Rajinikanth: வயிற்றில் ஸ்டென்ட்.. அண்ணாமலையாரின் ஆசீர்வாதம்.. “என்னை வாழவைக்கும் தெய்வங்களான” - ரஜினிகாந்த் அறிக்கை
Oct 04, 2024, 05:12 PM IST
Rajinikanth: “என்னை வாழவைக்கும் தெய்வங்களான ரசிகர்களுக்கும். அனைத்து மக்களுக்கும் எனது உளமார மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்” - நடிகர் ரஜினிகாந்த்
பிரபல நடிகரான ரஜினிகாந்திற்கு, வயிற்றில் தொடர்ந்து வீக்கம், முதுகு வலி உள்ளிட்ட அறிகுறிகள் தொடர்ந்து இருந்த நிலையில், கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி உடல்நலக்குறைவு ஏற்பட்டு சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவருக்கு வயிற்றுப்பகுதியில் உள்ள இரத்தக்குழாயில் ‘ஸ்டென்ட்’ கருவி பொருத்தி சிகிச்சை அளித்தனர்.
இதற்கிடையே அவர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுக்கொண்டு இருக்கும் போது, பிரதமர் உட்பட பல அரசியல் தலைவர்களும், திரை பிரபலங்களும், ரசிகர்களும் அவர் நலம் பெற வேண்டும் என்று கூறி பிரார்த்தனை செய்தனர். இந்த நிலையில் அண்மையில் அவர் சிகிச்சை முடிந்து ரஜினிகாந்த் வீடு திரும்பினார். அவரை மருத்துவர்கள் சில வாரங்கள் ஓய்வு எடுக்க வலியுறுத்தி இருக்கின்றனர். இந்த நிலையில் தான் சீக்கிரம் நலம் பெற வேண்டி பிரார்த்தனை செய்தவர்களுக்கு, பதில் கொடுக்கும் வகையில் ரஜினிகாந்த் அறிக்கை வெளியிட்டு இருக்கிறார்.
அந்த அறிக்கையில், “ நான் மருத்துவமனையில் இருக்கும் போது, நான் சீக்கிரம் உடல் நலம் பெற என்னை வாழ்த்திய அனைத்து அரசியல் நண்பர்களுக்கும், திரைப்பட துறையை சார்ந்தவர்களுக்கும், எனது அனைத்து நண்பர்களுக்கும், நலவிரும்பிகளுக்கும், பத்திரிகை நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள், மற்றும் நான் நலம் பெற பிராத்தனைகள் செய்த,மனதார வாழ்த்திய என்மிது அளவில்லா அன்பு வைத்திருக்கும் என்னை வாழவைக்கும் தெய்வங்களான ரசிகர்களுக்கும். அனைத்து மக்களுக்கும் எனது உளமார மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்” என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
முன்னதாக, மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கை
முன்னதாக, ரஜினிகாந்த் சிகிச்சை தொடர்பாக மருத்துவமனை சார்பில் வெளியான அறிக்கையில், " நடிகர் ரஜினிகாந்த் 30 ஆம் தேதி சென்னை கிரீம்ஸ் ரோட்டில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது இதயத்தை விட்டு வெளியேறும் பிரதான இரத்த நாளத்தில் அவருக்கு வீக்கம் ஏற்பட்டது. இது அறுவை சிகிச்சை அல்லாத, டிரான்ஸ்காதெட்டர் முறை மூலம் சிகிச்சையளிக்கப்பட்டது.
மூத்த இருதயவியல் மருத்துவர் சாய் சதீஷ் ரஜினிகாந்தின் ரத்தக் குழாயில் ஸ்டண்ட் வைத்து வீக்கத்தை முழுவதுமாக சரி செய்தார். ரஜினிகாந்துக்கான சிகிச்சை திட்டமிட்டப்படி நடந்துள்ளது என்பதை ரஜினிகாந்த் நலம் விரும்பிகள் மற்றும் ரசிகர்களிடம் தெரிவித்துக் கொள்கிறோம். ரஜினிகாந்த் உடல்நிலை சீராக உள்ளது" என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘வேட்டையன்’ திரைப்படம் வரும் அக்டோபர் 10ம் தேதியன்று திரையரங்கில் வெளியாக இருக்கிறது. அவர் தற்போது 'கூலி' படத்தில் நடித்து வருகிறார். இதற்காக விசாகப்பட்டினத்தில் நடந்து வரும் படப்பிடிப்பில் கலந்து கொண்ட ரஜினி, கடந்த சில நாட்களுக்கு முன்னர்தான் சென்னை திரும்பினார்.
கூலி படத்திற்கு ஏதேனும் சிக்கலா?
ரஜினிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு இருப்பதால் கூலி படத்திற்கு ஏதேனும் சிக்கல் வருமா என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் இருந்து வந்தது. ஆனால் லோகேஷ் கூலி படப்பிடிப்பை திட்டமிட்டபடி நடத்தி வருகிறாராம். ரஜினி இல்லாத காட்சியை தற்போது லோகேஷ் படமாக்கி வருகிறாராம். மேலும் அக்டோபர் 17 ஆம் தேதி கூலி படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற இருக்கின்றதாம்.அந்த படப்பிடிப்பில் ரஜினி கலந்துகொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.
டாபிக்ஸ்