இந்தியன் படத்துக்கு முன்னோடியான சிவாஜி படம்.. விஜய்சேதுபதியின் வித்தியாச நடிப்பு.. இன்று வெளியான தமிழ்ப் படங்கள்
Tamil Movies:இந்தியன் படத்துக்கு முன்னோடியான சிவாஜி படம் மற்றும் விஜய்சேதுபதியின் வித்தியாச நடிப்பில் உருவான வர்ணம் படம் என இன்று வெளியான தமிழ்ப் படங்கள் குறித்துப் பார்ப்போம்.
Tamil Movies-தமிழ் சினிமாவில் அக்டோபர் 7ஆம் தேதி வெளியாகி ஹிட்டடித்த ஹீரோக்களின் படங்கள், சில காமெடி, ஹாரர் படங்கள் குறித்து பார்ப்போம்.
1966ஆம் ஆண்டு முதல் தற்போது வரை அக்டோபர் 7ஆம் தேதி வெளியான தமிழ்ப்படங்களின் லிஸ்ட் இதோ..
காதல் படுத்தும் பாடு:
1966ஆம் ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி நடிகர் ஜெய்சங்கர், வாணிஸ்ரீ நடித்து வெளியான திரைப்படம், காதல் படுத்தும் பாடு. இப்படத்தை ஜோசப் தலியாத் இயக்கியிருந்தார். இப்படத்துக்குண்டான திரைக்கதையை கலைஞானம் அமைத்து இருந்தார். இப்படத்தில் டி.ஆர். பாப்பா இசை அமைத்து இருந்தார். இப்படம் வணிகரீதியிலான வெற்றிப்படமாக தயாரிப்புக்குழுவுக்கு அமைந்தது.
நான் பிறந்த மண்:
நான் பிறந்த மண் கதையின்படி, வேட்டைக்கார தேவர் என்ற ஜமீன்தார், ஆங்கிலேய அரசுக்கு எதிராக செயல்பட ஒரு கும்பலை ரகசியமாக இயக்குகிறார். அவரது அடையாளம் விரைவில் கண்டுபிடிக்கப்பட்டது. பின் பிரிட்டிஷ் அரசு, அவரை சுதந்திரத்திற்கு எதிராகப் போராடுவதைத் தடுக்க, அவரது சகோதரியைக் கொன்றது. அதன்பின் என்ன ஆனது என்பது கதை. நான் பிறந்த மண் என்னும் படத்தை இயக்குநர் ஏ.வின்சென்ட் இயக்கியிருந்தார். இப்படத்தில் சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், கே.ஆர்.விஜயா,கமல் ஹாசன், நாகேஷ், படாஃபட் ஜெயலட்சுமி ஆகியோர் நடித்து இருந்தனர். நான் பிறந்த மண் திரைப்படம் அக்டோபர் 7ஆம் தேதி, 1977ஆம் ஆண்டு ரிலீஸாகியிருக்கிறது. இப்படத்தின் கதை தான், 1996ஆம் ஆண்டு, ஷங்கர் இயக்கிய இந்தியன் படத்திற்கு அடிப்படையாக அமைந்தது.
கருப்பு வெள்ளை:
ரகுமான், சுகன்யா, நாசர் மற்றும் திலகன் நடித்து 1993ஆம் ஆண்டு, அக்டோபர் 7-ல் வெளியான திரைப்படம் தான், கருப்பு வெள்ளை. இப்படத்தை மனோபாலா இயக்கியிருந்தார். இப்படத்துக்கு தேவா இசையமைத்து இருந்தார். இப்படத்தில் வரும் நீதிமன்றக் காட்சிகள் பலராலும் ரசிக்கப்பட்டன. சட்டக்கல்லூரி மாணவர் ஒருவர், தனது காதலி மற்றும் அவரது தாத்தாவும் ஒரு பொய் வழக்கில் சிறைசெல்வதால் வருந்துகிறார். அவர்களை விடுவிக்க, பணத்திற்காக நேர்மையற்றவர்களின் வழக்குகளை எடுக்கும் தனது வழக்கறிஞர் தந்தையுடன் போராடுகிறார். அப்படி அமைகிறது கதை.
வர்ணம்:
2011ஆம் ஆண்டு ராஜூ இயக்கத்தில் கிருஷ்ணா டாவின்ஸி, பாலாஜி தரணிதரன், மருதுபாண்டியன், ஸ்டாலின் மற்றும் ராஜூ ஆகிய ஐந்துபேர் எழுதி, அக்டோபர் 7ஆம் தேதி ரிலீசான படம் தான், வர்ணம். இப்படத்தில் கிரிதரன், ஆதிஷ், மோனிகா, அஸ்வதா, சம்பத் ராஜ், விஜய் சேதுபதி ஆகியோர் நடித்து இருந்தனர். இப்படம் லண்டன் ஆசியன் திரைப்பட விழா, நியூயார்க் திரைப்பட விழா, நார்வே தமிழ் திரைப்படவிழா உள்ளிட்டப் பல்வேறு திரைப்பட விழாக்களில் விருதுபெற்றது. இப்படத்திற்கான ஒளிப்பதிவை மெய்யழகன் படப்புகழ் இயக்குநர் பிரேம் குமார் செய்திருப்பார். படம் விமர்சன ரீதியாக நல்லவரவேற்பினைப் பெற்றது.
ரெமோ:
பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடிக்க, அனிருத் இசையமைக்க 2016ஆம் ஆண்டு வெளியான திரைப்படம், ரெமோ. ஒரு இளைஞர் தன் காதலிக்காக பெண்வேடமிட்டு திரியும் ஜனரஞ்சகமான கதையை உருவாக்கியிருப்பார், இயக்குநர் பாக்யராஜ் கண்ணன். இப்படத்தின் பாடல்கள் பெரியஹிட்டடித்தன. ரூ.35 கோடியில் எடுக்கப்பட்ட இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.76 கோடி ரூபாய் வசூலித்தது.
றெக்க:
விஜய் சேதுபதி, லட்சுமி மேனன் மற்றும் சிஜா ரோஸ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்து வெளியான திரைப்படம், றெக்க. இப்படம், கலவையான விமர்சனங்களைப் பெற்று ஓடியது. இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்து இருந்தார். கண்ண காட்டு போதும், விறுவிறு, கண்ணம்மா கண்ணம்மா அழகு பூஞ்சிலை, ஆகியப் பாடல்கள் மிகப்பெரிய ஹிட்டடித்தன.
டாபிக்ஸ்