தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Pasi Sathya: மதுரைக்காரி..தமிழ் சினிமாவின் சிறந்த குணச்சித்திர நடிகை - சந்திராவாக இருந்து பசி சத்யாவாக மாறிய கதை

Pasi Sathya: மதுரைக்காரி..தமிழ் சினிமாவின் சிறந்த குணச்சித்திர நடிகை - சந்திராவாக இருந்து பசி சத்யாவாக மாறிய கதை

Sep 05, 2024, 12:34 PM IST

google News
Pasi Sathya Name Secret: தமிழ் சினிமாவின் சிறந்த குணச்சித்திர நடிகையாக திகழ்ந்து வரும் பசி சத்யா பொன்விழா ஆண்டில் பயணித்து வருகிறார். மதுரைக்காரியான இவர் பெயர் பின்னணியும், நடிப்பு பயணம் பற்றியும் பார்க்கலாம்
Pasi Sathya Name Secret: தமிழ் சினிமாவின் சிறந்த குணச்சித்திர நடிகையாக திகழ்ந்து வரும் பசி சத்யா பொன்விழா ஆண்டில் பயணித்து வருகிறார். மதுரைக்காரியான இவர் பெயர் பின்னணியும், நடிப்பு பயணம் பற்றியும் பார்க்கலாம்

Pasi Sathya Name Secret: தமிழ் சினிமாவின் சிறந்த குணச்சித்திர நடிகையாக திகழ்ந்து வரும் பசி சத்யா பொன்விழா ஆண்டில் பயணித்து வருகிறார். மதுரைக்காரியான இவர் பெயர் பின்னணியும், நடிப்பு பயணம் பற்றியும் பார்க்கலாம்

தமிழ் சினிமாவில் சிறந்த குணச்சித்திர நடிகையாக இருந்து வருபவர் பசி சத்யா. மதுரை மண்ணை சேர்ந்த இவர் சினிமாவில் 50 வருடங்களை கடந்து பொன்விழா ஆண்டில் உள்ளார்.

சிறிய கதாபாத்திரமாக இருந்தாலும் மனதில் பதியும் விதமான நடிப்பை வெளிப்படுத்தி செல்லும் நடிகையாக இருந்து வரும் இவர், பல படங்களில் தனது அற்புத நடிப்பால் ரசிகர்களை சிரிக்கவும், கலங்கவும் வைத்துள்ளார்.

நடிப்பு பயணம்

பள்ளி படிக்கும்போது பல்வேறு மேடை நாடகங்களில் நடிக்க தொடங்கிய சத்யா, எல்லா நிகழ்ச்சிகளும் முதல் ஆளாக விரும்பி பங்கேற்றுள்ளார். வேறு பள்ளிகளில் நடைபெறும் நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று ல பரிசுகளை பெற்றுள்ளார்.

அந்த நடிப்பு பயணம் அப்படியே தொடர்ந்து பல்வேறு நாடக கம்பெனிகளும் சேர்ந்து பல்வேறு விதமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். பவளக்கொடு என்ற டிராமா ட்ரூப்பில் இணைந்து பல நாடகங்களில் நடித்துள்ளார்.

நாடக காலத்திலேயே கவுண்டமணி, செந்தில் ஆகியோருடன் நடித்துள்ளார். நடிகர் சுருளிராஜனுடன் இணைந்து ஏராளமான கதாாத்திரங்களில் மேடை நாடகங்களில் நடித்துள்ளார். உயரம் குட்டையாக இருந்தாலும் நடிப்பில் பின்னி பெடலெடுத்து பார்வையாளர்களின் கைதட்டல்கள் பெறுவதில் வல்லவராக இருந்துள்ளார் பசி சத்யா. எம்ஜிஆர், சிவாஜி கணேசன் முன்னிலையில் ஏராளமான மேடை நாடகங்களில் நடித்துள்ளார்.

சத்யாவாக மாறிய சந்திரா

சத்யாவின் நிஜ பெயரானது சந்திரா என கூறப்படுகிறது. மேடை நாடகங்களில் நடித்து வந்த இவர், மிமிக்ரி கலைஞராகவும் இருந்துள்ளார். இவர் மிமிக்ரி செய்த காலகட்டத்தில் பிரபலமான மிமிக்ரி கலைஞர்களாக இருந்த சந்தானம் - சந்துரு ஆகிய இருவர் சந்திரா திறமை பற்றி கேள்விப்பட்டு அவரை சந்தித்துள்ளனர். பின்னர் அவர்கள் தங்களுடன் சந்திராவை பயணிக்க வைக்க அவரது பெயரை சத்யா என மாற்றியுள்ளனர். இப்படிதான் சந்திராவாக இருந்த இவர் சத்யா என பெயர் மாறியுள்ளார்.

மலையாளத்தில் ஹிட்டான சங்குபுஷ்பங்கள் படம்தான் தமிழில் பசி என்ற பெயரில் உருவானது. அந்த படத்தின் இயக்குநர், தயாரிப்பாளர் சத்யாவுக்கான கேரக்டரில் அவர்தான் நடிக்க வேண்டும் என முடிவு செய்து வாய்ப்பு அளித்தனர்.

இந்த படத்தில் ஹீரோயின் ஷோபாவுடன் படம் முழுவதிலும் வரும் சத்யாவின் நடிப்பால் கவர்ந்த பழம்பெரும் நடிகை பானுமதி, இவரை பசி சத்யா என்று அழைத்தார். அப்போது முதல் இவரது பெயருக்கு முன் பசி என்ற அடைமொழி ஒட்டிக்கொண்டது.

பசி படத்துக்கு முன்னரே இவர் நேற்று இன்று நாளை, உழைக்கும் கரங்கள் போன்ற படங்களில் சிறிய கதாபாத்திரத்தில் தோன்றியிருப்பார்.

என் பெயர் கடவுள் கொடுத்த வரம்

"சினிமா நான் விரும்பி வந்தது கிடையாது. என் அப்பாவுக்கு நான் பெரிய நடிகையாக வரவேண்டும் என்ற எண்ணம் இருந்தது. தேனாம்பேட்டையில் நடந்த நடிகர் சங்கத்தின் மீட்டிங் சென்றபோது, நாடக நடிகர்கள் பலரும் வந்திருந்தனர். அப்போது சினிமாவெல்லாம் வேண்டாம் என சொன்னேன். பசி இயக்குநர் துரை சார் வந்து நாடக நடிகர்களின் பெயர்களை குறிப்பெடுக்கும்போது பெரிய கேரக்டர் இருந்தால் மட்டும் நடிக்கிறேன் என்றேன்.

என்னை பலரும் ஒரு மாதிரியாக பார்த்தார்கள். அதன் பின்னர் பசி பட பூஜையின்போது எனது கேரக்டரை விவரித்து சொன்னார்கள். அந்த கேரக்டர் செய்யும்போது ஷோபாவை விட நீங்கள் பிரைட்டா தெரியுறீங்க என்ன கருப்பு ஆக்கியெல்லாம் நடிக்க வைத்தார்கள்.

வாழ்க்கையில் பசி என்பது முக்கியமான விஷயமாக உள்ளது. வயிற்று பசி பற்றி பேசவில்லை. வாழ்க்கை பசி, கலைப்பசி, வேலைப்பசி, உயர வேண்டும் என்ற பசி இருக்கிறது. பசி என்கிற இரண்டு எழுத்த கடவுளாள் அங்கீகரிக்கப்பட்டது. எனக்கு இந்த பெயரும், புகழும் கிடைச்சது கடவுள் கிடைத்த வரம்." என்ற பசி சத்யா பிரபல இணையத்தளத்துக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

கலைமாமணி விருது

தமிழ்நாடு அரசால் கலைமாமணி விருது வழங்கி கெளரவிக்கப்பட்ட பசி சத்யா, தென்னிந்திய நடிகர்கள் சங்கத்தினர் சார்பில் கலைச்செல்வம் விருதையும் பெற்றுள்ளார்.

பாலுமகேந்திரா இயக்கிய வீடு, மறுபடியும், மகளிர் மட்டும், சூர்யா நடித்த பூவெல்லாம் கேட்டுப்பார் போன்ற பல படங்களில் பசி சத்யாவின் கேரக்டர் முத்திரை பதிக்கும் விதமாக அமைந்திருக்கும்.

அன்பே சிவம், புதுப்பேட்டை போன்ற படங்களில் ஒரு காட்சியில் தோன்றினாலும் மனதில் பதியும் விதமாக நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.

தமிழில் 250க்கும் மேற்பட்ட படங்களிலும், 2000க்கும் மேற்பட்ட நாடகங்களில் நடித்த மதுரைக்காரியான பசி சத்யா தனது கலை பயணத்தில் 50வது ஆண்டில் இருக்கிறார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

 

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி
கவனம் பெற்றவை