57 Years of Nenjirukkum Varai: நட்புக்காக காதலை மட்டுமல்ல, உயிரையும் தியாகம் செய்யும் நாயகன்! வங்காள நாடகத்தை தழுவிய கதை
Mar 02, 2024, 06:00 AM IST
வறுமை சூழ்ந்த நாயகன், நாயகி இடையிலான காதல், நட்பு உறவை மையப்படுத்திய கதையம்சத்தில் உருவான படமாகவும், இயக்குநர் ஸ்ரீதரின் சிறந்த படைப்புகளில் ஒன்றாகவும் நெஞ்சிருக்கும் வரை படம் உள்ளது.
பிளாக் அண்ட் ஒயிட் சினிமா காலகட்டத்தில், வித்தியாசமான கதை, திரைக்கதையுடன் கூடிய படங்கள் மட்டுமல்லாமல் சிறந்த காதல் காவியங்களை கொடுத்து ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர் இயக்குநர் சி.வி.ஸ்ரீதர். இவரது இயக்கத்தில் சிவாஜி கணேசன், கே.ஆர். விஜயா, முத்துராமன், வி. கோபால கிருஷ்ணன் பிரதான கதாபாத்திரங்களில் நடித்து வெளியான படம் நெஞ்சிருக்கும் வரை.
இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் போரை அடிப்படையாக வைத்து இந்த டைட்டிலில் படத்தை உருவாக்கி நினைத்த இயக்குநர் ஸ்ரீதர், பின் அந்த திட்டத்தை கைவிட்டார். ஆனால் டைட்டிலை மட்டும் அப்படியே வைத்துக்கொண்டு வங்காள மொழி நாடகமான சுதா என்பதை அடிப்படையாக கொண்ட புதிய கதை, திரைக்கதை அமைத்தார். அதுதான் சிவாஜி கணேசனின் அற்புத நடிப்பில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்த போதிலும் பாக்ஸ் ஆபிஸில் தோல்வியை தழுவிய படமாக நெஞ்சிருக்கும் வரை அமைந்திருந்தது.
கூலி தொழிலாளியாக வரும் சிவாஜி கணேசன், தான் வசிக்கும் வீட்டின் உரிமையாளர் மகள் கே.ஆர். விஜயாவுடன் பழக்கம் ஏற்பட்டு ஒரு தலை காதலாக மாறுகிறது. அந்த நேரத்தில் சிவாஜியின் நண்பனாக அவருடன் வசிக்க வரும் முத்துராமன் மீது கே.ஆர். விஜயா காதல் வயப்படுகிறார்.
முதலில் இதையறிந்து கோபமடையும் சிவாஜி பின்னர் நட்புக்காக காதலை மறைத்து இவர்களை இணைத்து வைக்கிறார். திருமணத்துக்கு பின் சிவாஜி - கே.ஆர். விஜயா உறவை தவறாக நினைச்சு சந்தேகம் கொள்கிறார் முத்துராமன். தனது நண்பனின் மனம் மாறவும், தான் காதலித்த பெண் வாழ்க்கையில் பிரச்னை இல்லாமல் இருக்கவும் தனது உயிரை விடுகிறார் சிவாஜி கணேசன். இறுதியில் நிஜத்தை புரிந்து கொண்டு முத்துராமன், கே.ஆர், விஜாயவுடன் இணைவது தான் படத்தின் கதை.
பிரதான கதாபாத்திரங்களை சுற்றியே படம் முழுவதும திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கும் இந்த படத்தில் மற்ற கதாபாத்திரங்களுக்கு பெரிய வேலையில்லை. அதேபோல் கூலி தொழிலாளியாக வரும் சிவாஜ கணேசனும் சரி, வறுமையின் பிடியில் சிக்கிய பெண்ணாக வரும் கே.ஆர். விஜயாவும் சரி மேக்கப் அவ்வளவாக இல்லாமலேயே படத்தில் வந்திருப்பார்கள்.
அதிலும் சிவாஜி கிழந்த அழுக்கான சட்டையுடன் கதைக்கு ஏற்றவாறு தனது கதாபாத்திரத்தின் நடிப்பை மெருகேற்றியிருப்பார். காதல், நட்பு, உறவுகளுக்கு இடையிலயான உணர்வு போராட்டம் என்று பல்வேறு வகையில் படத்தின் திரைக்கதை பயணிக்கும். வறுமையை மையப்படுத்திய கதை என்பதால் எமேஷன் காட்சிகளும் ஏராளமாக நிறைந்திருக்கும்.
மெட்ராஸ் என்று அழைக்கப்பட்ட சென்னை நகரின் அழகியல் பாடல் காட்சிகளில் சிறப்பாக படமாக்கியிருப்பார்கள். படத்துக்கு எம்.எஸ். விஸ்வநாதன் இசையமைத்திருப்பார். கண்ணாதாசன், வாலி பாடல்கள் எழுதியிருப்பார்கள்.
கண்ணன் வரும் நேரமிது, எங்கே நீயே நானும் அங்கே பாடல் ஹிட்டடித்தன. பூ முடிப்பாள் இந்த பூங்குழளி பாடல் திருமண ஆந்தம் பாடலாகே மாறியது. அந்த காலகட்டத்தில் திருமண நிகழ்வுகளில் தவறாமல் ஒலிக்கும் பாடலாக இருந்தது.
பாடகர்கள் டிஎம்எஸ் - பி. சுசீலா பாடிய முத்துக்களோ கண்கள் பாடல் சிறந்த கிளாசிக் மெலடியாக இன்றும் ஒலித்துக்கொண்டிருக்கிறது.
பூவே உனக்காக படத்தின் பிளாக் அண்ட் ஒயிட் வெர்ஷனாக இந்த படத்தின் ஒரு பகுதி கதை அமைந்திருக்கும். பாக்ஸ் ஆபிஸில் தோல்வி படமாக அமைந்திருந்தாலும், சிவாஜி, கே.ஆர். விஜயா நடிப்புக்காக பாராட்டை பெற்ற நெஞ்சிருக்கும் வரை வெளியாகி இன்றுடன் 57 ஆண்டுகள் ஆகிறது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்