Mansoor Ali Khan: த்ரிஷா விவகாரத்தில் நடிகர் மன்சூருக்கு ரூ.1 லட்சம் அபராதம்..தடைவிதிக்க கோர்ட் மறுப்பு!
Jan 31, 2024, 02:26 PM IST
நடிகை த்ரிஷாவை விமர்சித்த விவகாரத்தில் நடிகர் மன்சூர் அலிகானுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டிருந்தது.
நடிகைகள் த்ரிஷா, குஷ்பூ ஆகியோருக்கு எதிராக வழக்கு தொடர அனுமதி கோரிய நடிகர் மன்சூர் அலிகானுக்கு 1 லட்சம் ரூபாய் அபராதம் விதித்த உத்தரவிற்கு தடை விதிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டது.
நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட நடிகர் மன்சூர் அலிகான் நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து ஒன்றை தெரிவித்திருந்தார். அந்த வீடியோவில், "தற்போது உள்ள இயக்குநர்கள் கதாநாயகிகளிடம் நெருங்கி நடிக்க விடுவதில்லை. லியோ படத்தில் த்ரிஷாவை நான் கண்ணால்க்கூட பார்க்கவில்லை. அவருடன் ஒரு பெட்ரூம் சீன் இருக்கும் என்று நினைத்தேன். த்ரிஷாவை கற்பழிப்பது போன்ற காட்சி இல்லை. நடிகை த்ரிஷாவை, பழைய படங்களில் குஷ்பு, ரோஜாவை கட்டிலில் தூக்கிப்போட்டது போல, தூக்கிப்போட வாய்ப்பு கிடைக்கவில்லை." என்று பேசியிருந்தார்.
மன்சூர் அலிகானின் இந்த பேச்சுக்கு நடிகை த்ரிஷா, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்தனர். திரைத் துறையில் இருந்து மட்டும் அல்லாமல் பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்களும் எதிர்ப்புகளும் எழுந்தன. பிரபலங்கள் பலரும் மன்சூர் அலிகானுக்கு கண்டனம் தெரிவித்த நிலையில், நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் உள்ளிட்டவை கண்டனம் தெரிவித்து அறிக்கைகள் வெளியிட்டன.
இதையடுத்து மன்சூர் அலிகான் மீது சென்னை ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் சர்ச்சை பேச்சு குறித்து விசாரணைக்கு நேரில் ஆஜராகக்கோரி மன்சூர் அலிகானுக்கு போலீசார் சம்மன் அனுப்பியதை அடுத்து அவர் நேரில் ஆஜராகி விளக்கம் கொடுத்தார்.
இதனிடையே, இந்த விவகாரத்தில் தான் பேசிய முழு வீடியோவையும் பார்க்காமல் தனது நற்பெயருக்கு களங்கம் கற்பித்ததாக நடிகர் மன்சூர் அலிகான் குற்றம்சாட்டினார். இது தொடர்பாக கருத்துத் தெரிவித்த நடிகைகள் த்ரிஷா, குஷ்பூ, நடிகர் சிரஞ்சீவி ஆகியோருக்கு எதிராக தலா ஒரு கோடி ரூபாய் மான நஷ்டஈடு வழக்கு தொடர அனுமதி கேட்டு மன்சூர் அலிகான் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி, நீதிமன்ற நேரத்தை வீணடிக்கும் நோக்கத்திலும், விளம்பர நோக்கிலும் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது என கருத்துத் தெரிவித்தார். இதையடுத்து மன்சூர் அலிகானின் மனுவை தள்ளுபடி செய்ததுடன் அவருக்கு 1 லட்ச ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். அபராதத் தொகையை இரண்டு வாரங்களுக்குள் சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கு செலுத்தி, அதுகுறித்து தெரிவிக்க வேண்டுமெனவும் மன்சூர் அலிகானுக்கு நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
இந்த நிலையில், தனி நீதிபதி பிறப்பித்த இந்த உத்தரவை எதிர்த்து மன்சூர் அலிகான் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு இன்று (ஜன.31) சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், அபராதம் செலுத்துவதாக தனி நீதிபதி முன் ஒப்புக்கொண்டு, கால அவகாசம் பெற்றுள்ள நிலையில் தற்போது அதை எதிர்த்து எப்படி மேல்முறையீடு வழக்கு தொடர முடியும்? என கேள்வி எழுப்பியதுடன் ஏற்கெனவே தனி நீதிபதி பிறப்பித்திருந்த உத்தரவுக்கு தடைவிதிக்க மறுத்துவிட்டனர்.
மேலும், உத்தரவை திரும்பப் பெறக்கோரி தனி நீதிபதி முன்பாக மன்சூர் அலிகான் வலியுறுத்தலாம். அல்லது அபராதத்தைக் கட்ட முடியுமா, முடியாதா? என்று தெரிவிக்கலாம்” என்று மன்சூர் அலிகான் தரப்புக்கு அறிவுறுத்திய நீதிபதிகள், வழக்கு விசாரணையை பிப்ரவரி 7ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.
டாபிக்ஸ்