தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Vijay: வெல்லப்போவதற்கான முன்னறிவிப்பு - த.வெ.க-வுக்கு கிடைத்த அங்கீகாரத்தைப் பகிர்ந்த விஜய்; மாநாட்டிற்கும் அனுமதி

Vijay: வெல்லப்போவதற்கான முன்னறிவிப்பு - த.வெ.க-வுக்கு கிடைத்த அங்கீகாரத்தைப் பகிர்ந்த விஜய்; மாநாட்டிற்கும் அனுமதி

Marimuthu M HT Tamil

Sep 08, 2024, 12:11 PM IST

google News
Vijay: வெல்லப்போவதற்கான முன்னறிவிப்பு என தமிழக வெற்றிக் கழகத்திற்குக் கிடைத்த தேர்தல் ஆணைய அங்கீகாரத்தைப் பகிர்ந்த விஜய் மற்றும் அக்கட்சியின் முதல் மாநாட்டிற்கும் அனுமதி கிடைத்த செய்தியைக் கீழே பார்ப்போம்.
Vijay: வெல்லப்போவதற்கான முன்னறிவிப்பு என தமிழக வெற்றிக் கழகத்திற்குக் கிடைத்த தேர்தல் ஆணைய அங்கீகாரத்தைப் பகிர்ந்த விஜய் மற்றும் அக்கட்சியின் முதல் மாநாட்டிற்கும் அனுமதி கிடைத்த செய்தியைக் கீழே பார்ப்போம்.

Vijay: வெல்லப்போவதற்கான முன்னறிவிப்பு என தமிழக வெற்றிக் கழகத்திற்குக் கிடைத்த தேர்தல் ஆணைய அங்கீகாரத்தைப் பகிர்ந்த விஜய் மற்றும் அக்கட்சியின் முதல் மாநாட்டிற்கும் அனுமதி கிடைத்த செய்தியைக் கீழே பார்ப்போம்.

Vijay: தமிழக வெற்றிக் கழகத்திற்கு அங்கீகாரம் கிடைத்ததை அக்கட்சியின் தலைவரும் நடிகருமான விஜய் உறுதி செய்தார். மேலும், அக்கட்சியின் முதல் மாநாட்டுக்கு காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது.

இதுதொடர்பாக நடிகர் விஜய் வெளியிட்டுள்ள மடலில், ‘’என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களே,“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்கிற அடிப்படைக்கோட்பாட்டோடு நாம் அரசியலை அணுகுவதும் ஒருவிதக் கொள்கைக் கொண்டாட்டமே. எனினும், முழுமையான கொண்டாட்டத்திற்காகவும், அரசியல் கட்சிக்கான சட்டப்பூர்வமானப் பதிவுக்காகவுமே நாம் இதுவரை காத்திருந்தோம். இப்போது அதற்கான அனுமதியும் கிடைத்துவிட்டது.

தமிழக வெற்றிக் கழகத்தை அரசியல் கட்சியாகப் பதிவு செய்வதற்காக, கடந்த பிப்ரவரி மாதம் 2ஆம் தேதி இந்தியத் தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பித்திருந்தோம். அதைச் சட்டப்பூர்வமாகப் பரிசீலித்த நமது நாட்டின் தேர்தல் ஆணையம், தற்போது நம் தமிழக வெற்றிக் கழகத்தை ஓர் அரசியல் கட்சியாகப் பதிவு செய்து, தேர்தல் அரசியலில், பதிவுசெய்யப்பட்ட கட்சியாகப் பங்குபெற அனுமதி வழங்கி உள்ளது. இதை உங்களோடு பகிர்ந்துகொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

திசைகளை வெல்லப்போவதற்கான முன்னறிவிப்பு: நடிகர் விஜய்

திசைகளை வெல்லப் போவதற்கான முன்னறிவிப்பாக, இப்போது முதற்கதவு நமக்காகத் திறந்திருக்கிறது. இச்சூழலில், நமது கழகத்தின் கொள்கைப் பிரகடன முதல் மாநில மாநாட்டிற்கான ஆயத்தப்பணிகள் தொடங்கியுள்ள நிலையில் அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும்வரை காத்திருங்கள்.

தடைகளைத் தகர்த்தெறிந்து, கொடி உயர்த்தி, கொள்கை தீபம் ஏந்தி, தமிழக மக்களுக்கானத் தலையாய அரசியல் கட்சியாகத் தமிழ்நாட்டில் வலம் வருவோம். வெற்றிக் கொடியேந்தி மக்களைச் சந்திப்போம்! வாகை சூடுவோம்!’ என தமிழக வெற்றிக்கழகத்தின் சார்பில் நடிகர் விஜய் தெரிவித்துள்ளார்.

நிபந்தனைகளுடன் காவல் துறை அனுமதி:

இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி வழங்கியிருக்கிறது. முன்பாக, 21 நிபந்தனைகளை வழங்கியிருந்தது. நிபந்தனைகளோடு காவல்துறை தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாட்டிற்கு அனுமதி வழங்கியுள்ளது. அனுமதி கடிதத்தை தமிழக வெற்றிக் கழகத்தின் வழக்கறிஞரிடம் விழுப்புரம் மாவட்ட காவல் துறை வழங்கியுள்ளது.

விஜய் ரசிகர்கள் செய்த களச்செயல்களும் நடிகர் விஜய்யின் பொதுப்பணியும்:

முன்னதாக விஜய் தனது ரசிகர் மன்றத்தை ஒரு பொது நல அமைப்பாக மாற்றி, பத்து ஆண்டுகளுக்கும் மேலாக தனது அரசியல் கனவை வளர்த்து வந்தார். அவரது அரசியல் பிரவேசத்திற்காக விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள், இலவச உணவு விநியோகம், கண் தானம், இரவு நேர ஆய்வு மையங்கள் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வந்தனர்.

அண்மையில் 10, 12ஆம் வகுப்புகளில் மாவட்ட அளவில், ஊரக அளவில் முதலிடம் பெற்றவர்களை விஜய் விழாவாக ஏற்பாடு செய்து கெளரவித்தார். மேலும் பி.ஆர்.அம்பேத்கர், பெரியார் ஈ.வே.ராமசாமி மற்றும் காமராஜ் போன்ற தலைவர்கள் மற்றும் அவர்களின் லட்சியங்களைப் பற்றி படிக்குமாறு மாணவர்களை வலியுறுத்தினார். கன மழையால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள தென் மாவட்டங்களுக்கு அவர் சமீபத்தில் சென்று, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்தார்.

மேலும் கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் அருந்தி பலரை உயிரிழந்தபோது, சம்பவ இடத்திற்கு நேரில் சென்ற விஜய் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து ஆறுதலும்,நிவாரணமும் வழங்கினார்.

முன்னதாக தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக இருந்த எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர், அரசியலுக்குள் நுழைந்து தமிழக முதலமைச்சராகப் பதவி வகித்தனர். அதேபோல், திரைக்கதை எழுத்தாளரும் வசனகர்த்தாவுமான கலைஞர் கருணாநிதி தமிழகத்தின் ஐந்துமுறை முதலமைச்சராக இருந்துள்ளார். அந்த வழியில் தேமுதிக என்னும் கட்சியைத் தொடங்கி, மறைந்த நடிகர் விஜயகாந்த், எதிர்க்கட்சி அந்தஸ்துவரைப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி