தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  விஜய்க்கு வேகமும் தாகமும் இருக்கு.. தன்னை அறியாமல் பிரமித்தேன்.. தந்தை எஸ்.ஏ.சி நெகிழ்ச்சி

விஜய்க்கு வேகமும் தாகமும் இருக்கு.. தன்னை அறியாமல் பிரமித்தேன்.. தந்தை எஸ்.ஏ.சி நெகிழ்ச்சி

Nov 22, 2024, 12:23 PM IST

google News
நடிகர் விஜய், தன் முதல் அரசியல் மாநாட்டில் பேசியதைக் கேட்டு தன்னையும் அறியாமல் பிரமித்தேன் என எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய், தன் முதல் அரசியல் மாநாட்டில் பேசியதைக் கேட்டு தன்னையும் அறியாமல் பிரமித்தேன் என எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜய், தன் முதல் அரசியல் மாநாட்டில் பேசியதைக் கேட்டு தன்னையும் அறியாமல் பிரமித்தேன் என எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு திட்டமிட்டபடி கடந்த 27ம் தேதி விக்கிரவாண்டி வி.சாலையில் நடைபெற்றது. இந்த மாநாட்டை நடத்துவதற்கு தமிழ்நாடு அரசு பல கட்டுப்பாடுகளை விதித்து வந்தது. மேலும் மழை போன்ற பெரும் இடர்களும் குறுக்கிட்டது. இருப்பினும், மாநாடு எந்தத் தடையும் இன்றி நடந்து முடிந்தது.

மக்களுக்கு நன்றி

இதையடுத்து, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், மாநாட்டை வெற்றிகரமாக நடத்த உதவிய அனைவருக்கும் நன்றி தெரிவித்து கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில், விஜய்யின் தந்தையும் நடிகரும் இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் விஜய்யின் முதல் மாநாடு குறித்து தொகுப்பாளர் ஒருவருடன் பேசியுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

விஜய் கலக்கிட்டார்

அந்த வீடியோவில், "மாநாட்டில் விஜய் கலக்கிவிட்டார். நான் இப்படி பேசுவார் என நினைக்கவே இல்லை. அரண்டு போய்விட்டேன். என் மகனின் வேகத்தை அன்று தான் முதலில் பார்த்தேன். சினிமாவில் நடித்து பார்த்திருக்கிறேன். ஆனால், மேடையில் அப்படி பேசியதை பார்த்து பிரமித்துவிட்டேன்.

முதலில் அமைதியாகத் தான் பார்த்துக் கொண்டே இருந்தேன். பின்பு என்னை அறியாமல் கைதட்ட ஆரம்பித்துவிட்டேன். விஜய் மனதிற்குள் இருக்கும் வேகம், சமூகத்துக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற தாகமும் சேர்ந்து தான் அப்படி விஜய்யை பேச வைத்தது" எனக் கூறியுள்ளார்.

விஜய் அரசியல் வருகை

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திர நடிகரான விஜய் அரசியல் கட்சி தொடங்குவார் என அவரது ரசிகர்கள் பல ஆண்டுகளாக காத்திருந்தனர். அதற்குத் தீனிபோடும் விதமாக, சமீபத்தில் ’’தமிழக வெற்றிக் கழகம்’’ என்ற கட்சிப்பெயரை அறிவித்து, அதைத் தேர்தல் ஆணையத்தில் பதிவும் செய்திருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார், விஜய்.

இதனைத் தொடர்ந்து, அவரது ரசிகர் மன்றமான தளபதி மக்கள் இயக்கம் அப்படியே, அவரது கட்சியாக மாறியது. அதனைத் தொடர்ந்து பல்வேறு அரசியல் பணிகளில் ஈடுபடத் தொடங்கினார், விஜய். அதைத் தொடர்ந்து வரும் 2026 சட்டப்பேரவைத் தேர்தல் என்பதுவே தமது இலக்கு என தெளிவாகத் தெரிவித்திருந்தார், விஜய்.

முதல் மாநாடு

இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு அக்டோபர் 27ஆம் தேதி, விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் நடக்கும் என அறிவிக்கப்பட்டது.

இதற்காக விக்கிரவாண்டி வி.சாலையில் உருவாகி வரும் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டுத் திடலில் தமிழன்னை, சேரர், சோழர், பாண்டியர், சுதந்திரப்போராட்ட வீராங்கனை வேலுநாச்சியார், பெருந்தலைவர் காமராஜர், பெரியார், பி.ஆர். அம்பேத்கர், அஞ்சலையம்மாள் ஆகியோரின் கட் அவுட்கள் வைக்கப்பட்டன.

மேலும் கட்சியின் கொடி 10 ஆண்டுகள் பறக்கும் வகையில் திட்டமிட்டு 101 அடி உயர கொடி ஏற்றப்பட்டது.

தொண்டர்களுக்கு அறிவுரை

மாநாட்டிற்கு வரும் தொண்டர்கள் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து விஜய் முன்னதாகவே கடிதம் ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், அந்தந்த மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட கேபின்களில் தொண்டர்கள் நண்பகல் 12 மணி முதல் 2 மணிக்குள் வந்து அமர வேண்டும். அதற்கு முன்னதாக எக்காரணம் கொண்டும் தொண்டர்கள் மாநாடு நடக்கும் இடத்திற்கு வரக் கூடாது. போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது என பலவற்றை குறிப்பிட்டிருந்தார்.

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி