கருவிலே குழந்தையை அழித்த கொடூரன் நெப்போலியன் பாசக்கார தந்தையான கதை.. HBD நெப்போலியன்
Dec 02, 2024, 06:00 AM IST
சினிமாவில் முரடணாகவும் கொடூர வில்லனாக அறியப்பட்ட நபர், நிஜத்தில் அதற்கு மாறாக தன் குழந்தைகளுக்காக எந்த எல்லைக்கும் செல்லும் தந்தையாக இருக்கும் நெப்போலியன் இன்று அவரது 61வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.
தமிழ்நாட்டு மக்களால் நெப்போலியன் என்ற பெயரை அவ்வளவு எளிதில் மறக்க முடியாது. நெடுநெடுவென வளர்ந்த உருவமும், அதிர வைக்கும் குரலும் அவரை தமிழ் சினிமாவில் தனியாக காட்டியது.
தனித்துவ நடிப்பு
கிழக்குச் சீமையிலே சிவனடியாக, சீவலப்பேரி பாண்டியாக, எட்டுப்பட்டி ராசாவாக பார்ப்போரை மிரட்டிய நெப்போலியன், பின்னாளில் போக்கிரியில் நேர்மையான போலீஸ்காரராக, சீமராஜா படத்தில் ஆரிய ராஜாவாக, சுல்தான் படத்தில் கார்த்தியின் அப்பாவாக நடித்து தன்னை சாப்ட்டான மனிதர் என்றும் நிரூபித்திருப்பார்.
பாரதிராஜாவால் கிடைத்த வாழ்க்கை
இவர் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானது, 1991ம் ஆண்டு வெளியான புது நெல்லு புது நாத்து எனும் பாரதிராஜா படத்தில் தான். பின் அவர் அடுத்தடுத்த படங்களில் கதாநாயகனாகவும், கொடூர அரக்கனாகவும், மக்களைக் காக்கும் நபராகவும், கடவுள் பக்தனாகவும், மனைவிக்கு அடங்கியவனாகவும். வீட்டோடு மாப்பிள்ளையாகவும், நேர்மையான போலீசாகவும் நடித்து மக்களுக்கு மட்டுமின்றி அவரது சினிமா பசிக்கும் தீனி போட்டுக் கொண்டார்.
இதன் காரணமாக இவருக்கு தமிழ் மட்டுமின்றி மலையாளம் தெலுங்கு ஏன் ஹாலிவுட் படத்திலும் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இதன் மூலம் ஒரு முழு ஹாலிவுட் படத்தில் நடித்த முதல் தமிழ் நடிகர் என்ற பெருமையை பெற்றிருப்பார் நெப்போலியன்.
கே.என். நேருவின் உறவினர்
திருச்சியை சேர்ந்த நெப்போலியன் அமைச்சர் கே.என்,நேருவின் நெருங்கிய உறவினர். சினிமாவிற்கு வருவதற்கு முன் இவர், அமைச்சருக்கு உதவியாளராக பணியாற்றி வந்தார். பின், பாரதிராஜாவின் அறிமுகம் கிடைத்தது. இதையடுத்து, குமரேசன் துரைசாமியாக இருந்தவர் நெப்போலியனாக பாரதிராஜாவால் மாற்றப்பட்டார்.
நடிப்பில் பிஸியாக இருந்தாலும், நெப்போலியன், அரசியலிலும் ஆர்வம் காட்டி வந்தார். இதையடுத்து, திமுக சார்பில் 2001ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்எல்ஏவாக மாறினார். தொடர்ந்து கட்சிப் பணியில் தீவிரம் காட்டிய நெப்போலியன், 2009ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பெரம்பலூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அத்துடன் அவர் மன்மோகன் சிங் தலைமையிலான அமைச்சரவையில் அமைச்சராகவும் பதவி வகித்தார்.
இந்நிலையில், திமுகவிலிருந்து நீக்கப்பட்ட அவர், பின் பாஜகவில் இணைந்தார்.
பெண் தேடி அலைந்த நெப்போலியன்
இவர், சினிமாவில் நடிக்க ஆரம்பித்த சமயத்தில் அதிக வில்லன் கதாப்பாத்திரங்களை ஏற்று நடித்ததால், இவருக்கு பெண் கொடுக்க பலரும் யோசித்தார்களாம். பெண் தேடி அலைந்து வெறுத்துப் போய், கடைசியாக இவர் தேடி கண்டுபிடித்து திருமணம் செய்தவர் தான் ஜெயசுதா.
முதலில் ஜெயசுதாவிற்கும் நெப்போலியனை பிடிக்கவில்லையாம். சினிமாவில் இவர், கருவில் இருக்கும் குழந்தைக்கே விஷம் வைத்து கொன்று விடுகிறாரே.. நிஜத்தில் எப்படி இருப்பார் என பயந்து திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்தாராம். பின், பெற்றோர்கள் கட்டாயப்படுத்தியதால் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தாராம்.
பாசக்கார தந்தை
அதன் பின் இவர்களுக்கு தனுஷ், குணால் என 2 மகன்கள் பிறந்த பின் அவர் எப்பேர்பட்ட பாசக்கார தந்தை என்பது உலகிற்கே தெரிய வந்துள்ளது.
நெப்போலியனின் மூத்த மகன் தனுஷ் சிறு வயதில் இருந்தே தசை சிதைவு நோயால் பாதிக்கப்ட்டதை அறிந்து, மகனின் சிகிச்சைக்காக, இந்தியாவை விட்டே வெளியேறி அமெரிக்கா சென்றார். அத்துடன் அங்கு, புதிய ஐடி நிறுவனம் தொடங்கி தமிழர்களுக்கு வேலையும் வழங்கி வருகிறார்.
வாக்கை வென்று வாழ்ந்து காட்டியவர்
10 வயதிற்குள் மகன் இறந்துவிடுவான் என மருத்துவர்கள் சொன்னதை பொய்யாக்கி, அவருக்கு தேவையான வசதிகளை செய்து கொடுத்ததுடன், அவரை ஒரு நிறுவனத்தை வழிநடத்த அனுமதித்து பல்வேறு விமர்சனங்களுக்கு மத்தியில் அவருக்கு திருமணமும் செய்து வைத்து தன்னை சிறந்த தந்தை என நிரூபித்துள்ளார்.
அதுமட்டுமின்றி, இவர் தன் மகனைப் போல பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் நோக்கில் ஜீவன் அறக்கட்டளையை தொடங்கி, தசைநார் ஆராய்ச்சி மையத்தையும் தொடங்கினார்.
சினிமாவில் தன் நடிப்பை சிறப்பாக வழங்கியதற்காக மாநில விருது, கலைமாமணி விருது, எம்ஜிஆர் விருதுகளைப் பெற்றவர், தற்போது தன் மகனின் திருமணத்தை நடத்தி முடித்து பாராட்டு மழையில் நனைந்து வருகிறார். அவருக்கு ஹிந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் சார்பில் பிறந்தநாள் வாழ்த்துகள்
டாபிக்ஸ்