தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Hbd S.janaki:‘குழந்தை குரலில் கொஞ்சும் பாடகி ஜானகி’ பிறந்த தினம் இன்று

HBD S.Janaki:‘குழந்தை குரலில் கொஞ்சும் பாடகி ஜானகி’ பிறந்த தினம் இன்று

Apr 23, 2023, 06:15 AM IST

google News
Singer Janakiஎனது ரசிகர்கள்தான் எனக்குப் பெரிய விருது” என்று சொன்ன பாடகி ஜானகியின் 85 வது பிறந்த நாள் இன்று (@mvraoforindia)
Singer Janakiஎனது ரசிகர்கள்தான் எனக்குப் பெரிய விருது” என்று சொன்ன பாடகி ஜானகியின் 85 வது பிறந்த நாள் இன்று

Singer Janakiஎனது ரசிகர்கள்தான் எனக்குப் பெரிய விருது” என்று சொன்ன பாடகி ஜானகியின் 85 வது பிறந்த நாள் இன்று

பாடகி ஜானகியின் குரல் மகிழ்ச்சி, சோகம், ஏக்கம், பிரிவு, கொண்டாட்டம், ஆசை, தாய்மை, தாலாட்டு எனப் பல விதமான உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் அமைந்திருந்தாலும் என்றென்றும் கேட்கக்கூடிய செவ்வியல் தன்மையைப் பெற்றது.

“எனது ரசிகர்கள்தான் எனக்குப் பெரிய விருது” என்று சொன்ன பாடகி ஜானகி இன்று தனது 85 வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இன்று அவர் குறித்த சில தகவல்களை திரும்பி பார்க்கலாம்.

ஜானகி பிறப்பு

ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள குண்டூரில் உள்ள மெட்ராஸ் பிரசிடென்சியில் உள்ள ரெபள்ளே தாலுகாவில் உள்ள பல்லபட்லாவில் 1938ம் ஆண்டு ஏப்ரல் 23 அன்று பிறந்தார் . அவரது தந்தை ஸ்ரீராமமூர்த்தி சிஸ்ட்லா. அவர் ஆயுர்வேத மருத்துவர் மற்றும் ஆசிரியர் ஆவார். அவர் தனது குழந்தைப் பருவத்தின் பெரும்பகுதியை சிர்சில்லாவில் கழித்தார், அங்கு அவர் தனது ஒன்பது வயதில் மேடை நிகழ்ச்சிக்கான வாய்ப்பைப் பெற்றார். நாதஸ்வர வித்வான் பைடிசுவாமி மூலம் இசையின் அடிப்படைகளைக் கற்றுக்கொண்டார் . இருப்பினும் அவர் பாரம்பரிய இசையில் எந்த முறையான பயிற்சியையும் மேற்கொண்டதில்லை.

ஜானகி 1959 இல் வி. ராம்பிரசாத்தை மணந்தார். ஜானகியின் வெற்றியில் உடன் இருந்த கணவர் ராம் பிரசாத் 1997 இல் மாரடைப்பு காரணமாக இறந்தார்.

இசை பயணம்

1957 இல் ‘கொஞ்சும் சலங்கை’ படத்திற்காக’ தனது முதல் பாடலான ‘சிங்காரவேலனே தேவா’ பாடலை பாடினார். தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, இந்தி, சிங்களம், வங்காளம், சமஸ்கிருதம், ஒடியா, குஜராத்தி, ஆங்கிலம், கொங்கணி, துளு, சவுராஷ்டிரம், ஜெர்மன், படுகா, பஞ்சாபி ஆகிய 25 மொழிகளில் சுமார் 48000 பாடல்களை பாடியிருக்கிறார். ஜானகி தனது உள்ளுணர்வாலும், தனிப்பட்ட முயற்சியினாலும் எந்த மொழிப் பாடலாக இருந்தாலும் அம்மொழிக்கே உரிய தன்மைகளுடன் அம்மொழியின் வட்டார வழக்கையும் சேர்த்தே தனது குரலில் வெளிப்படுத்தினார். அது மட்டும் இல்லாமல் இவர் பாடும் போது உதடு அசைவதை தவிர வேறு எந்த சலனத்தையும் முகத்திலோ அல்லது உடலிலோ காட்ட மாட்டார். ஆனால் அவரது சந்தோசத்தையும், அழுகையையும் தனது குரலில் உருக உருக வெளிப்படுத்தி இருப்பார்.

இளையராஜாவின் மாறுபட்ட இசை முயற்சிகளுக்கு உற்ற துணைகளில் ஒன்றாக ஜானகியின் குரலும் திறமையும் இருந்தது என்றால் மிகையல்ல. எஸ்பிபி, ஜானகி இணைந்த பாடிய பாடல்கள் ரசிகர்களால் கொண்டாடி தீர்க்கப்பட்டது.

ஊரு சனம் தூங்கிருச்சே, அழகு மலராட, பொன்மேனி உருகுதே, பிள்ளை நிலா, பாடவா உன்பாடலை "நெஞ்சினிலே நெஞ்சினிலே "

"மார்கழி திங்கள் அல்லவா இப்படி ஆயிரக்கணக்கான பாடல்கள் வழியாக இன்றும் இசை ரசிகர்களை கட்டிப்போட்டுள்ளார்.

பத்ம பூஷன் விருது

ஆனால் 2013 ஆம் ஆண்டில், ஜானகி பத்ம பூஷண் விருதை ஏற்க மறுத்தார், தனது சாதனைக்கு அது மிகவும் தாமதமாக விருது அறிவிக்கப்பட்டதாக தைரியமாக தனது விமர்சனத்தை எடுத்து வைத்தார்.

பாடுவதில் இருந்து விலகிய ஜானகி

ஜானகி சாரிடபிள் டிரஸ்ட் என்ற அறக்கட்டளையை நடத்தி வருகிறார். இதன் மூலம் மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு நிதி திரட்டும் விதமாக இசை நிகழ்ச்சி ஒன்றை 2017 அக்டோபரில் நடத்தினார். மைசூரில் நடந்த இசை நிகழ்ச்சியை மன்னர் பரம்பரையை சேர்ந்த பிரமோதா தேவி துவக்கி வைத்தார். இதில் சுமார் 20 ஆயிரம் ரசிகர்கள் கலந்து கொண்டனர். அந்த விழாவில் சுமார் 4 மணி நேரம் பாடிய ஜானகி 1957ல் இருந்து பாடுகிறேன். ஏராளமான பாடல்களை பாடி உள்ளேன். இது தான் கடைசி இசை நிகழ்ச்சி. இனி மேடைகளில் இசைக்கச்சேரிகளில் பாடப்போவதில்லை என்று அறிவித்தார். இவர் 96 பாடத்தில் சிறிய காட்சியில் மட்டும் நடித்திருந்தார். அது நடித்தார் என்பதை விட அவர் எப்போது மேடையில் இளம் பாடகர்களை ஊக்குவிப்பதை போலவே அந்த படத்திலும் செய்திருந்தார்.

இன்று வேண்டுமானால் வயது முதிர்வின் காரணமாக ஜானகி அவர்கள் திரை படங்களிலும் மேடைகளிலும் தான் பாடுவதை நிறுத்தி இருக்கலாம். ஆனால் அவர் ஏற்கனவே பாடித் தீர்த்த பாடல்கள் வழி என்றென்றும் ரசிகர்களின் காதுகளில் ஜானகியின் குரல் கேட்டுக்கொண்டே தான் இருக்கும். அந்த வகையில் தென்னிந்தியாவின் நைட்டிங்கேல் ஜானகி என அழைக்கப்படும் ஜானகி அவர்களின் பிறந்த நாளான இன்று அவரது பயணத்தை திரும்பி பார்ப்பதில் ஹெச்.டி தமிழ் மகிழ்ச்சி அடைகிறது. பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஜானகியம்மாள்...!

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.
அடுத்த செய்தி