Manjummel Boys: ‘மகிழ்ச்சி..’ - மஞ்சும்மல் பாய்ஸ் குழுவை வீட்டிற்கு அழைத்து பாராட்டிய ரஜினிகாந்த்! - வைரல் போட்டோஸ்!
Mar 30, 2024, 12:16 PM IST
இப்படத்தினைக் கொண்டாடுபவர்கள் நம்மூர் அரைவேக்காடுகள். மலையாள சினிமா இக்கால சமூதாயத்தை கெடுக்கிறது. அடுத்து வரும் தலைமுறைகளை ஜாலியாக இருப்பது என்றால், அது குடியும் கும்மாலமும்மாக இருப்பது தான் என போதிக்கிறது. - ஜெயமோகன்!
மலையாளத்தில் இயக்குநர் சிதம்பரம் எஸ் பொடுவல் இயக்கத்தில், கடந்த பிப்ரவரி 22ம் தேதி வெளியான திரைப்படம் மஞ்சும்மல் பாய்ஸ். இந்தப்படத்திற்கு கேரளா மட்டுமில்லாமல் தமிழகத்திலும் அமோக வரவேற்பு கிடைத்தது.
இந்தப்படம் உலக அளவில் 200 கோடிக்கும் மேல் வசூல் செய்திருப்பதாக சொல்லப்படுகிறது. இந்தக்குழுவை முன்னதாக கமல்ஹாசன், சிலம்பரசன் ஆகியோர் சந்தித்து பாராட்டிய நிலையில், தற்போது நடிகர் ரஜினிகாந்தும் மஞ்சும்மல் பாய்ஸ் குழுவை அழைத்து தன்னுடைய பாராட்டை தெரிவித்து இருக்கிறார்.
முன்னதாக, இந்தப்படத்தை பார்த்த பிரபலங்கள் பலர் படத்தை கொண்டாடிய நிலையில், பிரபல எழுத்தாளரான ஜெயமோகன் மஞ்சும்மல் படத்தை கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.
அந்த விமர்சனத்தில், “ தென்னகம் முழுக்க உள்ள சுற்றுலா இடங்களுக்கு வரும் கேரளத்துப் பொறுக்கிகளிடம் அநாகரீக செயல் இருக்கிறது. இப்படத்தில் வருபவர்கள் குடிப்பொறுக்கிகள். இவர்கள் குடித்து வீசிய பாட்டில்களால் யானைகளின் கால்கள் அழுகி இறக்கின்றன.
இப்படத்தினைக் கொண்டாடுபவர்கள் நம்மூர் அரைவேக்காடுகள். மலையாள சினிமா இக்கால சமூதாயத்தை கெடுக்கிறது. அடுத்து வரும் தலைமுறைகளை ஜாலியாக இருப்பது என்றால், அது குடியும் கும்மாலமும்மாக இருப்பது தான் என போதிக்கிறது.
கேரளத்தின் நலம் நாடும் ஓர் அரசு இருந்தால் "மஞ்சும்மல் பாய்ஸ்" படத்தை எடுத்த படக் குழுவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், தமிழில் மூடர்கூடம் திரைப்படத்தை இயக்கி கவனம் பெற்ற இயக்குநர் நவீன் ஜெயமோகனை தன்னுடைய ட்விட்டர் தளத்தில் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.
இது குறித்து அவர் வெளியிட்டு இருந்த பதிவில், “ தமிழ் பொறுக்கிஸ்' என்று சொன்ன அந்த சங்கியும், 'மலையாளப் பொறுக்கிகள்' என்று சொல்லும் இந்த சங்கியும், ஒரே சாக்கடையில் ஊறும் இரண்டு தவளைகளே.” என்று குறிப்பிட்டு இருந்தார்.
இந்த நிலையில் விழா மேடை ஒன்றில் இந்த விவகாரம் குறித்து பேசிய இயக்குநர் பாக்யராஜ், “ மஞ்சும்மல்பாய்ஸ் படத்தை எழுத்தாளர் ஜெயமோகன் மிகவும் தரம் தாழ்ந்து விமர்சித்து இருந்தது வருத்தத்தை தந்தது.
காரணம் என்னவென்றால், அவர் படத்தைப் பற்றி பேசி வார்த்தையை விட்டிருந்தால் பரவாயில்லை, அவர் வேற மாதிரியான வார்த்தைகளை விட்டுவிட்டார். ஆம், படத்தை விட்டுவிட்டு கேரள மக்களைப் பற்றி அவர்கள் எப்படி இருப்பார்கள் என்பது குறித்து எல்லாம் விமர்சனம் செய்து விட்டார். அது தமிழனுடைய நாகரிகமே கிடையாது.
அது நம்முடைய பண்பாட்டில் கிடையாது. நாம் எல்லோரையும் பாராட்டி தான் பேசியிருக்கிறோமே தவிர, யாரையும் அவ்வளவு இறங்கி விமர்சனம் செய்தது கிடையாது. ஒரு எழுத்தாளர் அப்படி ஒரு விமர்சனத்தை முன் வைத்தார் என்பது மிகவும் கஷ்டமாக இருந்தது.
இதை நான் அப்போதே சொல்லி இருப்பேன்; ஆனால் அப்போது நான் இதைப் பற்றி பேசி இருந்தால், எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல ஆகியிருக்கும். அதனால்தான் சூடெல்லாம் அடங்கட்டும் என்று சொல்லி இப்போது பேசுகிறேன். நான் இதை எனக்காக பேசவில்லை.
இதைப் பற்றி யாருமே தமிழ்நாட்டில் கேட்கவில்லையே என்று கேரள மக்கள் நினைத்து விடக்கூடாது என்பதற்காகத்தான் இதை இப்போது பேசுகிறேன்.
நான் பாலக்காடு மாதவன் படத்தை எடுக்கும் பொழுது மக்கள் அதனை மிகவும் வரவேற்றார்கள். சின்ன வீடு திரைப்படத்தில் கேரள பெண்ணின் பின்னால் டாவடித்து செல்வது போல கதாபாத்திரம் அமைத்து இருந்தேன். அதற்கு விமர்சனங்களும் வந்தன. ஆகையால் நீங்கள் படத்தை விமர்சனம் செய்யுங்கள்” என்று பேசினார்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
டாபிக்ஸ்