Rajinikanth:குடை பிடித்தவருக்கு கண்டிப்பு; ‘அவர பார்த்தாலே சிகரெட்டை போட்ருவேன்’ - அண்ணாமலை சீனை நினைவுகூறிய ரஜினி!
May 23, 2023, 12:02 PM IST
அங்கு வெயில் அதிகமாக இருந்த காரணத்தால் ரஜினிக்கு ஒருவர் குடை ஒன்றை பிடித்தார். அதைப்பார்த்த ரஜினி குடை வேண்டாம் சொல்லி அதனை மறுத்தார்
தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகர் சரத்பாபு. தமிழ் திரைத்துறையின் மறைந்த இயக்குநர் பாலச்சந்தர் இயக்கிய ‘பட்டினப்பிரவேசம்’ திரைப்படத்தின் மூலம் 1971 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் பயணம் செய்த இவர் 200 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து உள்ளார். நடிகர் ரஜினிகாந்த்துக்கு மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்த ‘அண்ணாமலை’ திரைப்படத்தில் அவருக்கு நண்பனாக நடித்து மிகவும் பிரபலமானார். ‘முத்து’ திரைப்படத்திலும் ரஜினிகாந்துக்கு எஜமானாக நடித்திருப்பார்.
இது போன்ற ஹிட் படங்கள் இவருக்கு மிகப்பெரிய புகழைத் தேடித் தந்தது. இவர் நேற்று உடல்நலக்குறைவு காரணமாக ஹைதராபாத்தில் உயிரிழந்தார்.
அவரது உடல் சென்னை தி நகரில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அவருக்கு அஞ்சலி செலுத்த நடிகர் ரஜினிகாந்த் வந்தார். அங்கு வெயில் அதிகமாக இருந்த காரணத்தால் ரஜினிக்கு ஒருவர் குடை ஒன்றை பிடித்தார். அதைப்பார்த்த ரஜினி குடை வேண்டாம் சொல்லி அதனை மறுத்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ சரத்பாபுவை எனக்கு நான் சினிமாவிற்கு வருவதற்கு முன்னரே தெரியும். அவர் அருமையான மனிதர். எனக்கு நல்ல நண்பர். எப்போதும் அவர் சிரித்த முகத்துடனே இருப்பார்.
அவர் சீரியஸாகவோ, கோபமாகவோ இருந்து நான் பார்த்தது கிடையாது. நான் அவருடன் சேர்ந்து நடித்த அனைத்து படங்களும் மிகப்பெரிய ஹிட். ‘முள்ளும்மலரும்’ ‘அண்ணாமலை’ ‘முத்து’ ‘வேலைக்காரன்’ எல்லாமே பெரிய வெற்றி பெற்றன. என்மீது அவருக்கு அளவுகடந்த அன்பு, பிரியம் இருந்தது.
நான் சிகரெட் புகைக்கும் போது அதைப் பார்த்து மிகவும் வருத்தப்படுவார். அதை பிடிங்கி கீழே போட்டு அணைத்து விடுவார். சிகரெட் உடலுக்கு கெட்டது. நீண்டநாள் வாழ வேண்டும் என்பார். அவர் என் முன்னால் வந்தால் சிகரெட்டை கீழே போட்டு அணைத்து விடுவேன்.
‘அண்ணாமலை’ படத்தில் அவரிடம் நான் சென்று சவால் விடுவது போன்ற காட்சி. பெரிய டயலாக். அந்தக்காட்சியில் எமோஷன் சரியாக வரவில்லை. பத்து பதினைந்து டேக்குகள் சென்று விட்டன. அப்போது சரத்பாபு ரஜினிக்கு சிகரெட் கொடுங்க என்றார். நான் சிகரெட் புகைத்த பின்னர் அந்த டேக் ஓகே ஆனது. என்னை உடல்நலனை நன்றாக பார்த்துக்கொள்ள வேண்டும் என்று சொன்னவர் இப்போது இல்லாமல் இருப்பது ரொம்ப வருத்தமாக இருக்கிறது. ரொம்ப நல்ல மனிதர். அவர் ஆத்மா சாந்தி அடையட்டும்.” என்று பேசினார்.
டாபிக்ஸ்