தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  13 Years Of Yuddham Sei: மர்மக் கொலைகளை துப்பறியும் போலீஸின் தேடல் ‘யுத்தம் செய்’!

13 years of Yuddham Sei: மர்மக் கொலைகளை துப்பறியும் போலீஸின் தேடல் ‘யுத்தம் செய்’!

Marimuthu M HT Tamil

Feb 04, 2024, 07:55 AM IST

google News
யுத்தம் செய் திரைப்படம் வெளியாகி 13 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. அப்படம் தொடர்பான சிறப்புக் கட்டுரை இது..
யுத்தம் செய் திரைப்படம் வெளியாகி 13 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. அப்படம் தொடர்பான சிறப்புக் கட்டுரை இது..

யுத்தம் செய் திரைப்படம் வெளியாகி 13 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. அப்படம் தொடர்பான சிறப்புக் கட்டுரை இது..

இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான யுத்தம் செய் திரைப்படம் தமிழில் வெளியாகி 13ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. அப்படம் குறித்துப் பேச ஏராளமான சுவாரஸ்யமான விஷயங்கள் உள்ளன. வாருங்கள் பார்ப்போம்.

யுத்தம் செய் படத்தின் கதை என்ன? ஒரு நகரில் கல்லூரி மாணவிகள், ஆட்டோக்காரர், அடியாட்களில் சிலர் திடீரென வசிப்பிடங்களில் இருந்துகாணாமல் போகின்றனர். திடீரென பார்த்தால் நகரின் மத்தியப் பகுதியில் காணாமல் போனவர்களின் துண்டிக்கப்பட்ட கைகள் அடையாளம் கண்டெடுக்கப்படுகின்றன. ஊடகத்தினர் மற்றும் அரசியல் தரப்பில் இருந்து காவல் துறைக்கு பிரஷர் வருகிறது. இந்த மர்மக் கொலைகளை துப்பறிய, குற்றவாளிகளைப் பிடிக்க சிபிசிஐடி போலீஸ் அலுவலர் சேரனை மையமாக வைத்த ஒரு குழு அமைக்கப்படுகிறது.

இதில் பாதிக்கப்பட்டவராக சேரனே இருக்கிறார். ஏனெனில், அவரது தங்கையே காணாமல் போயுள்ளார். அவரைப் பிடிக்க தனிப்பட்ட முறையிலும் உறுதியோடு துப்புதுலக்குகிறார். இறுதியில் பல்வேறு டிவிஸ்ட்களுக்குப் பின், இதில் நடித்த ஒய்.ஜி. மகேந்திரனும் அவரது மனைவியான லட்சுமி ராமகிருஷ்ணனும், அவரது மகனும் தான் கொலைக்குக் காரணம் என அம்பலமாகிறது. தனது ஒரே மகளின் சாவுக்குக் காரணமானவர்களை பழிவாங்கவே இத்தகைய சதித்திட்டத்தை அவர்கள் செய்தது சிபிசிஐடி குழுவின் விசாரணையில் தெரியவருகிறது.

இறுதியில் சேரனை மையப்படுத்திய சிபிசிஐடி குழுவினர் குற்றவாளிகளைக் கண்டுபிடித்து அவர்களுக்கு தண்டனைப் பெற்றுக் கொடுத்தனரா? இல்லை, மாறாக இவர்கள் எதுவும் தண்டனை பெற்றார்களா என முடிந்திருக்கும் கதை தான், யுத்தம் செய்.

வித்தியாச கோணத்தில் விறுவிறுப்பாக திரைக்கதை அமைத்து படத்தை தாங்கிப் பிடித்திருப்பார், இயக்குநர் மிஷ்கின். 

இதில் ஜே.கே என்னும் ஜே. கிருஷ்ணன் என்னும் போலீஸ் அலுவலர் கதாபாத்திரத்தில் சேரன் நடித்திருப்பார். டாக்டர் புருஷோத்தமனாக ஒய்.ஜி. மகேந்திரனும், அன்னபூர்ணி புருஷோத்தமனாக லட்சுமி ராமகிருஷ்ணனும் நடித்திருப்பர். தவிர, டாக்டர் யூதாஸ் இஸ்காரியட் ஆக ஜெயபிரகாஷூம் சுஜாவாக ஸ்ருஷ்டி டாங்கேவும், தமிழ்ச்செல்வியாக தீபா ஷாவும், ஏசிபி திரிசங்காக செல்வாவும், துரைப்பாண்டியாக மாணிக்க விநாயகமும், இசக்கி முத்துவாக சமீபத்தில் மறைந்த நடிகர் ஜி. மாரிமுத்துவும் நடித்திருப்பர். தவிர, இயக்குநர் அமீர் ஒரு பாடலுக்கு ஆட்டம்போட்டிருப்பார், சாருவாக நடிகை இனியா நடித்திருப்பார். எழுத்தாளர் சாரு நிவேதிதா ஒரு சிறப்புத்தோற்றத்தில் நடித்திருப்பார்.

உதயநிதி ஸ்டாலின் முதலில் நடிக்கயிருந்த படம்:-அப்போது தயாரிப்பாளர் மற்றும் முன்னணி விநியோகஸ்தராக இருந்த உதயநிதி ஸ்டாலின், முதன்முதலில் நடிக்க ஒப்புக்கொண்ட படம், யுத்தம் செய். இப்படத்திற்காக டெஸ்ட் போட்டோஷூட்டில் உதயநிதி ஸ்டாலின் பங்கெடுத்தார். ஆனால், திடீரென தனது முதல் படம் காமெடியாக இருக்கவேண்டும் என நினைத்த அவர் மிஷ்கினிடம் வேறு ஒரு தருணத்தில் இணையலாம் என சொல்லிவிட்டு, நடித்த படம் தான் ‘ நண்பேன்டா’. மேலும் இப்படத்தில் கே என்னும் அறிமுக இசையமைப்பாளரை அறிமுகப்படுத்தினார், இயக்குநர் மிஷ்கின். மேலும், ராம், பருத்திவீரன் படங்களை இயக்கிய இயக்குநர் அமீரை, ‘கன்னித்தீவு பொண்ணா’ என்னும் ஐட்டம் சாங்கிற்கு, லுங்கியைக் கட்டி ஆடவிட்டார். அதிலும் அவருடன் ஆடிய பெண்மணி, வழக்கமாக மிஷ்கின் படங்களில் வரும் மஞ்சள் நிறப்புடவைக் கட்டி ஆடியிருப்பார்.

இப்படத்திலும் மிஷ்கினின் திரைமொழியாகப் பார்க்கப்படும் சென்னை மாநகரத்தின் இரவு காட்சிகள், டார்க் அண்ட் வொயிட் காட்சிகள், கால்களுக்கு வைக்கப்படும் க்ளோஸப் ஷாட்கள் அதிகம் பயன்படுத்தப்பட்டிருக்கும். ஏஜிஎஸ் எண்டெர்டெயின்மென்ட் நிறுவனத்தால் ரூ. 4 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படம் வணிக ரீதியாக வெற்றிப்படமாக அமைந்தது. பின், கன்னடத்தில் ரீமேக் செய்யப்பட்ட இப்படம்,10 ஆண்டுகளுக்குப் பின் இந்தியில் டப் செய்யப்பட்டு பிஃபிளிக்ஸில் வெளியானது.

படம் வெளியாகி 13 ஆண்டுகளை நிறைவுசெய்தாலும் நல்ல சினிமாவைப் பார்க்க நினைக்கும் ரசிகர்கள், இப்படத்தினை மீண்டும் பார்க்கலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

 

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.
அடுத்த செய்தி