HBD Nimisha Sajayan: அடர்த்தியான புருவம், பக்கத்து வீட்டுப்பெண் போன்ற தோற்றத்தில் ஈர்க்கும் நிமிஷா சஜயன்
Jan 04, 2024, 07:45 AM IST
நடிகை நிமிஷா சஜயனின் பிறந்த நாள் தொடர்புடைய சிறப்புக்கட்டுரையினைப் படிப்போம்.
சித்தா, ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் ஆகிய திரைப்படங்களில் நடித்த நிமிஷா சஜயன் இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அவரைப் பற்றி தெரிந்துகொள்ள ஏராளமான சுவாரஸ்யமான விஷயங்கள் உள்ளன.
யார் இந்த நிமிஷா சஜயன்?: மும்பையில் பொறியாளராகப் பணிபுரிந்த சஜயன் மற்றும் பிந்து சஜயன் ஆகிய தம்பதியினருக்கு ஜனவரி 4ஆம் தேதி,1997ஆம் ஆண்டு மகளாகப் பிறந்தவர், நிமிஷா. இவரது தாய், தந்தை இருவரும் கேரளாவின் கொல்லம் மாவட்டத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள். நிமிஷா தனது பள்ளிப்படிப்பை மும்பையிலுள்ள கார்மெல் கான்வென்ட் பள்ளியிலும் கே.ஜே.சோமய்யா கல்லூரியிலும் கல்லூரிப் படிப்பையும் நிறைவுசெய்தார்.
திரை வாழ்க்கை: நிமிஷா சஜயன் தான் கல்லூரியில் இறுதியாண்டு படிக்கும்போதே மலையாள சினிமாவில் நடிப்பதற்காக நிறைய ஆடிசன்களில் பங்கெடுத்தார். அப்போது 'கேர் ஆஃப் சைரா பானு’ என்னும் மலையாளப் படத்தின் ஒரு சின்ன ரோலில் நடித்தார். பின், 2017ஆம் ஆண்டு மலையாளத்தில் திலீஷ் போத்தன் இயக்கத்தில் தொண்டி முதலும் திரிசாக்ஷியும் என்னும் படத்தில் நடிகர் சூரஜ் வெஞ்சரமூடுக்கு ஜோடியாக நடித்தார். அதில் ''கண்ணுல பொய்கையில'' என்னும் பாடல் தென்னிந்திய அளவில் மிகப்பெரிய ஹிட்டடித்தது. அதில் நிமிஷாவின் கண்களும் அவரது சின்ன சின்ன ரியாக்ஷன்களும் பெரியளவில் பேசப்பட்டன.
அதன்பின் எடிட்டர் பி.அஜித்குமார் மலையாளம் முதன்முறையாக இயக்கிய ‘’ஈடா'' என்னும் படத்தில் நடித்து இருந்தார். பின், மலையாளத்தில் மதுபல் இயக்கத்தில் ஒரு ‘குப்ரசிதா பையன்’ என்னும் படத்தில், ஹன்னா எலிசபெத் என்னும் வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடித்ததற்காகவும், சனல் குமார் சசிதரனின் ‘’சோழா’' என்னும் சுயாதீன படத்தில், மலைப்பகுதியில் வசிக்கும் மாணவி கதாபாத்திரத்தில் நடித்ததற்காகவும் 49ஆவது கேரள மாநில விருதுகளுக்காக சிறந்த நடிகை விருதை வென்றார். அதிலும் ’சோழா’ படத்தில் மலைவாழ் மாணவி, தனது காதலனின் அழைப்பில் நகரத்துக்குச் செல்லும்போது ஏற்படும் பயம், பதற்றம் ஆகிய அனைத்தையும் தனது முகபாவனைகளில் வெளிப்படுத்தி அசத்தியிருப்பார், நிமிஷா.
2021ஆம் ஆண்டு நிமிஷாவின் கேரியரில் மிக முக்கியமான ஆண்டு. தி கிரேட் இந்தியன் கிச்சன் என்னும் படத்தில் பழைமைவாதங்கள் நிறைந்த வீட்டில் சிக்கித்தவிக்கும் மனைவியாகவும், இறுதியில் அதில் இருந்து விடுபடுபவராகவும் கனகச்சிதமாக நடித்திருப்பார், நிமிஷா. அதே ஆண்டு, நாயாட்டு என்னும் படத்தில் சுனிதா என்னும் காவல்துறை அலுவலர் கதாபாத்திரத்திலும்; ‘’மாலிக்'' என்னும் படத்தில் வயது முதிர்ந்த ரோஸ்லின் என்னும் கதாபாத்திரத்திலும் நடித்து, தான் எந்தவொரு கேரக்டர் கொடுத்தாலும் செய்யக்கூடிய நடிகை என தன்னை நிரூபித்தார். 2022ஆம் ஆண்டு, நிமிஷா நடித்த ‘’ஒரு தெக்கன் தள்ளு கேஸு'', மராத்தி மொழியில் ‘’ஹவா ஹவாய்'' என்னும் படமும் அவருக்கு நடிப்பில் வேறு பரிமாணத்தைக் கொடுத்தன.
இந்நிலையில் தான் சமீபத்தில் எஸ்.யு. அருண் குமார் இயக்கத்தில் தமிழில் வெளியான ‘’சித்தா'' திரைப்படத்தில் சக்தி என்னும் கதையின் நாயகி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ‘’ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்'' படத்தில் மலையரசி என்னும் கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் ஈர்த்தார், நிமிஷா.
பார்ப்பதற்கு பக்கத்துவீட்டுப் பெண் போன்ற தோற்றம், கொஞ்சம் தடி கூடிய உடல்வாகு, அடர்த்தியான புருவம் என இருக்கும் நிமிஷா, சினிமாவுக்கு என சிலர் வரையறுத்து வைத்திருக்கும் அழகியல் இலக்கணங்களை அடித்து நொறுக்கி, தன்னிடம் உள்ள உருவமைப்பில் நடிப்பில் ஸ்கோர் செய்து அனைவரது மனதிலும் நிறைகிறார். இன்று பிறந்தநாள் கொண்டாடும் நிமிஷாவுக்கு, பிறந்தநாள் வாழ்த்துகளைக் கூறுவதில் பெருமிதம் கொள்கிறது, இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்!
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9