'மெரினா'வில் கால்பதித்து 'டான்'ஆக உருவெடுத்த சிவகார்த்திகேயன்
Feb 18, 2022, 11:50 AM IST
சினிமா கனவோடு வரும் பல இளைஞர்களுக்கு முன்னுதாரணமாக இருப்பதோடு, ஒரு நாள் வெற்றி நாயகன் ஆகலாம் என்ற விதையை ஆழமாக விதைத்திருக்கிறார் சிவகார்த்திகேயன்.
நமது கனவு கெட்டியான கனவாக இருந்தால் அது ஒரு நாள் நினைவாகலாம். ஒரு சாதாரண மிடில் கிளாஸ் இளைஞன் முன்னேறி ஹீரோவாகலாம் என்பதற்கு உதாரணம் நடிகர் சிவகார்த்திகேயன்.
சிவகார்த்திகேயன் இந்தப் பெயர் சின்னதிரையில் பலமுறை ஒளித்து இருந்தாலும், வெள்ளித்திரையில் முதன் முதலில் ஜொலிக்க தொடங்கிய வருடம் 2012.
முதல் படம்
பாண்டிராஜ் இயக்கத்தில் 2012 ஆம் ஆண்டு வெளியான, ’மெரினா’ படம் தான் இவரின் ஹீரோ பயணத்தின் முதல் படி. சென்னை மெரினா கடற்கரையில் தன் வாழ்வாதாரத்திற்காக பிழைக்க வரும் சில சிறுவர்கள் குறித்த கதை. அதே வருடம் 3, மனம் கொத்தி பறவை என மூன்று படங்களில் நடித்து நகைச்சுவை நாயகனாக ரசிகர்களின் மனதை, கொத்தி சென்றிருந்தார் சிவா.
தொடர் வெற்றி
பின்னர் அடுத்த ஆண்டே சிவகார்த்திகேயன், ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’, ‘எதிர்நீச்சல்’, ’வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ என தொடர்ந்து மூன்று வெற்றி படங்களை கொடுத்து முன்னணி நட்சத்திர பட்டியலில் இடம் பெற தொடங்கினார் ஹீரோ சிவகார்த்திகேயன்.
பாக்ஸ் ஆபீஸ் நாயகன்
இவர் தொட்டதெல்லாம் பொன்னாக அடுத்தடுத்து வந்த படங்கள் வெற்றி பெற, ‘மான்கராத்தே’, ’காக்கி சட்டை’, ‘ரஜினி முருகன்’ என வெவ்வேறு கதைக்களத்தில் நடித்து அசத்தினார். அத்தோடு ’ரெமோ’ திரைப்படத்தில் பெண் வேடம் ஏற்று நடித்தார். படத்தின் பாக்ஸ் ஆபீஸ் 50 கோடி மேல் வசூல் செய்து ஹிட் அடித்தது.
சிறு சறுக்கல்
தொடர் வெற்றியை கண்டதாலோ என்னமோ திருஷ்டி போல அடுத்தடுத்து வந்த ’வேலைக்காரன்’, ‘சீமராஜா’, ‘மிஸ்டர் லோக்கல்’ போன்ற படங்கள் தோல்வியை தழுவ தொடங்கியது. என்னதான் படம் விமர்சன ரீதியாக தோல்வியை தழுவினாலும், பாக்ஸ் ஆபீஸில் நியூட்ரலாகவே இருந்தது.
விமர்சனம்
"இவருக்கு காமெடி தான்'பா வருது, எமோஷன் சுத்தமாக வரல, கெட்டப் ஏதும் மாத்த மாட்டாரா ? " என்ற வழக்கம் போல் மற்ற நடிகர்களை விமர்சனம் செய்வது நெட்டிசனங்கள் சிவகார்த்திகேனையும் விமர்சனம் செய்தனர்.
இதனால் சிறிதாக இடைவேளை விட்டு 2021 ஆம் ஆண்டு டாக்டர் படத்தின் மூலம் அவர் மேல் வைக்கப்பட்ட அனைத்து விமர்சனங்களையும் உடைத்தெறிந்து பாக்ஸ் ஆபீஸில் 100 கோடி ஹிட் கொடுத்தார். இதன் மூலம் தான் எப்போதும் ஹீரோதான் என்பதை நிரூபித்துக் காட்டினார்.
பல வெற்றி தோல்விகளை கண்டு இருந்தாலும், பல விமர்சனங்களை பெற்று இருந்தாலும் சிவகார்த்திகேயனுக்கு எப்போதும் ஏறுமுகம் தான். இன்று சினிமா கனவோடு வரும் பல இளைஞர்களுக்கு முன்னுதாரணமாக இருப்பதோடு ஒரு சாதாரண இளைஞன் கூட முயற்சி செய்தால் ஒரு நாள் வெற்றி நாயகன் ஆகலாம் என்ற விதையை ஆழமாக விதைத்திருக்கிறார் சிவகார்த்திகேயன்.
தன்னுடைய திரைப்பயணத்தில் 10 ஆவது ஆண்டில் கால் அடி எடுத்து வைக்கும் சிவகார்த்திகேயனுக்கு மனம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்.