தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  உண்மையான சம்பவங்களை வைத்து வெளியான படங்கள்

உண்மையான சம்பவங்களை வைத்து வெளியான படங்கள்

Aarth V HT Tamil

Feb 21, 2022, 11:30 AM IST

google News
கற்பனை கதைகளுக்கு நடுவே, உண்மை சம்பவத்தை மக்களிடம் கொண்டு சென்று சேர்த்து பல இயக்குநர்கள் வெற்றிக் கண்டுள்ளனர்.
கற்பனை கதைகளுக்கு நடுவே, உண்மை சம்பவத்தை மக்களிடம் கொண்டு சென்று சேர்த்து பல இயக்குநர்கள் வெற்றிக் கண்டுள்ளனர்.

கற்பனை கதைகளுக்கு நடுவே, உண்மை சம்பவத்தை மக்களிடம் கொண்டு சென்று சேர்த்து பல இயக்குநர்கள் வெற்றிக் கண்டுள்ளனர்.

உண்மையான நிகழ்வுகளை மக்களிடம் கொண்டு சென்று காண்பிக்க வேண்டும் என பல இயக்குநர்கள் போராடி வருகின்றனர். அவர்கள் போராடி எடுக்கும் படங்களும் மக்களிடம் சிறப்பான வரவேற்பை பெற்றுவருகிறது. அந்தவகையில் கோலிவுட்டில் உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து 2000 ஆம் ஆண்டிற்கு பிறகு வெளியான சிறந்த படங்கள் குறித்து இந்த தொகுப்பில் காண்போம்...

காதல்

காதல் இந்த வார்த்தை யாருக்கு தான் பிடிக்காது. நம் மேல் யாராவது அன்பு வைக்க மாட்டார்களா என மனிதர்களாகப் பிறந்த ஒவ்வொருக்கும் தோன்றும். இப்படி அடிப்படையிலேயே மனிதர்களிடம் காதல் மீது அதிக ஈர்ப்பு உண்டு. அதனால் தான் தமிழ் சினிமாவில் காதல் சார்ந்த படங்கள் வெற்றியடைகிறது. அந்தவகையில் 2002 ஆம் ஆண்டு வெளியான காதல் படம், இரண்டு பேருக்கு இடையே இருக்கும் காதலைத் தாண்டி சாதி பிரச்சனை குறித்து விவரித்துள்ளது.

பள்ளி மாணவி, பைக் மெக்கனிக் இருவரும் காதலிக்கின்றனர். இருவரும் வெவ்வேறு சாதி என்பதால் திருமணம் செய்து வைக்க மாட்டார்கள் என எண்ணி வீட்டை விட்டு வெளியேறுகின்றனர். அவர்களைத் தேடிச் சென்று சாதியைக் காரணம் காண்பித்து இருவரையும் அடித்து, பெண்ணின் குடும்பத்தினர் துன்புறுத்துகின்றனர். பிறகு நாயகன் பரத் பைத்தியமாக மாறும் காட்சியை இயக்குநர் பாலாஜி சக்திவேல் மிகவும் தத்துறுப்பமாக இயக்கி பார்வையாளர்கள் கண்ணைக் குலமாக்கினார்.

கல்லூரி

தர்மபுரி பஸ் எரிப்பு சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு வெளியான திரைப்படம் கல்லூரி. அரசியலில் தங்கள் தரப்பு எதிர்ப்பைத் தெரிவிக்கப் பயன்படுத்தப்பட்ட ஒரு செயல் எப்படி பல கனவுகளோடு கல்லூரிக்குப் படிக்க சென்ற கல்லூரி மாணவர்களின் கனவை கலைத்தது என்பதே படத்தின் மையக்கரு. அரசு கலைக் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள், சுற்றுலா பயணத்திற்காகச் சென்ற இடத்தில் நேர்ந்த கோர சம்பவமே இப்படம். இந்தப்படம் வெளியான சமயத்தில் மக்கள் மத்தியில் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது. சாதாரண மக்களையும் தாண்டி இந்தப் படத்தால் நிறைய சட்ட மாற்றங்களை ஏற்பட்டன.

நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்

ஒளிப்பதிவாளர் பிரேம்குமார் வாழ்வில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து வெளியான படம், நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம். விஜய் சேதுபதி நாயகனாக நடித்த இப்படத்தை பாலாஜி தரணிதரன் இயக்கியுள்ளார். திருமணத்திற்கு இரண்டு நாள்களுக்கு முன்பாக நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடியபோது தலையில் தவறுதலாக அடிப்பட்டு சமீபத்தில் நடந்த விஷயங்களை விஜய் சேதுபதி மறந்துவிடுகிறார்.

இதற்கு பிறகு நண்பர்கள் எவ்வாறு இணைந்து அவர் காதலித்த பெண்ணுடன் அவரை திருமணம் செய்து வைக்கின்றனர் என்பதை நகைச்சுவை கலந்த பாணியில் இயக்குநர் எடுத்துள்ளார். இப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற நிலையில் ஐந்து மொழிகளில் ரீமேக்கானது குறிப்பிடத்தக்கது.

வழக்கு எண் 18/9

காதல், கல்லூரி போன்ற திரைப்படங்களைத் தொடர்ந்து பாலாஜி சக்திவேல் கையில் எடுத்த மற்றுமொரு உண்மை சம்பவம் வழக்கு எண் 18/9 . நாம் அன்றாட வாழ்க்கையில் கடந்து செல்லும் ஒரு செய்தி அதன் பின்னணியில் இருக்கும் உண்மையை உரக்கச் சொன்ன படம். தெருமுனையில் இட்லி கடையில் வேலை செய்யும் ஒரு பையன் தான் செய்யாத குற்றத்திற்காக எப்படி தண்டனைக்கு ஆளாக்கப்படுகிறான்,பணம் இருந்தால், தான் செய்த தப்பிலிருந்தும் விடுபடலாம் என்ற ஒற்றை வரி கதையை மிக ஆழமாக உண்மைத் தன்மை மாறாது சொன்ன ஒரு திரைக் காவியம். சட்டம் ஏழைக்கு ஒரு மாதிரியும் பணக்காரனுக்கு ஒரு மாதிரியான தீர்ப்பை தான் வழங்குகிறது என சவுக்கடி கொடுத்த ஒரு படம். வணிக ரீதியாகவும், விமர்சக ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்ற ஒரு திரைப்படம் வழக்கு எண் 18/9.

பரதேசி

இயற்கைக்கு பெயர்போன பாலாவின் இயக்கத்தில் "எரியும் பனிக்காடு" என்ற நாவலைத் தழுவி வெளிவந்த உண்மை கதை பரதேசி. தேயிலைத் தோட்ட வேலைகளுக்காக மக்கள் கொத்துக்கொத்தாக அழைத்து செல்லப்படுகின்றனர். அப்போதைய ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில் கொத்தடிமைகளாகக் கொண்டு செல்லப்பட்ட மக்களைப் பற்றியும், அந்த மக்கள் பட்ட துயரத்தை பற்றியும் அம்மக்களின் வாழ்க்கை முறையைப் பற்றியும் மிக ஆழமாக சொன்ன படம்.

தாம் செய்த வேலைக்குக் கூலியை கூட பெறாவிட்டாலும் பரவாயில்லை அங்கிருந்து எப்படியாவது விடுபடவேண்டும் என்ற மக்களின் மனநிலையைப் பாலா இப்படத்தின் மூலம் பதிவு செய்த விதம் மனதை உருக்கும். மக்கள் மத்தியிலும் விமர்சகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்று தேசிய விருதுகளை வென்று குவித்த திரைப்படம். அத்துடன் படத்தில் நாயகனாக நடித்த அதர்வாவின் திரைப்பயணத்தில் பரதேசி படம் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது.

விசாரணை

பொதுவாகத் திரைப்படங்களில் காவலர் என்றாலே நல்லவராகவும்,நேர்மையானவராகவும் பார்த்துப் பழகிய நமது ரசிகர்களுக்கு இந்தப் படம் ஒரு பெரும் அதிருப்தி. லாக்கப் என்ற நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட இத்திரைப்படம் பேசும் களம் 'காவலர்களின் வன்முறை'. ஆந்திராவில் வேலை பார்க்கக்கூடிய தமிழர்கள் சந்தேகத்தின் அடிப்படையில் இழுத்துச் செல்லப்பட்டு, குற்றவாளிகளாக மாற்றப்படுகின்றன.

இந்தப் பிடியிலிருந்து எப்படி, அவர்கள் தப்பிக்கிறார்கள் என்ற ஒற்றைக் கேள்வியைக் கொண்டு நகரும் திரைக்கதை என காட்சிக்குக் காட்சி கொடூரம் நிறைந்தவையாக இருக்கும். வசூல் ரீதியாகப் பெரிதாக பணம் பார்க்காவிட்டாலும் விமர்சன ரீதியாக பலராலும் பாராட்டப்பட்டது விசாரணை. வெற்றி மாறனின் ஆக சிறந்த திரைப்பட பட்டியலில் இப்படமும் ஒன்று. தேசிய விருது வென்றது மட்டுமில்லாமல், ஆஸ்கர் வரை சென்ற ஒரு சில படங்களில் விசாரணையும் ஒன்றாகும்.

பிச்சைக்காரன்

இயக்குநர் சசி இயக்கத்தில் நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் 2016 ஆம் ஆண்டு வெளியான படம் பிச்சைக்காரன். 900 கோடிக்கு வரிசாக இருக்கும் விஜய் ஆண்டனி கோமாவில் இருக்கும் தனது தாய்யை நினைத்து வருந்திருகிறார். அவரை குணமாக்க ஒரு சாமியாரின் அறிவுறுத்தல் பேரில் 48 நாள்களுக்கு தன்னை பணக்காரன் என்பதை அடையாளம் செய்யாமல் பிச்சைக்காரனாக வாழ வேண்டும் என்பார். அவர் அதை ஏற்று, அதில் வரும் சவால்களை சந்தித்து தனது அம்மா உயிரை காப்பாற்றுவதே படமாகும்.

மேற்கு தொடர்சி மலை

ஏறத்தாழ 80 விழுக்காடு புதுமுக நடிகர்களை வைத்து 2016 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம், ‘மேற்கு தொடர்ச்சி மலை’. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் வசிக்கும் அன்றாட மக்கள் தன் வாழ்வாதாரத்திற்காகப் படும் துயரத்தையும், உழைத்து காணிநிலம் ஆவது வாங்க வேண்டுமென்ற ஏக்கத்தையும் கண்முன் காட்சிப்படுத்தி இருக்கிறார் இயக்குநர் லெனின் பாரதி. இப்படத்தின் கதை கலத்திற்கு ஏற்றவாறு ஒளிப்பதிவும் மிக ஈரமாகவே அமைந்திருக்கும்.

தீரன் அதிகாரம் ஒன்று

1995 முதல் 2005 ஆம் ஆண்டு வரை நடந்த உண்மையான சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவான படம் 'தீரன் அதிகாரம் ஒன்று'. நெடுஞ்சாலைப் பகுதியில் இருக்கும் வீடுகளை குறி வைத்து மக்களை தாக்கி கொள்ளையடிக்கும் கும்பலை காவலர்கள் எப்படி பிடிக்கின்றனர் என்பதே கதை. தமிழ்நாட்டையே உலுக்கிய இதை வட இந்தியாவைச் சேர்ந்தவர்கள் செய்கின்றனர். பிறகு அவர்களின் தலைவனான ஓமா பவேரியாவை பிடித்து சிறையில் அடைப்பத்தை விறுவிறுப்புக்குப் பஞ்சமில்லாமல் காண்பித்துள்ளார் ஹெச்.வினோத். காதல், காவல் துறையினர் குறித்து எடுத்த சினிமாவில் தீரன் அதிகாரம் ஒன்று படத்திற்கு என்றுமே தனி இடம் ஒன்று.

யூ டர்ன்

மனிதர்களாகப் பிறந்த பலரும் விதிமீறல்கள் செய்வது இயல்பான ஒன்று. ஆனால் நாம் செய்யும் விதிமீறல்களால் ஏதேனும் உயிர் சேதம் ஏற்பட்டால் அது இயல்பான ஒன்றாக எடுத்துக் கொண்டு நாம் எளிதாக கடந்து செல்ல முடியாது. அதுபோன்ற ஒரு சம்பவத்தை அடிப்படையாக வைத்து இயக்குநர் பவன் குமார் இயக்கியுள்ள படம் தான் யூ டர்ன்.

மேம்பாலத்தில் சாலைக்கு நடுவே இருக்கும் தடுப்புகளை இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள், துணித பயணம் மேற்கொள்வதற்காகத் தடுப்புகளை அகற்றி பயணிக்கின்றனர். இதனால் பூமிகாவும் அவரது மகளும் உயிரிழக்கின்றனர். யார் அந்த தடுப்புகளை அகற்ற கிறார் என்பதை ஆவியாக வந்து பூமிகா கண்டுபிடிக்கிறார். தடுப்பு அகற்றும் அனைவரையும் பழி வாங்க, இறுதியாக தனது கணவர் தான் உயிரிழப்பிற்குக் காரணம் என்று தெரிய வருகிறது. அதற்குப் பிறகு பூமிகா என்ன செய்கிறார் என்பதே படத்தின் கதை. தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் வெளியான இப்படம் வசூல் ரீதியாக வரவேற்பு பெறவில்லை என்றாலும் விமர்சன ரீதியாகப் பாராட்டுகளைப் பெற்றது.

அசுரன்

வெற்றிமாறன், தனுஷ் கூட்டணில் உருவான நான்காவது திரைப்படம் அசுரன். "வெக்கை" நாவலில் சொல்லப்பட்ட உண்மை கதையை தழுவி எடுக்கப்பட்ட படம் அசுரன். தன் பிள்ளைகளுக்காகத் தன்மானத்தையும் விட்டுக் கொடுக்கும் தந்தை தனுஷ் தன் மூத்த மகனை இழக்க நேரிடுகிறது. மகனை இழந்தும் தன்னுடைய அப்பா எதுவும் செய்யவில்லையே என தன்னுடைய அண்ணனின் மரணத்திற்காகப் பழிவாங்கத் துடிக்கும் இளைய மகனின் கோபம் என காட்சிக்கு காட்சி பரபரப்பான கதைக்களம்.

இதற்கு இடையில் பஞ்சமி நில மீட்பு, சாதிய படிநிலையை எதிர்ப்பதை விட கடப்பதே மேலென நினைக்கும் சிவசாமி என சாதி ஒழிப்பைப் பற்றி மிக ரத்தினச் சுருக்கமாக சொன்ன ஒரு படம். சிறந்த நடிகர் மற்றும் சிறந்த திரைப்படம் என இரண்டு தேசிய விருதுகளை வென்ற இத்திரைப்படம் தமிழில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றதோடு, தெலுங்கில் வெங்கடேஷ் நடிப்பில் "நாரப்பா" என்ற பெயரில் ரீமேக்காகி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

சூரரைப் போற்று

சாமானியன் பறக்க நினைப்பது மிகவும் கடினமான பயணமாகும். ஆனால் ஒருவன் மொத்த சாமானியர்களையும் பறக்க வைக்க விரும்புகிறான். இதனைக் களமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட படைப்புதான் சூரரைப் போற்று. ஏர் டெக்கான் நிறுவனத்தின் அதிபரான ஜி.ஆர். கோபிநாத் வாழ்க்கையை மக்களுக்கு வெளிக்காட்டிய படம் இது. சுதா கொங்கரா இயக்கத்தில், கதையின் நாகனாக நடிகர் சூர்யா தனக்கே உரித்தான அருமையான நடிப்பில் தன்னை மக்களிடத்தில் சரியாக நிலைநிறுத்தியிருப்பார்.

ஒரு கிராமத்தில் பள்ளி ஆசிரியருக்கு மகனாக பிறந்த ஒருவர், ராணுவ விமானப்படையில் பைலட் ஆக பணிபுரிகிறார். பின்னர் தனது தந்தைக்கு உடல்நிலை மோசமாகவே, அவரை பார்க்க விமானத்தில் செல்ல முயற்சி செய்கிறார். போதிய பணம் இல்லாததால் விமானநிலையத்திலிருந்து வெளியேற்றப்படுகிறார். விமான சேவை பணக்கார மக்களுக்காக உருவாக்கப்பட்டதா? என்ற கேள்வி இவருக்கு உருவாகிறது. 

பின்னர் எளிய மக்களும் இதில் பறக்க வேண்டும் என்று போராடி தனக்கென ஒரு விமான சேவையை உருவாக்க நினைக்கிறார். பல கடுமையான பயணங்கள் சென்று அவர் சாதித்தாரா? என்பதைக் கொண்டு இப்படம் நிறைவடைகிறது. பல விருதுகளை வென்ற இத்திரைப்படம், ஹிந்தியில் ரீமேக்காகிறது.

ஜெய் பீம்

2020 ஆம் ஆண்டு பெரும் சர்ச்சைகளுக்கு இடையே வெளியான திரைப்படம் ஜெய் பீம். 1993இல் நடந்த நிஜ வாழ்க்கை சம்பவத்தை இயக்குநர் ஞானவேல் நம் கண்முன் கொண்டு வந்திருக்கிறார். இருளர் சாதியை சேர்ந்த ராசா கண்ணு என்பவரைக் காவலர்கள், லாக்-அப் கொலை செய்கின்றனர். கணவர் உயிரிழப்பிற்கு வழக்கறிஞர் சத்குருவை நாடுகிறார். அவர் உண்மைக்கு புறம்பான விஷயங்களை கண்டுபிடித்து நீதிமன்றத்தில் எவ்வாறு நிரூபிக்கிறார் என்பதே படத்தின் கதையாகும்.

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.
அடுத்த செய்தி