‘எங்க ஜோடி மக்களுக்கு அப்படி பிடிச்சிருக்கு.. மறுபடியும் நாங்க சேர்ந்து..’ - சாய்பல்லவி குறித்து சிவகார்த்திகேயன்!
Nov 07, 2024, 07:30 AM IST
“பாக்ஸ் ஆபீஸ் வசூலைத் தாண்டி, எங்களது ஜோடியை மக்களுக்கு மிகவும் பிடித்திருக்கிறது என்று நினைக்கிறேன். அடுத்தமுறை நாங்கள் இணையும் போது..” - சாய்பல்லவி குறித்து சிவகார்த்திகேயன்!
சிவகார்த்திகேயன் - சாய்பல்லவி நடிப்பில், கடந்த அக்டோபர் 31ம் தேதி வெளியான திரைப்படம் அமரன். பல்வேறு மொழிகளில் வெளியான இந்தத்திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று இருக்கிறது. இந்த நிலையில், படத்தை மிகப்பெரிய வெற்றிபெற செய்தமைக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், அண்மையில் தமிழில் படக்குழு வெற்றிவிழாவை நடத்திய நிலையில், தெலுங்கிலும் நேற்றைய தினம் வெற்றிவிழாவை நடத்தியது.
அந்த நிகழ்வில் கலந்து கொண்ட சிவகார்த்திகேயன் பேசியதாவது, “ அமரன் படத்தின் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமியும், நானும் விஜய் டிவியில் இருந்தே ஒன்றாக பணியாற்றி வருகிறோம். நான் எப்படி கடினமாக உழைப்பேன் என்று அவருக்குத் தெரியும். அவர் எப்படி உழைப்பார் என்று எனக்குத் தெரியும். அந்த மையப்புள்ளிதான் எங்கள் இருவரையும் ஒன்றாக இணைத்தது. அமரன் திரைப்படத்தை எடுக்க வைத்தது.
அதுதான், என்னால் இந்தக் கதாபாத்திரத்தை செய்து விட முடியும் என்ற நம்பிக்கையை அவருக்கு கொடுத்து இருக்கிறது. ஆனால் அவர் மீது எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. காரணம் அவர் ஒரு சிறந்த எழுத்தாளர். சிறந்த கதை சொல்லி, தற்போது அவர் ஒரு சிறந்த இயக்குநர் என்பதையும் நிரூபித்துவிட்டார். சாய்பல்லவியுடன் இணைந்து நடித்தது எனக்கு மிக்க மகிழ்ச்சி.
பாக்ஸ் ஆபீஸ் வசூலைத் தாண்டி, எங்களது ஜோடியை மக்களுக்கு மிகவும் பிடித்திருக்கிறது என்று நினைக்கிறேன். அடுத்தமுறை நாங்கள் இணையும் போது, அந்தப்படம் இன்னும் ஸ்பெஷலாக இருக்கும். அதையும் ராஜ்குமார் பெரியசாமிதான் இயக்குவார் என்று நினைக்கிறேன். காரணம், அப்போதுதான் அது அந்தளவுக்கு ஸ்பெஷலாக இருக்கும்.” என்று பேசினார். அவர் பேசிக்கொண்டிருக்கும் போதே கூட்டத்தில் இருந்து தளபதி என்ற சிலர் சிவாவை அழைத்தனர். அதற்கு பதிலடி கொடுத்த சிவா தளபதி எப்போதுமே விஜய் சார்தான்” என்று கூறினார்.
முன்னதாக, சிவகார்த்திகேயன் நடிப்பில், ‘ரங்கூன்’ புகழ் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் அமரன். India's Most Fearless: True Stories of Modern Millitary புத்தகத்தில் இடம் பெற்ற மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கை வரலாற்று அடிப்படையாகக்கொண்டு இந்தப்படம் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்தப்படத்தின் டீசர் வெளியாகி சமூக வலைதளங்களில் வெளியாகி வைரல் ஆன நிலையில், சாய் பல்லவியின் கதாபாத்திரம் தொடர்பான வீடியோ படத்திற்கு மிகப்பெரிய ரீச்சைக்கொடுத்தது. தொடர்ந்து படக்குழுவும் பல்வேறு நாடுகளுக்குச் சென்று படத்தை புரோமோட் செய்தனர். அப்படி மலேசியாவில் நடந்த புரோமோஷனில் இந்தக்கதைக்கு சிவகார்த்திகேயனை கதாநாயகனாக தேர்ந்தெடுத்தது ஏன் என்பது குறித்து ராஜ்குமார் பெரியசாமி பேசினார்.
ஏன் சிவகார்த்திகேயன்?
அவர் பேசும் போது, “ முகுந்த் வரதராஜன் கதாபாத்திரத்தில் நான் யாரை வேண்டுமென்றாலும் நடிக்க வைத்திருக்கலாம். ஆனால் எனக்கு ஒரு சராசரி மனிதனின் முகம் தேவைப்பட்டது. அவர் ஒரு சராசரி மனிதனுக்கான அடையாளத்தை அவர் பிரதிபலித்ததால் அவரை அந்த கதாபாத்திரத்திற்கு தேர்ந்தெடுத்தேன். இன்னும் 10 வருடம் கழித்து, இன்னும் பெரிய நட்சத்திர அந்தஸ்தில் சிவா இருந்தாலும் கூட, அவருக்கு அந்த சராசரி மனிதனுக்கான அடையாளம் இருக்கும்.” என்று பேசினார்.
இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர் நேஷனல் தயாரிப்பு நிறுவனத்தோடு சேர்த்து, சோனி பிக்சர்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ளது. சோனி பிக்சர்ஸ் இன்டர்நேஷனல் புரொடக்ஷன்ஸ், நிறுவனம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. பிரபல இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இந்தப்படத்திற்கு இசையமைத்து இருந்தார். படத்தின் பெரும்பாலான காட்சிகள் காஷ்மீரிலும், சில காட்சிகள் சென்னை, புதுச்சேரி மற்றும் கேரளாவிலும் எடுக்கப்பட்டதாகத் தெரிகிறது.
சிவகார்த்திகேயனின் சம்பளம் என்ன?:
இப்படம் ஷிவ் அரூர் மற்றும் ராகுல் சிங் எழுதிய மேஜர் முகுந்த் வரதராஜனின், இந்தியாஸ் மோஸ்ட் ஃபியர்லெஸ் என்ற புத்தகத்தில் இருந்து, இக்கதையை எழுதி, திரைக்கதை அமைத்துள்ளார், இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி. இப்படம் ரூ. 150 கோடி முதல் 200 கோடி செலவில் தயாரிக்கப்பட்டு வருகிறது. இப்படத்துக்காக நடிகர் சிவகார்த்திகேயன் ரூ.20 கோடி வரை பெறுவதாக தெரியவருகிறது. மேலும், பழைய கார்த்திக் நடித்த அமரன் படக்குழுவினரிடம், அனுமதி பெற்றபின், இப்படத்தின் பெயர் பொதுவெளியில் வெளியிடப்பட்டது.
டாபிக்ஸ்