Selvaraghavan: வேதனையில் படுக்காதிங்க.. செருப்ப போட்டுட்டு கிளம்புங்க.. அட்வைஸ் சொன்ன செல்வராகவன்!
Sep 30, 2024, 03:58 PM IST
Selvaraghavan: வாழ்க்கையில் எந்தப் பிரச்சனை வந்தாலும், வேதனையில் படுத்துவிட வேண்டாம். அப்படி செய்தால், இந்த உலகம் ஏறி மிதித்துவிட்டு போகுமே தவிர ஆறுதல் சொல்லாது என இயக்குநரும் நடிகருமான செல்வராகவன் கருத்து தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் தனது ஒவ்வொரு படைப்பின் மூலமும் நடிப்பின் மூலமும் நாளுக்கு நாள் ட்ரெண்ட் செட் செய்து வருகிறார் இயக்குநர் செல்வராகவன். இவர், தனது ஒவ்வொரு படத்தையும் ஒவ்வொரு ஜானரில் தந்து மக்களை 'அட' போட வைக்கிறார்.
தமிழில் செல்வராகவன் திரைப்படம் வருகிறது என்றால் அதை டி-கோடிங் செய்ய நிச்சயம் ஒரு கும்பல் கிளம்பும். காரணம் அவரது திரைப்படத்தில் அத்தனை நுணுக்கங்கள் நிறைந்திருக்கும்.
நுணுக்கமான கலைஞன்
படத்தில் மட்டுமல்ல, தன்னுடைய கருத்திலும் பல்வேறு நுணுக்கமான கருத்துகள் உள்ளது என்பதை சில காலமாக ரசிகர்களுக்கு உணர்த்தி வருகிறார் செல்வராகவன்.
இயக்குநராக, நடிகராக சினிமாவில் தன்னை நிரூபித்துக் காட்டிய செல்வராகவன், தற்போது பல இளைஞர்களின் கண்களுக்கு தத்துவவாதியாக காட்சி அளிக்கிறார். அதற்கு காரணம் சோசியல் மீடியாவில் அவர் பதிவிடும் கருத்துகள். அப்படி, இன்றும் ஒரு கருத்துடன் வந்துள்ளார் செல்வராகவன்.
புதிய தத்துவம்
"காதல் தோல்வியோ , மனைவியுடன் சிக்கலோ , வேலையில் பிரச்சனையோ எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள். இவ்வுலகம் ஏறி மிதித்து விட்டு போகுமே தவிர ஆறுதல் சொல்லாது. செருப்பை போட்டுக் கொண்டு கடமையை செய்ய கிளம்பி விடுங்கள்." என்பதே இந்தப் பதிவு. இதனை தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார் செல்வராகவன்.
அதாவது, இந்த உலகத்தில் உள்ள மக்கள் எந்த சூழ்நிலையிலும் அடுத்தவரின் நிலை கண்டு மனம் வருந்தாது. தளராது. எனவே, உன்னை நீயே தேற்றிக் கொண்டு, ஆகும் வேலையை் பார் என்கிறார். இதனை, இவரது ரசிகர்கள் பலரும் ஷேர் செய்து வைரலாக்கி வருகின்றனர்.
மொழி பற்றாளன்
முன்னதாக இவர், உலகத்தில் மிகவும் பழைமையான மொழிகளில் ஒன்று தமிழ் மொழி. அந்தத் தமிழ் மொழியில் பேசுவதை பெருமையாக நினைத்துக் கொள்ளுங்கள். இதை நான் கெஞ்சி கேட்பதாக நினைத்துக்கொள்ளுங்கள், வேண்டுகோளாக கருதி கொள்ளுங்கள், தயவு செய்து தமிழில் பேசுங்கள். ஆங்கில மொழியின் அவசியம் எனக்கு புரிகிறது. ஆனால், முழு நேரமும் ஆங்கிலத்திலேயே பேச வேண்டும் என்ற அவசியம் இல்லை.
உலகின் வளர்ந்த நாடுகள் பல தங்களது தாய் மொழியில்தான் பேசுகின்றன. அப்படி பேசுவதைப் பெருமையாக நினைக்கின்றன. அந்த நாட்டு மக்கள் தங்களுக்கு ஆங்கிலம் தெரியவில்லை என வருத்தப்படுவதில்லை. அதுபோல நாமும் வருத்தப்பட தேவையில்லை என மொழி குறித்த தேவை பற்றி கூறியிருந்தார்.
அனுபவம் தத்துவம் அல்ல
மேலும், அனுபவத்தில் சொல்கிறேன். நல்ல நண்பர்களை மட்டும் இழந்து விடாதீர்கள். எனக்கு நண்பர்களே கிடையாது. 23 வருடங்களாய் வேலையை தவிர எதையும் யோசித்ததில்லை. இன்று நண்பர்களுடன் ஆனந்தமாய் இருப்பவர்களை பார்த்தால் பொறாமையாய் உள்ளது... எங்கு போய் நட்பை தேடுவேன் எனவும், கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வது ஒரு வகை. வாய்ப்பு கிடைக்கா விட்டாலும் எங்கெங்கோ அலைந்து திரிந்து , நுனியளவு ஊசிக் கயிற்றில் தொங்கி , ஏதோ தூசி போல தெரியும் வாய்ப்பை கெட்டியாகப் பிடித்துக் கொண்டு முன்னேறிக் காட்டுவதுதான் உலகமே கைதட்டும் சாதனை எனவும், பணம் கையில் வந்தால்தான் நிஜம். அதற்கு முன் கனவு காணாதீர்கள். செலவுகளை திட்டமிட வேண்டாம். இது எனது அனுபவம். தத்துவம் அல்ல எனக் கூறியது குறிப்பிடத்தக்கது.
இளைஞர்களின் விருப்பமான இயக்குநர்
செல்வராகவன் இயக்கத்தில் வெளியான துள்ளுவதோ இளமை, 7ஜி ரெயின்போ காலனி, காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன, ஆயிரத்தில் ஒருவன் உள்ளிட்ட திரைப்படங்கள் இப்போதும் பெரும்பாலான மக்களின் ஃபேவரைட் லிஸ்டில் உள்ளது குறிப்பிடத்தக்கது.