மழையில் மலர்ந்த கிளைமாக்ஸ்
Feb 21, 2022, 11:13 PM IST
சில படங்களில் வரும் காட்சிகள் நம் மனதை விட்டு நீங்காமல் இருப்பதற்கு காரணம் அந்த காட்சியின் பின்னணியில் இருக்கும் சூட்சமம் தான்.
சினிமாவை பொருத்தவரை முன்பு எல்லாம் நடிகர்களுக்காக சென்று படத்தை பார்ப்பார்கள். ஆனால் தற்போது உள்ள காலகட்டத்தில் படம் வெளியாவதற்கு முன்பே டீசர், ட்ரெய்லர், பாடல் ஆகியவை வெளியாவதால் படத்தை பார்க்க வேண்டும் என ரசிகர்களின் ஆழ்மனதில் எண்ணம் தோன்றுகிறது.
அத்துடன் படம் வெளியான சில மணி நேரத்திலேயே விமர்சனம் தெரிந்துவிடுவதால் அவை நன்றாக இருந்தால் மக்கள் திரையரங்குகளுக்கு சென்று படம் பார்க்கின்றனர்.
அவ்வாறு சில படங்களில் வரும் காட்சிகள் நம் மனதை விட்டு நீங்காது நிலைத்து இருக்கும். அப்படி சில காட்சிகள் நம் மனதில் பதிவதற்கு காரணம் அந்த காட்சியின் பின்னணியில் இருக்கும் சூட்சமம் தான். அப்படி மழையைக் கருப்பொருளாகக் கொண்டு கிளைமாக்ஸ் காட்சிகள் அமைக்கப்பட்ட சில திரைப்படங்களை இந்த தொகுப்பில் காண்போம்.
காதல் கொண்டேன்
தனிமையில் வன்கொடுமைகளை தாங்கி வளர்ந்த வினோத் (தனுஷ்) தன்னோடு கல்லூரியில் படிக்கும் திவ்யாவுடன் (சோனியா அகர்வால்) நட்பாக பழகுகிறார். அந்த நட்பு பின்னர் காதலாக மாற திவ்யா வேறு ஒருவனை காதலிக்கிறான். இந்த விஷயம் தனுஷுக்கு தெரியவர அவளை எப்படியாவது தன் காதலியாக மாற்ற வேண்டும் என வினோத் முயற்சி செய்கிறார்.
வினோத்தை கடைசிவரை நண்பனாகவே பார்த்த திவ்யாவின், நட்பை சொன்ன படம் காதல் கொண்டேன். இந்த படத்தின் கிளைமாக்ஸில் தனுஷ் ’திவ்யா... திவ்யா ... ’ என்று மழையில் ஆடிக்கொண்டே சண்டை போடும் காட்சி, இன்றும் நம் நினைவலையில் உள்ளது. இதில் வினோத் ஆடிய ருத்ர தாண்டவத்தின் வெளிப்பாடாக மழைப் பொழிந்து, சாந்தம் அடைவதும் வினோத் மரணமடைவதுமாகப் படம் முடிக்கப்பட்டிருக்கும்.
விசில்
தனியார் கல்லூரியில் மர்மக் கொலைகள் நடைபெறுகிறது, அந்தக் கொலையும், கொலைக்கான பின்னணி என்னவென்று சஸ்பென்ஸில் கதை நகரும். நாகா யார் ? ஏன் இந்தக் கொலைகள் நடைபெறுகிறது ? என்று அடுத்தடுத்து திகில் காட்சிகள் நிறைந்த திரைக்கதை உருவாக்கியிருப்பார்கள்.
திரைக்கதைக்கு வலு சேர்க்கும் வகையில் இந்தப் படத்தின் கிளைமாக்ஸ் கட்சியானது அமைக்கப்பட்டுள்ளது. கொட்டும் மழையில் தன் தங்கையின் சாவிற்கு காரணமான கடைசி நபரை கொல்லத் துடிக்கும் நாகாவின் உச்சகட்ட காட்சி இந்தப்படம் வெளிவந்த சமயத்தில் பெரும் பரபரப்பாகப் பேசப்பட்டது.
அசுரன்
80களில் நடந்த பஞ்சமி நிலமீட்பு, சாதிய அடக்கு முறைகளை தோலுரித்து காட்டிய படம் அசுரன். காட்சிக்கு, காட்சி அடக்குமுறையின் கோர முகத்தையும், ரத்தம் தெறிக்க தெறிக்க வன்முறை காட்சிகள் நிறைந்திருந்தாலும் இறுதியில் வரும் தனுஷின் வசனமும் பின்னணியில் அமைதியை குறிக்கும் வகையில் பெய்யும் மழையும், எந்த ஒரு பிரச்சனைக்கும் வன்முறை தீர்வல்ல என்று தனுஷ் புன்னகைத்துச் செல்லும் காட்சி இன்னமும் நம் கண் முன் நிற்கிறது.
மதராசபட்டினம்
பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் சுதந்திரப் போராட்டம் மட்டும் நடந்தேறவில்லை. ஒரு காதல் கதையும் மலர்ந்து இருக்க வாய்ப்பிருக்கிறது என்று சொன்ன படம் மதராசபட்டினம். ஒரு பக்கம் சுதந்திரப் போராட்டம், மறுபக்கம் எமி மற்றும் பரிதி ஜோடியின் காதல் போராட்டம் என திரைக்கதை அமைத்திருப்பார் இயக்குநர் ஏ.எல்.விஜய்.
இந்திய சுதந்திரத்தின் போது பிரிந்து சென்ற தனது காதலனை திரும்ப பார்க்க வரும் எமியின் காதல் தனது காதலனின் கல்லறையில் முடிய, காதலி அதே இடத்தில் உயிர் நீத்து மழையாய் வந்து அஞ்சலி செலுத்தும் படி படம் முடிக்கப்பட்டிருக்கும்.
ஜெய் பீம்
பட்டியலின மக்களின் துயரத்தையும், அவர்கள் காவல் துறையால் பாதிக்கப்படும் துயரத்தையும் கண்முன் நிறுத்திய திரைப்படம் ஜெய் பீம். காவலரால் அடித்துக் கொல்லப்பட்ட தனது கணவனின் நீதிக்காக அலையும் செங்கேணியின் போராட்டத்தை வலுவான திரைக்கதையின் மூலம் நிஜமாக்கி காட்டியிருப்பார்கள். அந்தப் போராட்டத்திற்குக் கிடைத்த நீதியின் அடையாளமாக அந்த வருண பகவானே கண்ணீர் விட நமது கண்கள் குளமாகும் ஒரு இறுதி காட்சி அது.
இறைவி
நான்கு விதமான பெண்களைப் பற்றியும், அந்தப் பெண்களின் சுதந்திரம் குறித்தும் மிக அழுத்தமாகச் சொன்னது இறைவி திரைப்படம். இந்த ஆண்கள் சூழ்ந்த உலகத்தில் ஒரு பெண்ணின் சுதந்திரம் என்பது எவ்வாறாக இருக்கிறது. ஒரு நாடு எவ்வளவு தான் முன்னேறினாலும் பெண் சுதந்திரம் என்பது ஆண்களின் கைகளில் தான் அகப்பட்டுக் கிடைக்கிறது.
அதை உடைக்க முற்படும் இறைவிகளைப் பற்றிய கதை. மழையில் நனைய ஆசைப்படும் சுதந்திரம் கூட ஒரு பெண்ணுக்கு இல்லையா என்ற கேள்வியோடு ஆரம்பிக்கும் படத்தின் முதல் காட்சி மழையில் நனைய யார் அனுமதியும் தேவையில்லை நம் மனதே ஒன்றே போதும் என்ற இறுதிக்காட்சிதான் இப்படத்தின் மையக்கரு என்றே சொல்லலாம்.
ஜித்தன்
சமூகத்தில் எல்லாராலும் வஞ்சிக்கப்படும், வசை பாடப்படும் ஒரு பையனுக்கு, மறையக் கூடிய சக்தி ஒன்று கிடைக்கிறது. தான் ஆசைப்பட்ட காதலியும் கிடைக்கவில்லை, எல்லோராலும் ஒதுக்கப்படும் ஒருவன் அந்த சக்தியை வைத்து தான் ஆசைப்பட்ட எல்லாத்தையும் அனுபவிக்கிறான்.
படம் முழுக்க தன் காதலை சொல்ல நினைக்கும் அவன் இறுதிக் காட்சியில் தன் காதலை புரிய வைக்கும் வேளையில் மழை அவன் அடையாளத்தை வெளிப்படுத்த தன் காதலி மடியில் உயிரிழக்க வைக்கிறது.
ஆயிரத்தில் ஒருவன்
சோழர்கள் வாழ்ந்த இடத்தை தேடி செல்லும் ஒரு கும்பல் அவர்கள் சந்திக்கும் பிரச்சனையையும், சோழர்களின் வரலாற்றையும் பதிவு செய்த படம் ஆயிரத்தில் ஒருவன். படத்தின் முதல் காட்சியில் சோழர்கள் வீழ்த்தப்பட்ட அதில் சிலர் மட்டும் மலைப்பகுதியில் தஞ்சம் அடைவார்கள்.
அவர்களை மீட்க "தூதுவன் வருவான். மாரி பெய்யும் நம்மளை சோழதேசம் அழைத்து செல்வான்" என்ற வசனம் இடம்பெறும். இந்த வசனத்திற்கு ஏற்ப இறுதிக் காட்சியில் எல்லோரையும் இழந்த பிறகு கார்த்தி தூதுவனாக வந்து, மாரியாக பெய்து சோழ இளவரசியை மட்டும் மீட்டு செல்லும்படி காட்சி முடிந்திருக்கும்.
ரேணிகுண்டா
அனாதையாக்கப்பட்ட சில இளைஞர்கள் ஊருக்குள் போக்கிடம் இன்றி ரவுடித்தனத்தில் ஈடுபடுகின்றனர். அவர்களை சுற்றி திரைக்கதை அமைக்கப்பட்ட படம் தான் ரேணிகுண்டா. என்ன தான் வன்முறை நிறைந்த காட்சிகள் இடம் பெற்றிருந்தாலும், இன்னொரு பக்கம் காதல் காட்சிகளும் நிறைந்திருக்கும்.
இந்த நபர்கள் செய்த குற்றங்களுக்காக ஒருவர் ஒருவராக கொல்லப்பட சக்தி என்ற இளைஞன் மட்டும் எப்படியாவது தன் காதலியோடு சேர்ந்து விட வேண்டுமென்று நினைக்கிறான். இறுதி காட்சியில் ரயில் நிலையத்தில் காத்துக் கொண்டிருக்கும் தன் காதலியை சேர சில கணம் இருக்கும் வேளையில் கொட்டும் மழையில் எதிரிகளால் சுட்டு வீழ்த்தப்பட்டு ரத்த வெள்ளத்தில் மிதப்பது போல் காண்பிக்கப்பட்டு இருக்கும்.
மழை
இந்த படம் குறித்து நான் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. ஏனென்றால் இந்தப் படத்தின் மையக் கருவே மழைதான். மழை எப்போதெல்லாம் பெய்கிறதோ, அப்போதெல்லாம் ஹீரோ ஹீரோயின் சந்திப்பார்கள். இவர்களின் காதல் வலு பெறுவதே மழையால் தான் என்பது போல காட்சி அமைப்புகள் செதுக்கப்பட்டு இருக்கும். படத்தின் முதல் காட்சி, இன்டர்வல், இறுதி காட்சியான எல்லா காட்சியிலும் மழை பிரதானமாக இடம் பெற்றிருக்கும்.