ஒன்சைடு லவ்க்காக இவ்வளவு பீல் பன்றீங்களே என்ற அஞ்சு அரவிந்த் சொல்வதற்கு, தனது காதல் எப்படிப்பட்டது என்பதை உதரிந்து போன பூவை மீண்டும் செடில ஒட்ட வைக்க முடியாது என விஜய் சொல்லும் விளக்கம் காதல் தோல்வியாளர்களை தேற்றும் வார்த்தைகளாக நிலைத்து நிற்கிறது.
ஒன்சைடு காதல் பற்றியும், அதன் மகத்துவத்தையும் கூறும் விதமாக தனுஷ் நடித்து 2010இல் வெளியான குட்டி படம் அமைந்திருந்தது என்றால், காதல் விட்டுக்கொடுப்பதால் கிடைக்கும் வலியும் சுகமானதுதான் என்ற தத்துவத்தை கடந்த நூற்றாண்டிலேயே பூவே உனக்காக படம் உணர்த்தியது.
இது ஒரு சுகமான முடிவுதான் என்று கூறி காதல் தோல்வி மூலம் தனது முதல் வெற்றி கண்டார் விஜய்.
டாபிக்ஸ்