விடாது குறைத்த நாய்..கத்தியை காட்டி மிரட்டிய கொள்ளையர்கள்! நடிகை சோனா வீட்டில் திருட முயன்ற இருவர் கைது
Oct 05, 2024, 12:24 PM IST
நடிகை சோனா வீட்டில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டு, கத்தியை காட்டி மிரட்டி இருவர் தப்பியோடியுள்ளனர். சிசிடிவி காட்சி அடிப்படையில் திருட்டில் ஈடுபட முயன்ற இருவரை போலீசார் கண்டறிந்து கைது செய்துள்ளனர். விடாது குறைத்த நாய், கத்தி முனை மிரட்டல், கால்களில் நடுக்கம் என பதறி போனதாக சோனா தெரிவித்துள்ளார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்பட தென்னிந்திய சினிமாக்களில் நடிகையாக இருந்து வரும் சோனா, தயாரிப்பாளராகவும் கனிமொழி என்ற படத்தை தயாரித்துள்ளார். சென்னை மதுரவாயலில் வசித்து வரும் இவரது வீட்டில் கொள்ளையர்கள் புகுந்து கத்தியை காட்டி மிரட்டியுள்ளனர். இதுதொடர்பாக அளிக்கப்பட்ட புகாரில் போலீசார் இருவரை கைது செய்துள்ளனர்.
சோனா வீட்டில் கொள்ளை முயற்சி
கடந்த 3ஆம் தேதி நடிகை சோனாவின் வீட்டில் கொள்ள முயற்சி அரங்கேறியுள்ளது. அவரது வீட்டு சுற்று சுவர் ஏறி வீட்டின் உள்ளே சென்ற கொள்ளையர்கள், வீட்டின் வெளிப்புறம் பொருத்தப்பட்டுள்ள ஏசி யூனிட்டை திருட முயன்றுள்ளனர்.
கொள்ளையர்களின் சத்தம் கேட்டு சோனா வீட்டில் இருந்த நாய் குறைத்துள்ளது. இதை கேட்டு வெளியே வந்த நடிகை சோனா, கொள்ளையர்களை பார்த்து கூச்சல் போட முயற்சித்துள்ளார். ஆனால் கத்தி முனையில் சோனாவை மிரட்டிய கொள்ளையர்கள், அங்கிருந்து இருசக்கர வாகனத்தில் தப்பி சென்றுள்ளனர்.
போலீஸ் துரித நடவடிக்கை
பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக காவல் நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு நடிகை சோனா தகவல் தெரிவித்தார். இதன்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த மதுரவாயல் போலீசார், சோனா வீட்டின் அருகில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்து கொள்ளையர்களை தேடி வந்தனர்.
இதையடுத்து சோனா வீட்டில் திருட முயற்சித்தவர்கள் மதுரவாயலை சேர்ந்த சிவா மற்றும் லோகேஷ் எனத் தெரிய வந்தது. அவர்கள் இருவரையும் மதுரவாயல் குற்றப்பிரிவு போலீசார் தற்போது கைது செய்துள்ள நிலையில், இருவரிடமும் தற்போது தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
பட்டப்பகலில் நடிகை சோனா வீட்டில் நடந்த இந்த கொள்ளை முயற்சி சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சோனா படங்கள்
2001இல் அஜித்குமார் நடிப்பில் வெளியான பூவெல்லாம் உன் வாசம் படத்தில் ஜோதிகாவின் தோழியாக நடித்த சோனா, தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பிறகு அதே ஆண்டில் விஜய் நடித்த ஷாஜ்ஜகான் படத்திலும் ஹீரோயின் ரிச்சா பல்லோட் ஜோடியாக நடித்திருப்பார்.
தொடர்ந்து ஹீரோயின் தோழி, இரண்டாவது ஹீரோயின் என நடித்து வந்தவர் அதன் பிறகு கவர்ச்சிகரமான பாத்திரங்களில் நடிக்க தொடங்கினார். வடிவேலு மனைவியாக குசேலன் படத்திலும், கோ படத்தில் நடிகை நமீதாவை இமிடேட் செய்யும் விதமான கதாபாத்திரத்திலும் சோனாவின் நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழிகளில் பல படங்களில் நடித்திருக்கும் சோனா சன் டிவியில் ஒளிபரப்பான அபி டெய்லர், ரோஜா சீரியல்களிலும், ஜீ டிவியில் ஒளிபரப்பான தாரா என்ற சீரியலிலும் நடித்துள்ளார்.
இந்த ஆண்டில் சோனா நடிப்பில் பூமர் அங்கிள் என்ற படம் கடந்த மார்ச் மாதம் வெளியாகி வரவேற்பை பெற்றது.
சினிமாவில் அட்ஜெஸ்ட்மெண்ட்கள் சகஜமானதுதான்
நடிகை சோனா குமுதம் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் தனது சினிமா பயணம் பற்றி பேசியிருந்தார். அதில் அட்ஜெஸ்மெண்ட்கள் குறித்து பேசிய அவர், "நான் திரைத்துறைக்கு வந்த காலத்தில், அட்ஜஸ்ட்மென்ட் என்பது மிகவும் சகஜமான ஒன்றாகதான் இருந்தது. ஆனால் இப்போது, அது ஒரு படி மேலே சென்று, வாய்ப்பு கேட்டு வருகிறவர்களே தானாக முன் வந்து, இயல்பாக அதற்கு ஓகே என்று சொல்லி வருகிறார்களாம். ஆனால் அவை அனைத்தும் அவர்களின் தனிப்பட்ட முடிவைச் சார்ந்ததுதான்.
நான் ஆரம்ப காலகட்டத்தில் கிளாமரான ரோல்களில் நடித்தேன். இப்போது உட்கார்ந்து புலம்பி கொண்டிருக்கிறேன். அதனால் ஏற்பட்ட பாதிப்பை முழுக்க முழுக்க நானே அனுபவிக்கிறேன். அதேபோலத்தான் அவர்களுக்கும் அது நடக்கும். அதற்கான பாதிப்பு அவர்களை வந்து தீரும். அதை நாம் வெளியில் இருந்து சரி தவறு என்றெல்லாம் எடை போட்டுக் கொண்டிருக்கக் கூடாது" என்று கூறினார்.