‘வாழ்க்கையே நீங்க கொடுத்தது.. அந்த போன் கால் மட்டும் வரலன்னா இந்த சூர்யா.. அண்ணன் என்பது வார்த்தை அல்ல’ - சூர்யா
Dec 19, 2024, 07:14 AM IST
அண்ணன் என்பது ஒரு வார்த்தை அல்ல ஒரு உறவு. நிரந்தரமான இந்த அண்ணன் தம்பி உறவை கொடுத்த பாலா அண்ணனுக்கு நன்றி. -சூர்யா
தமிழ் சினிமாவின் மிக முக்கியமான இயக்குநரான பாலா, திரைத்துறையில் 25 ஆண்டுகளை நிறைவு செய்து இருக்கிறார். இதனை கொண்டாடும் விழாவையும், வணங்கான் படத்தின் இசை வெளியீட்டு விழாவையும் ஒன்றாக நடத்தினார் அந்த படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி. விழா நேற்றைய தினம் சென்னை டிரேட் சென்டரில் நடைபெற்றது.
இதில் சிவகுமார், சூர்யா, விக்ரமன், மிஷ்கின் சமுத்திரக்கனி, சிவகார்த்திகேயன், மணிரத்னம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் நடிகர் சிவகுமார், இயக்குநர் பாலாவுக்கு தங்க செயின் ஒன்றை பரிசளித்தார்.
இதையடுத்து மேடை ஏறிய நடிகர் சூர்யா, ' கடந்த 2000 ஆம் ஆண்டு, நெய்க்காரன் பட்டியில் நடைபெற்ற ஒரு படப்பிடிப்பில் நான் இருந்தேன். அப்போதுதான் அந்த போன் கால் வந்தது. அந்த போன் காலுக்கு பிறகு என்னுடைய வாழ்க்கையே மாறிவிட்டது. பாலா அண்ணன் இயக்கிய சேது திரைப்படம் எனக்குள் ஒரு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இப்படி ஒரு நடிகரால் நடிக்க முடியுமா? ஒரு இயக்குநரால் இப்படி ஒரு படத்தை இயக்க முடியுமா? என்ற ஆச்சரியம் எனக்குள் வந்தது.
இந்த தாக்கமானது எனக்குள் கிட்டத்தட்ட 100 நாட்கள் இருந்தது. அந்த சமயம், பாலா சார் உன்னை வைத்து அடுத்த படத்தை இயக்கப் போகிறேன் என்று கூறினார். அந்த வார்த்தை எல்லாவற்றையும் மாற்றிவிட்டது. அந்த போன் கால் எனக்கு வரவில்லை என்றால், இந்த வாழ்க்கை எனக்கு கிடையாது. காரணம், நந்தா திரைப்படத்தை பார்த்துவிட்டுதான் கெளதம் காக்க காக்க படத்திற்கு என்னை அழைத்தார். அந்த படத்திற்கு பின்னர் தான் ஏ ஆர் முருகதாஸ் அவர் இயக்கிய கஜினி படத்திற்கு என்னை அழைத்தார்.
இவை எல்லாவற்றிற்கும் காரணம் பாலா அண்ணன் தான். பிதாமகன் ஷூட்டிங்கில் ஒவ்வொரு நாளும் பாலா அண்ணனிடம் இருந்து வெளிப்பட்ட விஷயங்களை நான் கவனித்தேன். வணங்கான் மிக முக்கியமான படமாக இருக்கும். உறவுகளுக்கு பாலா அண்ணன் மதிப்பு கொடுப்பார். அவருடைய அறம், கோபம் என்று பல விஷயங்களை படத்தில் பார்க்கலாம்.
அண்ணன் என்பது ஒரு வார்த்தை அல்ல ஒரு உறவு. நிரந்தரமான இந்த அண்ணன் தம்பி உறவை கொடுத்த பாலா அண்ணனுக்கு நன்றி. என்னுடைய அன்பும் மரியாதையும் அவருக்கு எப்போதும் உண்டு. இந்த வாழ்க்கையை கொடுத்ததற்கு உங்களுக்கு நன்றி அண்ணா’ என்று பேசினார்
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
டாபிக்ஸ்