காதல் மனைவிக்கு எடுத்து காவியமாய் மாற்றிய டிஆர்: 40ம் ஆண்டில் உயிருள்ள வரை உஷா!
Mar 04, 2023, 07:15 AM IST
40 Years Of Uyirullavarai Usha: வெள்ளி விழா கொண்டாடிய உயிருள்ள வரை உஷா திரைப்படம், 40 ஆண்டுகளை கடந்திருக்கிறது. ஆனாலும், இந்த உலகில் கடைசி உயிர் இருக்கும் வரை, உயிருள்ள வரை உஷா என்கிற காவியம் இருந்து கொண்டே தான் இருக்கும்!
இயக்குனராக, தயாரிப்பாளராக, இசையமைப்பாளராக, நடிகராக, பாடலாசிரியராக, ஒளிப்பதிவாளராக, வசனகர்த்தாவாக, இன்னும் என்னவெல்லாம் சினிமாவில் இருக்கிறதோ, அத்தனை பொறுப்பையும் ஒரே ஆளாக சுமந்தவர் டி.ராஜேந்தர். அந்த டி.ராஜேந்தருக்கு அடையாளமாகவும், தனித்துவமாகவும் அமைந்த படம் உயிருள்ள வரை உஷா.
ஒரு தலை ராகம், ரயில் பயணங்களில் படங்களுக்கு அடுத்ததாக டி.ராஜேந்தர் இயக்கிய படம் உயிருள்ள வரை உஷா. தஞ்சை சினி ஆர்ட்ஸ் என்கிற பெயரில் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி, டி.ராஜேந்தர் தயாரித்த முதல் படம் தான், உயிருள்ள வரை உஷா.
தனது படங்களுக்கு 9 எழுத்துக்களில் பெயர் வைக்கும் டி.ராஜேந்தரின் ஃபார்முலா தொடங்கியதும் இந்த படத்தில் தான். அது மட்டுமல்ல, தனது முதல் படமான ஒரு தலை ராகம் படத்தில் இரண்டாவது ஹீரோயினாக நடித்த உஷா மீது, டி.ராஜேந்தருக்கு காதல் ஏற்பட்டது. காதலிக்கு தாஜ்மஹால் தான் கட்ட வேண்டுமா என்ன? காலத்தால் அழியாத படத்தையும் கொடுக்கலாம் என முடிவு செய்தார் டி.ஆர்.
தன் காதலி பெயரில், ‘உயிருள்ள வரை உஷா’ என்று பெயர் வைத்து, எடுத்த படம் தான் அது. நடிகர் கங்கா, நளினி ஆகியோரை அறிமுகம் செய்து வைத்ததும் இந்த படம் தான். அதுமட்டுமல்லாமல், பிரமாண்ட செட் அமைப்பதில் டி.ஆர்., தனித்துவமானவர் என்கிற ஃபார்முலா தொடங்கியதும் இந்த படத்தில் தான்.
பல்வேறு எதிர்ப்புகளை கடந்து, காதல் ஜோடியை சேர்த்து வைக்கும் ‘நல்ல’ ரவுடியாக செயின் ஜெயபால் என்கிற கதாபாத்திரத்தில் டி.ராஜேந்தர் நடித்திருப்பார். இன்று வரை அந்த கதாபாத்திரம் பேசப்படுகிறது என்றால், அதற்கு காரணம் உயிருள்ள வரை உஷா என்கிற படம் தான்.
‘மேகம் வந்து தாகம்…’
‘இந்திரலோகத்து சுந்தரி…’
‘வைகை கரை காற்றே நில்லு..’
‘கட் அடிப்போம்…’
போன்ற சூப்பர் டூப்பர் ஹிட் பாடல்களை தந்து, அந்த காலத்தில் கல்லூரிகளில் ஒவ்வொரு மாணவரும் முணுமுணுத்துக் கொண்டிருந்த சம்பவம் எல்லாம் நடந்தது. நாம் ஆசைப்பட்டு ஒரு படம் எடுக்கலாம், நம் ஆசைக்காக கூட ஒரு படம் எடுக்கலாம், தான் ஆசைப்பட்டவருக்காக ஒரு படம் எடுத்து, அதற்கு அவரின் பெயரை சூட்டி, காலத்தால் என்றும் பேச வைத்த ஒரு இளம் இயக்குனரின் காதல் பரிசு தான், இந்த ‘உயிருள்ள வரை உஷா’.
1983 ம் ஆண்டு இதே நாளில் வெளியாகி, வெள்ளி விழா கொண்டாடிய உயிருள்ள வரை உஷா திரைப்படம், 40 ஆண்டுகளை கடந்திருக்கிறது. ஆனாலும், இந்த உலகில் கடைசி உயிர் இருக்கும் வரை, உயிருள்ள வரை உஷா என்கிற காவியம் இருந்து கொண்டே தான் இருக்கும்!
டாபிக்ஸ்