43 Years of Panneer Pushpangal: 80ஸ் காலகட்டத்தின் டீன் ஏஜ் காதல்! தமிழ் சினிமாவின் ட்ரெண்ட் செட்டராக அமைந்த படம்
Jul 03, 2024, 06:40 AM IST
80ஸ் காலகட்டத்தின் டீன் ஏஜ் காதல், தமிழ் சினிமாவின் ட்ரெண்ட் செட்டராக படம் என்ற பெருமை பன்னீர் புஷ்பங்கள் படத்துக்கு உண்டு. இரட்டை இயக்குநர்களாக சந்தான பாரதி, பி. வாசு ஆகியோர் பாரதி - வாசு என்ற பெயரில் இந்த படத்தில் அறிமுகமானார்கள்
காதல் கதைகளையும் தமிழ் சினிமாவையும் பிரிக்க முடியாத அளவில் காதலை மையப்படுத்தி ஏராளமான படங்கள் தமிழில் வெளியாகி அவை ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தையும் பிடித்துள்ளன. இதில் சில படங்கள் ப்ரஷ்ஷான கதையாக வெளியாகி ட்ரெண்ட் செட்டர் படமாகவும் மாறி அதுபோன்ற கதைகளுக்கான சிவப்பு கம்பளமாகவும் மாறியிருக்கின்றன. அப்படியொரு கதையம்சத்தில் 80ஸ் காலத்தில் பள்ளி பருவ டீன் ஏஜ் காதலை மையப்படுத்தி வெளியான படம்தான் பன்னீர் புஷ்படங்கள்.
படத்தின் நாயகன் சுரேஷ், இயக்குநரான பாரதி - வாசு ஆகியோருக்கு இது அறிமுக படம். இந்த படத்தில் இரட்டை இயக்குநர்களாக அறிமுகமான பாரதி - வாசு ஆகியோர் மேலும் சில படங்கள் இயக்கிய பின்னர் பாரதி, சந்தான பாரதியாகவும், வாசு, பி. வாசுவாகவும் தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குநர்களாக உருவெடுத்தார்கள்.
டீன் ஏஜ் காதல்
குளிர்ச்சி மிகுந்த இதமான பருவநிலை கொண்டிருக்கும் உதகை காண்வென்டில் படிக்கும் சுரேஷ் - சாந்தி கிருஷ்ணா இடையே மலரும் காதல், அவர்களின் காதலுக்கு உதவும் ஆசிரியராக பிரதாப் போத்தன் என்று கதை நகர. இறுதியில் தங்களுக்கு ஏற்பட்டிருப்பது காதல் அல்ல, வெறும் ஈர்ப்பு என அந்த ஜோடிகள் புரிந்து கொள்ளும் விதமாக படத்தை முடித்திருப்பார்கள்.
பள்ளி பருவ காதல் என்பது அந்த காலகட்டத்தில் மிகவும் பிரஷ்ஷான கதை களமாக இருந்ததோடு, பள்ளி மாணவர், மாணவிகளிடம் நிகழும் விளையாட்டுதனம், நட்பு, குறும்பு போன்ற வயதுக்கான உண்டான விஷயத்தை காட்டும் விதமான இருக்கும் காட்சிகள் ரசிக்க வைக்கும் விதமாக இருந்தன. எந்தவொரு இடத்திலும் விரசம் இல்லாமலும், ஆபாசம் இல்லாமல் டீன் ஏஜ்ஜில் ஆண், பெண் ஆகியோருக்கு நிகழும் உணர்ச்சிகளை திரைக்கதை மூலம் வெளிக்காட்டியிருப்பார்கள்.
வெற்றியாக அமைந்த அறிமுக படம்
பழம்பெரும் இயக்குநர் ஸ்ரீதரிடம் உதவியாளராக இருந்த பாரதி, வாசு ஆகியோர் கமல், ரஜினியிடம் இருந்த நட்பால் புதிய படத்தை இயக்குவதாக இருந்தார்கள். ஆனால் சில காரணங்களால் அவர்கள் நடிக்க முடியாமல் போக, புதுமுகங்களை வைத்து இயக்க முடிவெடுத்தார்கள்.
தங்களது குருவான் இயக்குநர் ஸ்ரீதரிடம் வாய்ப்பு கேட்ட வந்த சுரேஷை, இந்த படத்தின் மூலம் நாயகன் ஆக்கினார்கள். இதேபோல் மலையாளம், தமிழில் ஒரு சில படங்களில் நடித்த சாந்தி கிருஷ்ணாவை ஹீரோயினாக நடிக்க வைத்தார்கள். பிரதாப் போத்தன், வெண்ணிற ஆடை மூர்த்தி உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்கள்.
புதுமையான கதை, விறுவிறுப்பான திரைக்கதை, கண்களுக்கு விருந்தாக அமைந்த கதைக்களம் என முற்றிலும் புது அனுபவத்தை தந்த பாரதி - வாசு ஜோடியின் அறிமுக படம் அவர்களுக்கு வெற்றியாக அமைந்தது.
இளையராஜா பெருந்தன்மை
புதியவர்களான பாரதி - வாசு ஆகியோருக்கு இளையராஜவிடம் நல்ல பழக்கம் இருந்த நிலையில், பிஸியாக இருந்த அவரை இந்த படத்துக்கு இசையமைப்பாளர் ஆக்கினர். படத்தின் ஒரு பகுதி முடிந்தவுடன் இளையராஜாவிடம் சம்பளம் பற்றி பாரதி - வாசு ஆகியோர் பேசியபோது, "முதல் படம் நல்லா பண்ணுங்க, எனக்கு சம்பளம் வேண்டாம்" என இன்ப அதிர்ச்சி கொடுத்ததோடு, சொன்ன வாக்கை காப்பாற்றும் விதமாக கடைசி வரை பணம் பெறாமல் ப்ரீயாக இசையமைத்து கொடுத்துள்ளார். இதன் மூலம் இளையவர்களுக்கு வாய்ப்பு வழங்கி அவர் பெருந்தன்மையாக நடந்துள்ளார்.
படத்தின் பாடல்கள் அனைத்தையும் கங்கை அமரன் எழுத, பிரதாப் போத்தன் கிட்டார் இசைத்தபடி வரும் கோடை கால காற்றே (வாரணம் ஆயிரம் படத்தில் டைட்டிலில் பயன்படுத்தி இருப்பார்கள்), ஆனந்த ராகம், பூந்தளிர் ஆட போன்ற மெலடிகள் இன்றளவும் சிறந்த கிளாசிக் பாடல்களாக இருந்து வருகின்றன.
ட்ரெண்ட் செட்டர் படம்
டீன் ஏஜ் ரெமான்ஸ் படமாக வெளியான பன்னீர் புஷ்பங்கள், தமிழில் வெளியான இந்த ஜானர் படங்களில் முக்கிய படமாக உள்ளது. சூப்பர் ஹிட்டாக அமைந்த இந்த படம் தெலுங்கிலும் மதுர கீதம் என்ற பெயரில் டப் செய்யப்பட்டு வெளியாக அங்கும் அமோக வரவேற்பை பெற்றது. 80ஸ் தொடக்கத்திலேயே இளசுகளை கவரும் விதமாக வெளியானது இந்த படம். தமிழ் சினிமாவில் ட்ரெண்ட் செட்டராகவே மாறிய பன்னீர் புஷ்பங்கள் வெளியாகி இன்றுடன் 43 ஆண்டுகள் ஆகிறது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
Twitter: https://twitter.com/httamilnews
Facebook" https://www.facebook.com/HTTamilNews
You Tube: https://www.youtube.com/@httamil
Google News: https://tamil.hindustantimes.com/
ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.
டாபிக்ஸ்