14 Years Of Naan Mahaan Alla:அரசு வேலைக்கு முயற்சிக்கும் மகன்; கொல்லப்படும் அப்பா..நான் மகான் அல்ல பேசிய எளிய மக்கள் கதை
Aug 20, 2024, 09:43 AM IST
14 Years Of Naan Mahaan Alla:அரசு வேலைக்கு முயற்சிக்கும் மகன்; கொல்லப்படும் அப்பா..நான் மகான் அல்ல பேசிய எளிய மக்கள் கதை குறித்துப் பார்ப்போம்.
14 Years Of Naan Mahaan Alla: நடிகர் கார்த்தி, நடிகை காஜல் அகர்வால் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து, ஜெயபிரகாஷ், சூரி, லட்சுமி ராமகிருஷ்ணன், நீலிமா ராணி,அருள்தாஸ் ஆகியோர், முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்து ஆகஸ்ட் 20, 2010ஆம் ஆண்டு வெளியான திரைப்படம், நான் மகான் அல்ல. இப்படத்தை யுவன் சங்கர் ராஜா இயக்க, ஆர். மதி ஒளிப்பதிவு செய்ய, எடிட்டிங்கினை காசி விஸ்வநாதன் புரிய இயக்கத்தை சுசீந்திரன் செய்திருந்தார்.
இப்படம் சென்னை போன்ற நகரில் வசிக்கும் மிடில் கிளாஸ் இளைஞர் பற்றிய கதையைத் தெரிவிக்கிறது.
நான் மகான் அல்ல திரைப்படத்தின் கதை என்ன?:
சென்னையைச் சேர்ந்த ஒரு நடுத்தர பொருளாதாரப் பின்னணி கொண்ட குடும்பத்தைச் சார்ந்தவர், ஜீவா. இவரது தந்தை ஜீவா, கால் டாக்ஸி ஓட்டுநராக இருக்கிறார். ஜீவாவின் தாய் வீட்டை நிர்வகிக்கிறார். அவரது இளைய சகோதரி கல்லூரி படிக்கும் மாணவி.
படித்து விட்டு, அரசு இன்ஜினியர் வேலைக்கு முயற்சித்துக் கொண்டிருக்கும் கதையின் முன்னணி கதாபாத்திரமான ஜீவா,தனது தோழியின் திருமண விழாவில் பிரியா என்னும் பெண்ணைச் சந்தித்து பழகியதும் காதலில் விழுகிறார். அவரும் காதலில் விழுகிறார். அதன்பின் பிரியாவின் தந்தை, ஜீவா வேலை வாங்கினால்தான் பெண் கொடுப்பேன் என்று சொல்லிவிடுகிறார். அதன்பின், ஜீவா, ஒரு தனியார் வங்கியில் கலெக்ஷன் மேனேஜராகப் பணியில் சேர்கிறார். ஆனால், கடனை முறைப்படி வசூலிக்காமல், இருந்ததால் விரைவில் பணியில் இருந்து துரத்தப்படுகிறார்.
இதற்கிடையே கால் டாக்ஸி டிரைவான ஜீவாவின் தந்தை பிரகாஷத்தில் வண்டியில் வரும் ஒரு காதல் ஜோடியில், அந்தப் பெண்ணை மட்டும் 5 பேர் கொண்ட ஒரு கும்பல், வலுக்கட்டாயமாக இழுத்துச் செல்லப்படுகிறார். அதைத்தடுக்க முயன்றபோது பிரகாசம் தாக்குதலுக்குள்ளாகிறார். இறுதியில், மருத்துவமனையில் இருக்கும்போது, பிரகாசத்தை கொல்ல முயற்சிக்கின்றனர். அப்பா பிரகாசத்தின் நிலை அறிந்து பொறுப்பான மகனாக மாறும் ஜீவா, தன் தந்தைக்கு உதவியாக இருக்கிறார்.
இதற்கிடையே நாளிதழில், தன் வாகனத்தில் வந்த அந்தப்பெண் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, கொல்லப்பட்டது குறித்த செய்தியை அறிந்த பிரகாசம்,காவல் விசாரணை அதிகாரியைச் சந்தித்து துப்புதுலக்க தகவல்களை வழங்குகிறார்.
இதற்கிடையே ஜீவாவின் சகோதரிக்குத் திருமண ஏற்பாடுகள் நடந்துகொண்டிருக்கையில், அந்த குண்டர்கள் கும்பலால், பிரகாசம் கொல்லப்படுகிறார்.
இறுதிச்சடங்குக்குப் பின், தன் தந்தை பிரகாசத்தைக் கொன்றவர்களைப் பழிவாங்கத் துடிக்கிறார், ஜீவா. இதற்காக பெரிய ரவுடி குட்டி நடேசனின் உதவியைப் பெறுகிறார். அந்தக் கும்பலில் இருக்கும் பே பாபுவை குட்டி நடேசனின் உதவியால் அடையாளம் காண்கிறார், ஜீவா.
இதற்கிடையே ஒவ்வொருவரையும் தேடிப்பிடிக்கும் ஜீவா, ஒரு கொடூரமான சண்டையில் ஒவ்வொருவரையும் கொன்றுவிட்டுப் புறப்படுகிறார்.
நான் மகான் அல்ல திரைப்படத்தில் நடித்தவர்கள் விவரம்:
ஜீவா என்னும் கதாபாத்திரத்தில் கார்த்தி நடிக்க, ஜீவாவின் காதலியாக காஜல் அகர்வாலும், ஜீவாவின் அப்பாவாக ஜெயபிரகாஷூம், ஜீவாவின் அம்மாவாக லட்சுமி ராமகிருஷ்ணனும், குட்டி நடேசனாக அருள் தாஸும், ஜீவாவின் நண்பர்களாக சூரி, விஜய்சேதுபதி, நீலிமா ராணி ஆகியோரும் நடித்திருந்தனர். பே பாபுவாக ராமச்சந்திரன் துரைராஜ் நடித்திருந்தார்.
மிரட்டலான பின்னணி இசை மற்றும் பாடல்கள்:
இப்படத்தில் இரண்டாம்பாதி முழுக்க முழுக்க ஆக்ஷன் மற்றும் விறுவிறு காட்சிகள் அதிகம் இருந்தன. அதற்கேற்ற விறுவிறுப்பான பின்னணி இசையைக் கொடுத்து இருந்தார், யுவன் சங்கர் ராஜா. இப்படத்தில் நான்கு பாடல்கள் இடம்பெற்றிருந்தாலும், வா வா நிலவ பிடிச்சி தரவா என்னும் பாடலும், இறகைப்போலே அலைகிறேனே என்னும் பாடலும் பெரிய ஹிட்டானது.
ஒரு எளிய கதையை எடுத்துக்கொண்டு, தன் விறுவிறுப்பான சுவாரஸ்யமான திரைக்கதை மூலம் பல ரசிகை, ரசிகர்களை ஈர்த்த ‘நான் மகான் அல்ல’ திரைப்படம் வெளியாகி இன்றுடன் 14 ஆண்டுகள் ஆகியுள்ளது.