TOP 10 NEWS: 'ரஜினிகாந்த் உடல்நிலை முதல் ஈபிஎஸ் மீது செல்போன் வீச்சு வரை!’ இன்றைய டாப் 10 நியூஸ்!
TOP 10 NEWS: நடிகர் ரஜினி காந்த் உடல்நிலை குறித்த அறிக்கை, ஈபிஎஸ் மீது செல்போன் வீச்சு, வடகிழக்கு பருவமழை எச்சரிக்கை, மருத்துவர் ராமதாஸ்க்கு திமுக கண்டனம்
உள்ளூர் முதல் உலகம் வரை, தமிழகம் முதல் தேசம் வரையிலான அனைத்து விதமான முக்கிய செய்திகளை இந்தத் தொகுப்பில் தெரிந்து கொள்ளலாம்.
1.ரஜினிகாந்த் குறித்து மருத்துவமனை அறிக்கை
தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நடிகர் ரஜினிகாந்த் நலமுடன் உள்ளதாகவும், 2 நாட்களில் வீடு திரும்புவார் என்றும் மருத்துவமனை அறிக்கை.
2.தமிழக அமைச்சரவை கூட்டம்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் அக்டோபர் 8ஆம் தேதி நடைபெறும் என அறிவிப்பு. அமைச்சரவையில் மாற்றம், துணை முதலமைச்சராக உதயநிதி பொறுப்பேற்ற பின் முதல் அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது.
3.10 சதவீத வாக்குகளை இழந்துவிட்டோம்
10 சதவீத வாக்குகளை இழந்து உள்ளோம்; அதனை மீட்கும் வகையில் செயல்பட வேண்டும். இளைஞர்களின் விருப்பத்தை அறிந்து அதற்கு ஏற்றவாறு பேஸ்புக், எக்ஸ்தளம், இன்ஸ்டாகிராமில் பதிவிட வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேச்சு.
4.ஈபிஎஸ் மீது செல்போன் வீச்சுக்கு ஓபிஆர் கண்டனம்
முன்னாள் முதலமைச்சர் அண்ணன் ஈபிஎஸ் மீது செல்போன் எறிந்தது கண்டிக்கத்தக்கது. இது முற்றிலும் அநாகரிகமான செயல். அரசியல் மற்றும் கருத்து வேறுபாடுகளுக்கு பின்னால் இருந்து வந்தாலும், நம்முடைய மரியாதையும் சீர்த்திருத்தமும் குறைவாகக் கூடாது; தலைவர்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்ய காவல்துறையினரை கேட்டுக் கொள்கிறேன் என முன்னாள் எம்.பி. ஓ.பி.ரவிந்திரநாத் கருத்து.
5.வடகிழக்கு பருவமழை குறித்து எச்சரிக்கை
இந்தாண்டு வட கிழக்கு பருவமழை இயல்பைவிட அதிகமாக பொழியும். தமிழகம், கேரளா, கடலோர ஆந்திரா, தெற்கு உள் கர்நாடகாவில் பருவமழை அதிகமாக இருக்கும். தென்னிந்தியாவில் வடகிழக்கு பருவமழை இயல்பை விட 112 சதவீதம் கூடுதலாக இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.
6.ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு
ஆர்.எஸ்.எஸ். அணி வகுப்புக்கு எதிர்காலத்தில் அனுமதி மறுக்க கூடாது என காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு .
7. துணை முதலமைச்சர் பேச்சு
100 விளையாட்டு வீரர்களுக்கு விரைவில் அரசுப்பணி வழங்கப்பட உள்ளது. 3 ஆண்டுகளில் 1,300 விளையாட்டு வீரர்களுக்கு 38 கோடி ஊக்கத்தொகை வழங்கப்பட்டு உள்ளது. கேலோ இந்தியா, கார் பந்தயம் போன்றவற்றை தமிழக அரசு சிறப்பாக் நடத்தி முடித்து உள்ளது என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு.
8.மெட்ரோ ரயில் பயணம் அதிகரிப்பு
சென்னை மெட்ரோ ரயில்களில் செப்டம்பர் மாதம் மட்டும் 92.77 லட்சம் பேர் பயணம். அதிகபட்சமாக செப்.6 ஆம் தேதி அன்று 3.74 லட்சம் பேர் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்து உள்ளனர் என சென்னை மெட்ரோ நிர்வாகம் தகவல்.
9. இலங்கை தமிழர்களுக்கு அதிகாரம் வேண்டும்
இலங்கையின் புதிய அதிபராக சிங்கள பேரினவாத அமைப்பான ஜனதா விமுக்தி பெரமுனா கட்சியின் தலைவர் அநுரா குமார திசநாயக பொறுப்பேற்ற பிறகு, முதல் வெளிநாட்டுத் தலைவராக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் வரும் 4-ஆம் தேதி இலங்கை செல்கிறார். இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்தும் நோக்குடன் அவர் மேற்கொள்ளவிருக்கும் இந்தப் பயணம் அங்குள்ள தமிழர்களுக்கு பயனும், அதிகாரமும் அளிக்கும் வகையில் அமைய வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கருத்து.
10. மருத்துவர் ராமதாஸ்க்கு திமுக கண்டனம்
‘செந்தில் பாலாஜி தியாகி என்றால் ஏமாந்தவர்கள் துரோகிகளா? நீதிபதியாக இருக்க வேண்டிய முதலமைச்சர் செந்தில் பாலாஜிக்கு வழக்கறிஞராகக் கூடாது’ என அறிக்கை விட்டிருக்கிறார் டாக்டர் திரு ராமதாஸ் அவர்கள். தைலாபுரம் அரசியல் பயிலரங்கத்தில் பாட்டாளிகளுக்கு வகுப்பெடுக்கும் ஆசிரியர் திரு ராமதாஸ் அவர்கள், அரசியல் அறியாமல் அரைவேக்காடாய் அறிக்கை விட்டிருக்கிறார். திரு செந்தில் பாலாஜி மீது உள்ள வழக்கு விவரத்தை அதற்குப் பின்னால் இருக்கும் அரசியலையும் முதலில் அவர் புரிந்து கொள்ள வேண்டும் என திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அறிக்கை.
டாபிக்ஸ்