36 Years Of Neethikku Thandanai: ஷாக் கொடுத்த எம்ஜிஆர், நெகிழ்ந்த எஸ்ஏசி.. கலைஞர் வசனத்தில் ஹிட்டான ‘நீதிக்குத் தண்டனை’
May 01, 2023, 01:51 PM IST
36 Years Of Neethikku Thandanai: மறைந்த கருணாநிதி வசனத்தில், எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் 1987 ஆம் ஆண்டு மே 1 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது 'நீதிக்குத் தண்டனை'. இத் திரைப்படம் வெளியாகி (மே 1) இன்றுடன் 36 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.
தமிழ்த் திரையுலகில் முன்னணி இயக்குநராக வலம் வந்தவர் எஸ்.ஏ.சந்திரசேகர். இவரது இயக்கத்தில் நிழல்கள் ரவி, ராதிகா, சரண் ராஜ், செந்தில், செந்தாமரை, சாருஹாசன், கோவை சரளா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான திரைப்படம் நீதிக்கு தண்டனை. இப்படத்துக்கு எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்து இருந்தார்.
ஷோபா சந்திரசேகர் தயாரித்த இப்படத்துக்கு கருணாநிதி வசனம் எழுதி இருந்தார். நீதிக்குத் தண்டனை படத்தில் இடம்பெற்ற, சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா என்ற பாடலை ஸ்வர்ணலதா பாடியிருந்தார். இதுதான் ஸ்வர்ணலதாவின் முதல் பாடிய முதல் பாடல். 'சட்டம் ஒரு இருட்டறை', 'சட்டம் ஒரு விளையாட்டு', 'நான் சிகப்பு மனிதன்' போன்ற படங்களில் இருந்த கதைக்களம் பேசப்பட்டதை போல் இந்தப் படமும் பேசப்பட்டது. இப்படம் 1987 ஆம் ஆண்டு மே 1 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இத் திரைப்படம் வெளியாகி (மே 1) இன்றுடன் 36 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.
'நீதிக்குத் தண்டனை' வெளியான போது எம்ஜிஆர் தான் தமிழக முதல்வர். படம் வெளியான போது பல சர்ச்சைகள் எழுந்தாலும் அதன் பின்பு வணிக ரீதியாக நல்ல வசூலைப் பெற்றது. இந்தப் படம் வெளியான பிறகு நடந்த நெகிழ்ச்சி சம்பவம் பற்றி இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் ஒரு விழாவில் பேசியிருந்தார். இதில் அவர் பேசியதாவது: 1987ம் ஆண்டு கலைஞர் வசனத்தில் 'நீதிக்கு தண்டனை' என்று எம்ஜிஆர் அரசை விமர்சனம் செய்து படமெடுக்கிறேன். அப்போது தமிழகத்தின் முதல்வராக அவர் இருந்து வருகிறார். படம் வெளிவரக்கூடாது என அப்போது சில வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டது. இருந்தும் அனைத்து எதிர்ப்புகளையும் மீறி படம் 1987ஆம் ஆண்டு மே மாதம் முதல் தேதி வெளியானது.
படம் வெளியாகி ஒரு மாதம் கடந்த நிலையில் திடீரென முதல்வர் எம்.ஜி.ஆர். என்னை பார்க்க வேண்டும் என்று விருப்பப்படுவதாக எனக்கு தகவல் வந்தது. இதை கேட்டு எனக்கு பயமாக இருந்தது. உடனடியாக நான் கலைஞரிடம் சென்று எம்.ஜி.ஆர் என்னை பார்க்க வேண்டும் என்று சொல்லி அனுப்பியுள்ளார் என்று கூறினேன். அதற்கு அவர், நல்ல தெளிவா தைரியமா பேசுங்க என்று சொன்னார். எனக்கு 4.30 மணிக்கு அப்பாயின்மென்ட் கொடுத்தார்கள். ஆனால் எனக்குப் பின் வந்தவர்கள் எல்லாம் அவரைச் சந்தித்துவிட்டுச் செல்கிறார்கள். இவரை விமர்சனம் செய்து படம் எடுத்துள்ளோம். நம்மை வேறு இவர் கூப்பிடாமல் காலம் தாழ்த்தி வருகிறார். என்ன நடக்கப்போகிறதோ என்ற குழப்பத்தில் இருந்தேன். திடீரென என்னை உதவியாளர் அழைக்கவே நான் உள்ளே சென்றேன். என்னைப் பார்த்ததும் வாங்க மிஸ்டர் சேகர் என்றார்.
அப்போது உங்களின் நீதிக்கு தண்டனை 5 முறை பார்த்தேன் என்று சொன்னார். அப்போது அவர் நம்மை மிரட்டுகிறாரா அல்லது பாராட்டுகிறாரா என்பது தெரியவில்லை. அடுத்த நிமிடம் ரொம்ப நல்ல பண்ணிருக்கீங்க என்று சொன்னார். அதன்பிறகு எம்.ஜி.ஆர் பிலிம்ஸ் இப்போ படம் அதிகமா பண்றது இல்ல. அதை திரும்பவும் தொடங்கனும். நீங்க வருஷத்துக்கு இரண்டு படம் பண்ணுங்க என்று சொன்னார். இதை கேட்டு இன்ப அதிர்ச்சியில் நானும் சரி என்று சொன்னேன். நான் லைன் கொடுக்கிறேன் அதை டெவலப் பண்ணி படம் பண்ணுங்க நம்ம ஆபீஸ் பயன்படுத்திக்கோங்க என்று சொன்னார். " இவ்வாறு எஸ்ஏசி பேசியிருந்தார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்