ரூ. 100 கோடி மான நஷ்ட வழக்கு..அமைச்சருக்கு எதிராக குடும்பத்துடன் வாக்குமூலத்தை பதிவு செய்த நாகார்ஜூனா
Oct 08, 2024, 10:00 PM IST
மனைவி அமலா, மகன் நாக சைதன்யாவுடன் இணைந்து ஹைதராபாத் நாம்பள்ளி நீதிமன்றத்துக்கு வந்த நாகசைதன்யா, அமைச்சர் சுரேகாவுக்கு எதிரான ரூ. 100 கோடி மான நஷ்ட வழக்கில் வாக்குமூலத்தை பதிவு செய்தார்.
தனது மகன் நாக சைதன்யா மற்றும் நடிகை சமந்தா குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததற்காக தெலங்கானா அமைச்சர் கோண்டா சுரேகாவுக்கு எதிராக ரூ. 100 கோடி கிரிமினல் அவதூறு வழக்கில் தனது வாக்குமூலத்தை பதிவு செய்ய நடிகர் நாகார்ஜுனா ஹைதராபாத் உள்ள நாம்பள்ளி நீதிமன்றத்தில் ஆஜரானார்.
என்ன வழக்கு?
பாரதிய நியாய சன்ஹிதா (பிஎன்எஸ்) பிரிவு 356இன் கீழ் சுரேகா மீது நாகார்ஜுனா புகார் அளித்துள்ளார். நட்சத்திர ஜோடிகளான சமந்தா மற்றும் நாகா சைதன்யா கடந்த 2021இல் விவாகரத்து பெற்றனர். இதற்கு காரணம் பிஆர்எஸ் மூத்த தலைவர் கே.டி. ராமாராவ் தான் காரணம் என்று ஆளும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அமைச்சர் சுரேகா பேசியிருந்தார். கடந்த வாரம் அவர் வெளிப்படுத்திய இந்த பேச்சு சர்ச்சையை கிளப்பியது.
அத்துடன், அவரது பேச்சுக்கு எதிராக தெலுங்கு திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் பலரும் தங்களது கண்டனங்களை பதிவு செய்தனர். நாக சைதன்யா, சமந்தா ஆகியோர் அமைச்சருக்கு கண்டனம் தெரிவித்ததோடு, தங்களது பிரிவு பரஸ்பரம் நடந்தது எனவும், தனிப்பட்ட முடிவு எனவும் தெரிவித்தனர்.
நாகார்ஜூனா புகார்
தெலங்கானா வனத்துறை அமைச்சரான சுரேகாவுக்கு எதிராக புகார் அளித்த நாகார்ஜூனா,"அமைச்சரின் பேச்சு எனது குடும்பத்தின் நற்பெயருக்கு களங்கம் விளைவித்திருப்பதாக" கூறியிருந்தார்.
அதேபோல், பாரதிய ராஷ்ட்ரிய சமிதி கட்சியின் செயல் தலைவரான கே.டி. ராமாராவ், "சுரேகா தனது இமேஜுக்கு களங்கம் விளைவிக்கும் விதமாக கருத்து தெரிவித்ததாகவும், அமைச்சர் தனது பேச்சை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று" நோட்டீஸ் அனுப்பினார்.
முன்னாள் அமைச்சர் மீது குற்றச்சாட்டு
சமந்தா - நாக சைதன்யா விவாகரத்து காரணமாக இருந்தது முன்னாள் அமைச்சரும், பாரதிய ராஷ்ட்ரா சமீதி கட்சியின் செயல் தலைவருமான கே.டி. ராமா ராவ் தான் என்று தெலுங்கானா மாநில வனத்துறை மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சராக இருந்து வரும் கொண்டா சுரேகா பேசியுள்ளார்.
அவர் அளித்த பேட்டியில், "நடிகை சமந்தா, நாக சைதன்யாவை பிரிந்து சென்றதற்கு காரணமே முன்னாள் அமைச்சர் கேடிஆர் தான். அந்த அமைச்சரால் சமந்தா மட்டுமல்ல, பல நடிகைகளும் சினிமா கலைஞர்களும் சினிமாவை விட்டு விலகியுள்ளனர்.
அப்போது அமைச்சராக இருந்த அவர் நடிகைகளின் போன்களை டேப் செய்து அவர்களின் பலவீனங்களை கண்டுபிடித்து பிளாக்மெயில் செய்வார்.
நடிகைகளை போதைக்கு அடிமையாக்கி பிறகு இப்படி செய்தார். இது எல்லோருக்கும் தெரியும் சமந்தா, நாக சைதன்யா, அவரது குடும்பத்தினரும், இப்படி ஒரு சம்பவம் நடந்ததை அறிவார்கள்" என்று பேசி அதிர்ச்சியை கிளப்பினார்.
அமைச்சர் சுரேகா யூ டர்ன்
இந்த விவகாரம் சர்ச்சையை கிளப்பிய நிலையில், அமைச்சர் சுரேகா தனது கருத்துக்கு மன்னிப்பு கோரியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்க பதிவில், "ஒரு தலைவர் பெண்களை எப்படி இழிவுபடுத்துகிறார் என்பதை சுட்டிக்காட்டுவது மட்டுமே எனது நோக்கம். தவிர, உங்கள் உணர்வுகளை புண்படுத்த நோக்கம் அல்ல சமந்தா.
நீங்கள் அதிவேகமாக வளர்ந்த விதத்தை கண்டு வியக்கிறேன். எனது வார்த்தைகளால் நீங்களோ அல்லது உங்கள் ரசிகர்களோ புண்பட்டிருந்தால், நான் நிபந்தனையின்றி அவற்றை திரும்பப் பெறுகிறேன். தயவு செஞ்சு வேற மாதிரி எடுத்துக்காதீங்க" என்று குறிப்பிட்டுள்ளார்.
டாபிக்ஸ்