ஹிந்தியில அப்டியே உல்டா.. கங்குவாவிற்காக காரணம் சொல்லும் ஞானவேல் ராஜா! அப்போ கன்னடத்துக்கு?
Nov 13, 2024, 03:03 PM IST
ஹிந்தியில் கங்குவா படத்திற்கு ஏன் குறைவான முன்பதிவுகள் இருந்தன என்பது குறித்து படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா விளக்கமளித்துள்ளார்.
சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் ஆக்ஷன் கலந்த பேண்டஸி த்ரில்லர் படமாக கங்குவா உருவாகியுள்ளது. திஷா பதானி, பாபி தியோல் உள்ளிட்டோர் நடத்த இந்த படத்தை ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் மிக பெரிய பொருள் செலவில் பிரமாண்டமாக தயாரித்துள்ளது. கங்குவா படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.
தயாரிப்பாளரின் எதிர்பார்ப்பு
நாளை நவம்பர் 14ம் தேதி கங்குவா திரைப்படம் உலகம் முழுவதும் சுமார் 11,500 திரைகளில் இப்படம் வெளியாக உள்ளது. எப்படியும் ரூ.2000 கோடி வசூல் கிடைக்கும் என்று தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா ஞானவேல் ராஜா எதிர்பார்ப்பில் இருந்தார்.
இந்நிலையில், கங்குவா திரைப்படத்திற்கான ப்ரீ டிக்கெட் புக்கிங் தொடங்கியது. ஆனால் தமிழ், தெலுங்கில் கங்குவா படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்த அளவு ஹிந்தி, கன்னடம் மொழிகளில் கிடைக்கவில்லை. அனைத்து மொழிகளிலும் 2டி, 3டி என 2 விதமான படங்கள் வெளியாக உள்ள நிலையில், ஹிந்தி டிக்கெட் முன்பதிவு தயாரிப்பு நிறுவனத்திற்கு ஏமாற்றத்தையே தந்துள்ளது.
ஹிந்திக்கு முக்கியத்துவம்
ஏனெனில், பாலிவுட் நடிகை திஷா பதானி, ஹிந்தியில் மாபெரும் வில்லன் நடிகராக உள்ள பாபி தியோல் இந்தப் படத்தில் நடித்துள்ளார். அத்துடன், கங்குவா படக்குழு ஹிந்தி மொழி பேசும் மாநிலங்களில் அதிகளவு புரொமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டனர். இதனால், தமிழ், தெலுங்கு மொழிகளைப் போல ஹிந்தி மொழியிலும் நல்ல வசூல் வரும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில், குறைவான டிக்கெட் புக்கிங் குறித்து தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா விளக்கமளித்துள்ளார்.
ஹிந்தியில் உல்டா
அதில், தென்னிந்தியாவில் மல்டிபிளக்ஸ் இல்லாமல் பல தியேட்டர்கள் உள்ளன. ஆனால், ஹிந்தியில் அதற்கு அப்படியே மாறாக உள்ளது. பாலிவுட்டில் பெரும்பாலான தியேட்டர்கள் மல்டி பிளக்ஸ் தியேட்டர்களாகவே உள்ளன. இங்கு பிவிஆர் உள்ளிட்ட பல தியேட்டர்களில் இன்று தான் டிக்கெட் புக்கிங் தொடங்கவுள்ளது. அதனால், தற்போது முன்பதிவு நமக்கு குறைவாகத் தெரிவதால் கவலை இல்லை எனக் கூறியுள்ளார். ஆனால் கன்னடத்தில் ஹிந்தி அளவில் கூட முன்பதிவு நடக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தான் sacnilk.com தளம் இந்திய அளவில் கங்குவா திரைப்படம் எவ்வளவு முன்பதிவை பெற்றுள்ளது என்பது குறித்த தகவல்கள் வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என 30க்கும் மேற்பட்ட மொழிகளில் 2டி மற்றும் 3டி என இரண்டு விதமான காட்சிகளுக்கும் இதுவரை நடந்த முன்பதிவு விவரங்களை பார்க்கலாம்.
தமிழ், தெலுங்கில் எகிறும் வசூல்
தமிழ்நாட்டில் 2டியில் வெளியாகும் 974 காட்சிகளில் 33,720 டிக்கெட் விற்பனையாகியுள்ளது. இதன் மூலம் 60 லட்சத்து 20 ஆயிரத்து 79 ரூபாய் வசூல் கிடைத்துள்ளதாகத் தெரிகிறது.
3டியில் வெளியாகும் 2651 காட்சிகளுக்கு 2 கோடியே 30 லட்சத்து 27 ஆயிரத்து 502 ரூபாய் வசூல் கிடைத்துள்ளது.
கன்னட மொழியில் காத்து வாங்கும் கங்குவா
தெலுங்கில், 2டி காட்சிகளுக்கு 49 லட்சத்து 88 ஆயிரத்து 887 ரூபாயும், 3டியில் 34 லட்சத்து 56 ஆயிரத்து 49 ரூபாயும், ஹிந்தியில் 2டி காட்சிகளுக்கு 6 லட்சத்து 63 ஆயிரத்து 177 ரூபாயும், 3டியில் 18 லட்சத்து 84 ஆயிரத்து 81 ரூபாய் வசூலைப் பெற்றதும் தெரிய வந்துள்ளது.
மலையாளத்தில் 2டியில் 39 ஆயிரத்து 247 ரூபாய் மட்டும் வசூலித்துள்ளது. அதுமட்டுமின்றி, கன்னட மொழியில் வெளியாகும் கங்குவா படத்திற்கு 2டியில் 10 பேரும் 3டியில் ஒருவர் மட்டுமே முன்பதிவு செய்துள்ளனர், இதனால், கன்னட திரையரங்குகளில் கங்குவா திரைப்படம் காத்து வாங்குமா என்ற சந்தேகமும் எழுகிறது.
இதையடுத்து கங்குவா திரைப்படம் தற்போதைய நிலவரப்படி, சுமார் 2 லட்சத்து 19 ஆயிரத்து 278 டிக்கெட் புக் செய்யப்பட்டுள்ளது. அதன் மூலம் 4.01 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாகத் தெரிகிறது.
டாபிக்ஸ்