தளபதியின் அரபி குத்துக்கு சமந்தாவின் க்யூட் ஆட்டம்
Feb 18, 2022, 03:04 PM IST
பீஸ்ட் திரைப்படத்திலிருந்து வெளியான, அரபி குத்து பாடலுக்கு சமந்தா நடனமாடி வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிறது.
'கோலமாவு கோகிலா', 'டாக்டர்' ஆகிய படங்களின் வெற்றியை தொடர்ந்து நெல்சன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் பீஸ்ட். தளபதி விஜய், பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகிபாபு, விடிவி கணேஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்து உள்ளது. இதனிடையே பீஸ்ட் திரைப்படத்தில் இடம் பெற்றிருக்கும் ‘அரபி குத்து’ பாடல் காதலர் தினமான பிப்ரவரி 14 ஆம் தேதி படக்குழு வெளியிட்டுள்ளது.
நடிகர் சிவகார்த்திகேயன் எழுதிய இப்பாடலை, அனிருத் இசையமைத்து, பாடி உள்ளார். அரபி குத்து பாடல் வெளியான 24 மணி நேரத்தில் யூ-டியூப் தளத்தில் இரண்டு கோடிக்கும் அதிகமானோர் பார்த்து ரசித்துள்ளனர்.
பாடலில் விஜய்யின் துள்ளலான நடனம் அவரது ரசிகர்கள் மட்டுமின்றி, திரையுலகைச் சேர்ந்த பிரபலங்களையும் கவர்ந்தது.
என்ன தான் பாடலில் உள்ள வார்த்தைகள் புரியவில்லை என்றாலும் ரசிகர்கள் அரபி குத்து பாடலை வாயில் எப்போதும் முணுமுணுத்து வருகின்றனர்.
மேலும் ரசிகர்கள் முதல் சினிமா பிரபலங்கள் வரை அரபி குத்து பாடலுக்கு ஆட்டம் போட்டு வீடியோவாக எடுத்து தங்களது சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர்.
அந்தவகையில் நடிகை சமந்தாவும் விமான நிலையத்தில் முகமூடி அணிந்து கொண்டு, அரபி குத்து பாடலுக்கு நடனமாடி உள்ளார். அப்போது எடுத்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். அதில், "மற்றொரு விமானம் வருவதற்குத் தாமதமாகி விட்டது" எனக் குறிப்பிட்டுள்ளார். அது தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
சமீபத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா ஆகியோர் இணைந்து நடித்துள்ள, புஷ்பா திரைப்படத்தில் இடம்பெற்றிருக்கும் ', ஓ சொல்றியா மாமா..." பாடலுக்கு நடனமாடி அசத்தி இருந்தார்.
இது தவிர தமிழில் விஜய் சேதுபதி, நயன்தாராவுடன் இணைந்து சமந்தா நடித்து இ்ருக்கும் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. விரைவில் படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.