Mohan: ‘கர்நாடக ஓட்டல்காரர்.. கதாநாயகன் ஆன கதை’ மைக் மோகன் எண்ட்ரி!
Mar 06, 2023, 07:00 AM IST
முதல் படத்தில் இருந்தே வசனம் பேசுவதில் ஆர்வம் காட்டாமல் இருந்த மோகன் 'பாசப் பறவைகள்' படத்தில் தனது குரலிலேயே பேசி நடித்தார். அதற்கு காரணம் அந்த படத்தின் கதை வசனகர்த்தாவான முன்னாள் முதல்வர் கருணாநிதி.
1980களில் ரஜினி, கமலுக்கு செம டஃப் கொடுத்த நடிகர் இவர். இவரது பாதி படங்களுக்கு மேலாக சில்வர் ஜூப்ளி ஹிட் ரகங்கள். இன்று வரை பலரது இரவு தாலாட்டு கீதமாக நிச்சயம் இவரது படப் பாடல்களும் இருக்கும். நடிகர் மோகன். 'மைக்' மோகன் என செல்லமாக அழைப்பார்கள்.
கர்நாடகாவில் இருந்து வந்து தமிழ் ரசிகர்களின் மனதை வென்றதில் ரஜினிக்கு அடுத்த இடத்தில் இன்று வரை (35 ஆண்டுகளாக படம் எதுவும் பெரிதாக இல்லா விட்டாலும் கூட ) இருப்பவர்.
கர்நாடகாவில் சாதாரணமா ஓட்டல் நடத்திக் கொண்டிருந்தவரை, அங்கு சாப்பிட வந்த கன்னட நாடகக் காரரான கரந்த் என்பவர் மேடை நாடக நடிகராக்க, அப்படியே அங்கிருந்து மோகனை சினிமாவில் அறிமுகம் செய்தவர், இயக்குநர் பாலு மகேந்திரா. 1977ல் வெளியான அவரது கன்னட படமான 'கோகிலா'வில் மோகன் நடித்தார். அந்த படத்தின் ஹீரோ யார் தெரியுமா? கமல். அடுத்த நான்கைந்து ஆண்டுகளிலேயே நமக்கு போட்டியாக மோகன் படங்கள் இருக்கும் என கமல் நிச்சயமாக அப்போது நினைத்திருக்க மாட்டார்.
கன்னடத்தில் இருந்து மலையாளம், அங்கிருந்து தெலுங்கில் கிழக்கே போகும் ரயில் படத்தின் ரீமேக்கான, தூர்ப்பு வெல்லே ரயிலு' என வலம் வந்த மோகனை தமிழுக்கு 1980ல் அழைத்து வந்தவர், இயக்குநர் மகேந்திரன். 'நெஞ்சத்தை கிள்ளாதே' படத்தில் அறிமுகம் செய்தார். இந்த படத்திலும் அடுத்த படமான 'மூடுபனி'யிலும் இயக்குநரும் நடிகருமான பிரதாப் போத்தன் பிரதான ரோலில் நடித்தார். இந்த படங்களில் மோகனை 'கோகிலா' மோகன் என்றால் தான் தெரியும். இந்த இரண்டு படங்களுமே ஹிட்.
முதல் படமான 'நெஞ்சத்தை கிள்ளாதே' படத்தின் "பருவமே புதிய பாடல் பாடு..." பாடலில் இருந்து மோகனின் வெற்றிக் கணக்கு தொடங்கியது.
அடுத்தடுத்த ஆண்டுகளில் மோகனே கதாநாயகனாக நடித்து வெளியான 'கிளிஞ்சல்கள்', 'பயணங்கள் முடிவதில்லை' இரண்டும் அதிரி புதிரி ஹிட். இரண்டுமே 200 நாட்களை கடந்து ஓடியவை. அதன் பிறகு தயாரிப்பாளர்களுக்கு தங்க முட்டையிடும் வாத்தாகிப் போனார் மோகன். 1980களில் அவரது படங்கள் எல்லாமே கிட்டத்தட்ட ஹிட் ரகம் தான். குறைந்தது 175 நாட்களை தாண்டின.
1984ல் மட்டும் மோகன் நடித்த 19 படங்கள் வெளியாகின. ஒரு நாளைக்கு 18 மணி நேரம் கேமரா முன்புதான் இருந்தார். ஒரே நாளில் இவரது மூன்று படங்கள் ரிலீசான வரலாறெல்லாம் உண்டு. 1980களில் ரஜினி, கமல் படங்கள் ஓடுதோ இல்லையோ இவர் எத்தனை படங்கள் நடித்தாலும் ஹிட்டடித்தன. அந்த அளவுக்கு சாதனைக்கு சொந்தக்காரர்.
அடர்ந்த முடியுடன் டிஸ்கோ டைப் ஹேர் ஸ்டைல் (80ஸ் இளைஞர்களின் விருப்ப ஹேர் ஸ்டைல் இதுதான்), அப்பாவியான முகம், லேசாக பற்கள் தெரிய மென்மையான புன்னகை
என 1980களின் ரசிகைகள் மோகனின் வசீகரத்தில் கிறங்கி கிடந்தனர். அதேநேரம் இளையராஜா, எஸ்பிபி உபயத்தால் இவரது படங்களின் பாடல்களில் ஒட்டு மொத்த தமிழ் ரசிகர்களும் மயங்கி கிடந்தனர்.
பாரதிராஜாவின் அறிமுகமான நடிகர் சுதாகர், தமிழில் தவற விட்ட இடத்தை மோகன் கச்சிதமாக பிடித்துக் கொண்டார். மோகன் நடித்த படங்களில் பைட் ஸீன் எதுவுமே இருக்காது. மசாலா படமாகவும் இருக்காது. ஆனாலும், மோகன் படங்களுக்கு திருவிழா கூட்டம் போல மக்கள் குவிந்தனர்.
அப்பாவித்தனமாக முகத்துடன் உருகி உருகி காதலிப்பது, மைக்கை பிடித்துக் கொண்டு நிஜ பாடகர் போலவே பாடி நடிப்பது என கலக்கியதால் மைக் மோகன் ஆனார்.
இப்படி ரொமான்டிக் ஹீரோவாக மிக உச்சத்தில் இருக்கும் போதே, மிகக் கொடூரமான கொலையாளியாக ஆன்ட்டி ஹீரோவாக 'நூறாவது நாள்' படத்திலும் இளம் பெண்களை கர்ப்பமாக்கி ஏமாற்றுபவராக 'விதி' படத்திலும் மோகன் நடித்தார். ஆச்சர்யமாக அந்த படங்களும் கூட 200 நாட்கள் 300 நாட்கள் என கடந்து சாதனை படைத்தன. அதிலும் 'விதி' படத்தின் வசன கேசட் எல்லாம் பட்டி தொட்டி எங்கும் ஒலித்தது.
ஆர்.சுந்தர்ராஜன், மணிவண்ணன், ஸ்ரீதர், ரங்கராஜ், மணிரத்னம் என அன்றைய முன்னணி இயக்குநர்களின் படங்களில் மோகன் நடித்திருக்கிறார். ராதிகா, அம்பிகா, ராதா, சுகாசினி, பூர்ணிமா, ரேவதி, அமலா, ஜெயஸ்ரீ, இளவரசி, சீதா, நதியா 80ஸ் முன்னணி நாயகிகளுடனும் மோகன் நடித்திருக்கிறார்.
வெறும் ஏழெட்டு ஆண்டுகளுக்குள் சுமார் நூறு படங்களை எட்டிய மோகன் நடித்த படங்களில் 'கிளிஞ்சல்கள்', 'பயணங்கள் முடிவதில்லை', 'கோபுரங்கள் சாய்வதில்லை', 'இளமைக் காலங்கள்', 'விதி', 'நூறாவது நாள்', 'நான் பாடும் பாடல்', '24மணி நேரம்', 'உன்னை நான் சந்தித்தேன்', 'தென்றலே என்னைத் தொடு', 'குங்குமச் சிமிழ்', 'இதய கோவில்', 'உதய கீதம்', 'மவுன ராகம்', 'மெல்ல திறந்தது கதவு', ' உயிரே உனக்காக', 'ஆயிரம் பூக்கள் மலரட்டும்', 'ரெட்டைவால் குருவி', 'பாடு நிலாவே' 'சகாதேவன் மகாதேவன்' என சூப்பர் டூப்பர் ஹிட் வரிசை படங்கள் ஏராளம். சின்ன பட்டியலுக்குள் அடங்காது.
இது போலவே,
"விழிகள் மேடையாம் இமைகள் திரைகளாம்..."
"இளைய நிலா பொழிகிறது..."
"வைகறையில் வைகை கரையில் வந்தால் வருவேன்..."
"பாட வந்ததோர் கானம் பாவை கண்ணிலோ நாணம்..."
"ஈரமான ரோஜாவே என்னை பார்த்து மூடாதே..."
"தேவதாசும் நானும் ஒரு சாதிதானடி.."
"பாடவா உன் பாடலை..."
"தேவன் தந்த வீணை அதில் தேவி உந்தன் கானம்..."
"சங்கீத மேகம் தேன் சிந்தும் வானம்..."
தென்றல் வந்து என்னைத் தொடும் சத்தமின்றி முத்தமிடும்...
"கண்மணி நீ வர காத்திருந்தேன்..."
"நிலவு தூங்கும் நேரம் நினைவு தூங்கிடாது..."
"இதயம் ஒரு கோயில் அதில் உதயம் ஒரு பாடல்..."
"வானுயர்ந்த சோலையிலே நீ நடந்த பாதை எல்லாம்..."
"நான் பாடும் மவுன ராகம் கேட்க வில்லையா..."
"பன்னீரில் நனைந்த பூக்கள் மெல்ல சிரிக்க..."
"மன்றம் வந்த தென்றலுக்கு மஞ்சம் வர நெஞ்சம் இல்லையோ..."
"குழலூதும் கண்ணனுக்கு குயில் பாடும் பாட்டு கேட்குதா..."
"ஊரு சனம் தூங்கிடுச்சி ஊதக் காத்தும் அடிச்சிடுச்சி..."
"வா வெண்ணிலா.. உன்னைத் தானே வானம் தேடுதே..."
"மலையோரம் வீசும் காத்து மனசோரம் பாடும் பாட்டு கேட்குதா.."
இதெல்லாம் இன்றளவும் ரசிகர்களை தாலாட்டும் மோகன் ஹிட்ஸ்களில் வெகு சில. 1980களின் காதலர்களுக்கு மோகன் பாடல்கள் தான் காதல் கீதங்கள்.
தமிழ் சினிமாவை இப்படி பலவிதமாக கலக்கிய நடிகர் மோகன் தனது சொந்தக் குரலில் படங்களில் பேசவில்லை. மைக்கை அடையாளமாகவே வைத்து மேடை பாடகராக நடித்து ஹிட் கொடுத்த மோகனுக்கு படங்களில் குரல் கொடுத்தவர் ஒரு பாடகர். அவர்தான் இளைய தளபதி விஜயின் தாய் மாமாவும் அன்றைய பிரபல பினனணி பாடகருமான எஸ்.என்.சுரேந்தர்.
மோகன் நடித்த தமிழ் படங்களில் 70%க்கும் அதிமானவை சுரேந்தர் குரல் தான். 1981ல் 'கிளிஞ்சல்கள்' துவங்கி 1987ல் வெளியான 'கிருஷ்ணன் வந்தான்' படம் வரை சுரேந்தர் குரல் தான் மோகனுக்கு. ஆனால் டப்பிங் குரல் என்பது கூட ரசிகர்களுக்கு தெரியாத வகையில் மிக அருமையாக நடித்திருப்பார் மோகன். பாடலுக்கு எஸ்பிபி...! வசனத்துக்கு எஸ்.என்.சுரேந்தர்...!
முதல் படத்தில் இருந்தே வசனம் பேசுவதில் ஆர்வம் காட்டாமல் இருந்த மோகன் 'பாசப் பறவைகள்' படத்தில் தனது குரலிலேயே பேசி நடித்தார். அதற்கு காரணம் அந்த படத்தின் கதை வசனகர்த்தாவான முன்னாள் முதல்வர் கருணாநிதி. மோகன் குரலே நன்றாக இருப்பதால் அவரையே பேச சொல்லுங்கள் என கருணாநிதி சொன்னதால் அந்தப் படத்துக்கு சொந்தக் குரலில் மோகன் பேசினார்.
இதற்கிடையே, எஸ்.என்.சுரேந்தரும் மோகனுக்கு குரல் கொடுப்பதை நிறுத்த, கூடவே திரை வட்டாரத்தில் மோகனின் உடல் நிலை குறித்து வதந்தியும் பரவ, மோகனின் திரையுலக வாழ்க்கை இறங்கு முகமானது.
அதன்பிறகு இப்போது வரை அவ்வப்போது தமிழில் மோகன் தலை காட்டினாலும் 1980களின் மோகன் தான் ரசிகர்களின் மனதில் என்றென்றும் ததும்பி நிற்கிறார்.
-நெல்லை ரவீந்திரன் எழுத்து.
டாபிக்ஸ்